உலகிலேயே மனிதனுக்கு முதல் முறையாக H10N3 என்ற பறவைக் காய்ச்சல் கண்டறியப்பட்டது, உலக நாடுகள் இடையே கடும் அதிர்ச்சியையும், பீதியையும் ஏற்படுத்தி உள்ளது.

உலகம் முழுவதும் பரவிக்கொண்டு இருக்கும் கொரோனாவின் கொடூரத்திற்கு இது வரை பல கோடி பேர் உயிரிழந்து உள்ளனர். 

கொரோனா வைரஸ் என்னும் தொற்று நோயால், உலக அளவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே உள்ளது.

சீனாவில் உருவெடுத்த கொரோனா வைரஸ், இன்று உலக நாடுகள் முழுமைக்கும் பரவிய நிலையில், சீனாவில் இந்த நோய் முழுமையாகக் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டு உள்ளதாகவும், ஆனால், மற்ற ஒவ்வொரு நாடும் இதனால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

அதே போல், இந்தியா உள்ளிட்ட உலகின் பல நாடுகளிலும், கொரோனாவின் கொடூரத் தாக்குதல் 2 வது அலையாகப் பரவிக்கொண்டு இருக்கிறது. இந்த 2 அலையில் உயிரிழப்பு மற்றும் பாதிப்பு எண்ணிக்கையானது, முதல் அலையைக் காட்டிலும் அதிகமாக இருக்கிறது.

இப்படியாக சீனாவில் இருந்து பரவியதாகக் கருதப்படும் கொரோனா தொற்றிலிருந்து இந்த உலகம் இன்னும் முழுமையாக விடுபடவில்லை. ஆனால், அதற்குள் உலகின் முதல் முதலாகப் பறவைக் காய்ச்சல் தொற்று, சீனாவிலுள்ள ஒருவருக்கு தற்போது புதிதாகக் கண்டறியப்பட்டுள்ளச் சம்பவம், உலக மக்களை கடும் பீதியில் ஆழ்த்தியிருக்கிறது. 

அதாவது, சீனாவின், ஜென்ஜியாங் நகரத்தைச் சேர்ந்த 41 வயது நபருக்கு H10N3 எனப்படும் பறவைக் காய்ச்சல் வைரஸ் தொற்று புதிதாக பாதிப்பை ஏற்படுத்தி உள்ளதாக, அந்நாட்டின் தேசிய சுகாதார ஆணையம் தெரிவித்து உள்ளது. 

அதே நேரத்தில், H10N3 என்ற பறவைக் காய்ச்சல் பாதிக்கப்பட்ட ஜென்ஜியாங் நகரத்தைச் சேர்ந்த அந்த நபரின் உடல் நிலையானது, மிகவும் சீராக உள்ளதாகவும், தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

அத்துடன், இந்த குறிப்பிட்ட நபருடன் தொடர்பில் இருந்த அனைவரும் தற்போது கண்காணிக்கப்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது.

மேலும், இதற்கு முன்பாக, வேறு எந்த நாட்டிலும் இது போன்ற ஒரு வைரஸ், பறவைகளிடம் இருந்து மனிதர்களுக்குப் பரவியது இல்லை என்றும், இந்த வைரஸ் அதிக அளவில் மனிதர்களிடம் தொற்றுவதற்கான வாய்ப்புகள் இல்லை என்றும் சீனா தெரிவித்துள்ளது சற்று ஆறுதலாக உள்ளது குறிப்பிடத்தக்கது.