சீனா நாட்டைச் சேர்ந்த பிரபல அரசியல்வாதி மீது பிரபல டென்னிஸ் வீராங்கனை பாலியல் புகார் அளித்த நிலையில், அவர் திடீரென்று மாயமாகி உள்ளதால், அந்த பெண்ணிற்கு ஆதரவாக உலக டென்னிஸ் நட்சத்திரங்கள் குரல் கொடுத்து வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சீனா நாட்டைச் சேர்ந்த மிக முக்கியமான அரசியல் பிரபலமான ஒருவர் மீது, அதே நாட்டைச் சேர்ந்த டென்னிஸ் நட்சத்திரமும், முன்னாள் இரட்டையர் உலக நம்பர் 1 வீராங்கனையுமான 35 வயதான பெங் ஷுவாய், தனது சமூக வலைத்தளம் மூலம் பரபரப்பு செக்ஸ் புகார் ஒன்றை கூறினார்.

அதாவது, சீனாவில் ஆளும் சீன கம்யூனிஸ்ட் கட்சியில் மாபெரும் செல்வாக்கு பெற்று திகழ்பவரும், சீனாவின் முன்னாள் மூத்த துணை அதிபராகவும் இருந்த ஜாங் ஜி ஓர்லி மீது தான், அந்நாட்டின் டென்னிஸ் வீராங்கனை பகிரங்கமான இந்த செக்ஸ் புகாரை தெரிவித்திருந்தார்.

அந்த பாலியல் புகாரில், “முன்னாள் துணை அதிபர் ஜாங் ஜி ஓர்லி, தன்னை பல ஆண்டுகளாகப் பலவந்தப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்து வந்ததாகவும், என்னை அடிபணிய வைத்து என்னுடன் பல ஆண்டுகளாக அவர் இந்த பாலியல் கொடுமையைச் செய்து வந்ததாகவும்” தன்னுடைய சமூக வலைத்தளமான வெய்போ மூலம் கடந்த நவம்பர் முதல் வாரத்தில் டென்னிஸ் பிரபலமான பெங் ஷுவாய், இந்த குற்றச்சாட்டைக் கூறியிருந்தார்.

அதுவும், சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மிக உயர்ந்த பதவியான 7 பேர் மட்டுமே கொண்ட பொலிட் பீரோ உறுப்பினர் குழுவில் இடம் பிடித்தவர் தான் இந்த ஜாங் ஜி ஓர்லி. 

அவர் மீது இப்படியொரு குற்றச்சாட்டை டென்னிஸ் வீராங்கனை வைத்ததைப் பார்த்த அந்நாட்டு இணைய வாசிகள் இது பேரும் அதிர்ச்சியாக அமைந்துபோனது, எனினும்,  டென்னிஸ் வீராங்கனையின் இந்த பாலியல் பதிவானது, அடுத்த சிறிது நேரத்திற்குள்ளே அழிக்கப்பட்டது.

இதனையடுத்து, அந்த பாலியல் புகாரின் ஸ்கிரீன்ஷாட்கள் அடிப்படையில், டென்னிஸ் நட்சத்திரம் கூறியிருந்தது என்னவென்றால், “நான் ஆரம்பத்தில் முடியாது என கூறினேன். ஆனாலும் அவர் என்னை பலவந்தப்படுத்தி வந்தார். ஒரு கட்டத்தில் நான் அழுது துடித்தேன்.

என்னை அடிபணிய வைத்து பல ஆண்டுகள் இந்த பாலியல் உறவை அவர் தொடர்ந்து செய்துகொண்டே வந்தார். நான் கூறும் குற்றச்சாட்டுகளுக்கு என்னிடம் இப்போது வரை எந்த ஆதாரமும் இல்லை. 

ஆனால், ஜாங் ஜி ஓர்லியின் மனைவிக்கு இது தெரியும். கடந்த 2012 ஆம் ஆண்டு முதல் 2018 ஆம் ஆண்டு வரை என்னிடம் தகாத முறையில் நடப்பதை ஜாங் ஜி ஓர்லி தொடர்ந்து கொண்டிருந்தார். 

சமீபத்தில் அவராகவே என்னிடம் பேசுவதை நிறுத்தும் வரையில், அது தொடர்ந்து கொண்டுதான் இருந்தது” என்று, டென்னிஸ் பிரபலமான பெங் ஷுவாய் குற்றம்சாட்டி உள்ளார்.

அத்துடன், “இந்த பாலியல் குற்றச்சாட்டு இணையத்தில் பதிவிட்டதைத் தொடர்ந்து பின்பு அது அழிக்கப்பட்டது முதல் டென்னிஸ் வீராங்கனை பெங் சுவாய்க்கு என்ன ஆனது என்றே தெரியவில்லை. அவரைப் பற்றிய எந்த தகவலும், அவரது வீட்டினருக்கு இதுவரை கிடைக்கவில்லை. அந்த வீராங்கனையை தற்போது வரை யாரிடமும் தொடர்பு இல்லாத நிலையில் அவர் இருந்து வருவதால், அந்த வீராங்கனைக்கு என்ன ஆனது?” என்று தெரியாமல், இது பல்வேறு சந்தேகங்களையும் எழுப்பி உள்ளன.

இந்த நிலையில் தான், வீராங்கனை பெங் ஷுவாய், உலக டென்னிஸ் அசோசியேஷனுக்கு எழுதியதாக இமெயில் ஸ்கிரீன்ஷாட் ஒன்றை, சீன அரசு தொலைக்காட்சி சற்று முன்பாக ஒளிபரப்பியது. 

அதில், “நான் கூறிய குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய் என்றும், நான் வீட்டில் ஓய்வில் இருந்து வருவதாகவும்” பெங் ஷூவாய் கூறியதாக அதில் தெரிவிக்கப்பட்டது. 

ஆனால், “இந்த இமெயில் விவகாரம் நம்பும் படியகா இல்லை எனவும், அடக்கு முறைக்குப் பெயர் போன சீனாவில், உயர் பதவியிலிருந்தவர் குறித்து மீடூ புகார் தெரிவித்ததால் விளையாட்டு வீராங்கனைக்கு ஏதாவது நேர்ந்திருக்கலாம்” எனவும் சந்தேகிக்கப்படுகிறது.

இதனால், உலகம் முழுவதும் உள்ள டென்னிஸ் வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பெங்கிற்கு ஆதரவாக தற்போது ஒருமித்த குரல் கொடுத்து வருகின்றனர். 

அதன் படி, முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனை செரினா வில்லியம்ஸ், “பெங் குறித்து வெளியாகும் தகவல்கள் கவலைக்குரியதாக இருப்பதாகவும், அவர் நலமுடன் இருக்க வேண்டும் என்று, நான் பிரார்த்திப்பதாகவும்” தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு உள்ளார்.

அதே போல், “ஜப்பான் வீராங்கனை நவோமி ஒசாகா, ஜோகோவிக் போன்றோரும் மாயமான வீராங்கனைக்கு ஆதரவாகக் கருத்து  தெரிவித்து இருக்கிறார்கள்.