கொரோனா மரண படுக்கையில் காதலன் இருக்கும் நிலையில், அவருக்குப் புத்துயிர் தரும் வகையில் யோசித்த காதலி, மருத்துவமனையிலேயே அவரை திருமணம் செய்து கொண்ட சம்பவம், உலகையே திரும்பிப் பார்க்க வைத்த காதல் திருமணமாக வைரலாகி வருகிறது. 

உலகம் முழுவதும் பரவிக்கிடக்கும் கொரோனா என்னும் பெருந் தொற்று, அனைத்து தரப்பு மக்களையும் தாக்கி வருகிறது. இதனால், நாள் தோறும் ஏற்படும் பாதிப்புகளும், அதனால் ஏற்படும் உயிர் இழப்புகளும் இதுவரை கட்டுப்படுத்த முடியாமல் ஒட்டு மொத்த உலக நாடுகளும் திணறி வருகின்றன. அப்படியான கொரோனா வைரஸ் தாக்கம் உலக வல்லரசு நாடானா அமெரிக்காவில் மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றன.

இப்படிப்பட்ட சூழ்நிலைகளுக்கு முன்பாகவே, அமெரிக்காவின் சான் ஆண்டனியோ பகுதியைச் சேர்ந்த கார்லோஸ் என்பவர், அதே பகுதியைச் சேர்ந்த கிரேஸ் என்ற இளம் பெண்ணை காதலித்து வந்தார். இருவரும் காதலர்களா வலம் வந்த நிலையில் தான், கொரோனா என்னும் பெருந்தொற்று, அமெரிக்காவை ஆட்டி படைக்கத் தொடங்கியது.

இந்த கொரோனா சூழலுக்கு மத்தியில் இந்த காதலர்கள் திருமணம் செய்துகொள்ளவும் முடிவு செய்திருந்ததாகக் கூறப்பட்டது. ஆனால், அதற்குள் காதலன் கார்லோஸையும் கொரோனா தாக்கி உள்ளது.

கொரோனா தாக்கம் காரணமாக, காதலன் கார்லோஸ் அங்குள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு, அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால், அவர் அனுமதிக்கப்பட்டது முதல் அவரது உடல் நிலை நாளுக்கு நாள் மிகவும் மோசமடைந்துகொண்டே வந்தது.
 
இதனால், கலக்கமடைந்த காதலி கிரேஸ், மாற்றி யோசித்து உள்ளார். இதனையடுத்து, தனது யோசனையை மருத்துவமனையில் உள்ள மருத்துவர்களைச் சந்தித்துக் கூறியிருக்கிறார். அதற்கு, மருத்துவர்களும், மருத்துவமனை நிர்வாகமும் சம்மதம் தெரிவித்தனர்.

அதன்படி, மருத்துவமனையிலேயே காதலன் கார்லோஸ் - காதலி கிரேஸ் ஆகியோரின் திருமணத்தை மருத்துவமனையிலேயே நடத்த முடிவு செய்யப்பட்டது.

அதாவது, “மருத்துவமனையில் திருமணம் நடக்கும் பட்சத்தில், காதலனின் உடல் நிலையில் இயல்பாகவே முன்னேற்றம் காணும் நோக்கம் தான், இந்த திருமணத்திற்கான யோசனையை இருந்தது, இதனையடுத்து, திருமணம் தொடர்பான திருமண ஏற்பாட்டை மருத்துவமனையைச் சேர்ந்த நிர்வாகி ஒருவர் செய்து வந்தார். 

திட்டமிட்டபடி, “கார்லோஸ் - கிரேஸ்” ஆகியோரின் திருமண தேதி நெருங்க நெருங்க கார்லோஸின் உடல் நிலையிலும் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு உள்ளது. 
இந்த திருமணமானது, மருத்துவமனையிலேயே நடைபெறுவதால் அதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் மருத்துவமனை பணியாளர்கள் சிறப்பாகவே செய்து வந்தனர். அதே போல், மணப்பெண் மற்றும் மணமகனிற்குத் தேவையான திருமண ஆடைகளும் தயார் செய்யப்பட்டன. 

இப்படி, அனைத்து விதமான முன் ஏற்பாடுகளுடன், காதலர்கள் கார்லோஸ் - கிரேஸ் ஜோடியின் திருமணம் மருத்துவமனையில் நேற்று முன் தினம் நடைபெற்றது. 

கொரோனா தாக்கம் காரணமாக, மிகவும் ஆபத்தான கட்டத்தில் இருந்த காதலன் கார்லோஸ், திருமணத்தின் போது அவர் முகத்தில் இருந்த உடல் நிலை மாற்றத்தைக் காண முடிந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும், திருமணத்திற்குப் பின் மிகப் பெரிய அளவில் அவரது உடல் நிலையில் முன்னேற்றம் காணப்பட்டுள்ளதாகவும், தற்போது மருத்துவமனையில் இருக்கும் கார்லோஸ், விரைவில் முழுமையாகக் குணமடைந்து வீடு திரும்புவார்” என்றும், மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, கொரோனா மரண படுக்கையில் காதலன் இருக்கும் நிலையில், அவருக்குப் புத்துயிர் தரும் வகையில் காதலி மாற்றி யோசித்த நிலையில், மருத்துவமனையிலேயே அவரை திருமணம் செய்து கொண்ட சம்பவம், உலகையே திரும்பிப் பார்க்க வைத்த காதல் திருமணமாக இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.