1000 ஆண்டுகள் இல்லாத கடும் மழை, 350 அடி உயர மணல் புயல், சூறாவளிகள், நிலச்சரிவுகள் என தொடரும் இயற்கை பேரிடர்களால் சீனாவே தற்போது  சின்னாபின்னமாக்கி இருக்கிறது.

சீனாவில் ஆண்டுதோறும் இந்த சீசனின் போது, பலத்த மழை பெய்வது வழக்கமான ஒரு நிகழ்வு தான். அப்போதெல்லாம், சீனாவில் பெரு வெள்ளத்திற்கு சிலர்
உயிரிழக்கின்றனர். அதே போல், சில பொருட்களும் சேதமடைவது வாடிக்கையான ஒரு நிகழ்வாகவே இருந்திருக்கின்றன.ஷ

ஆனால், இந்த ஆண்டு நிலைமை அப்படி இல்லை. கடந்த ஆயிரம் ஆண்டுகள் இல்லாத அளவிற்கு சீனாவின் பல்வேறு இடங்களில் கன மழை கொட்டித் தீர்த்திருக்கிறது. 

அதாவது, சீனாவில் உள்ள ஹெனான் மாகாணத்தில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பில் இருந்தே பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, சீனாவின் பல்வேறு நகரங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. 

குறிப்பாக, “கடந்த ஆயிரம் ஆண்டுகளில் இல்லாத வகையில் சீனாவில் ஏற்பட்ட மிக அதிகபட்ச மழை இதுவே ஆகும்” என்றும், அறிவிக்கப்பட்டு உள்ளது. 

ஆயிரம் ஆண்டுகளில் இல்லாத வகையில் கொட்டி தீர்த்து வரும் இந்த கன மழையால் அங்கு பல்வேறு இடங்களில் தொடர்ச்சியாக ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு காரணமாக, பலரும் பல இடங்களில் சிக்கி பலியாகி வருகின்றனர்.

முக்கியமாக, அங்கு மழை பெய்யத் தொடங்கி 5 நாட்கள் கடந்தும் பல்வேறு நகரங்கள் வெள்ளத்தில் தற்போது வரை மிதக்கின்றன. இந்த நிலையில், அங்கு திடீரென
உருவான இன்ஃபா என்ற சூறாவளி, சீனாவின் நிலைமையை இன்னும் மோசமடைய செய்திருக்கிறது. 

சீனாவில் சுழன்று சுழன்று அடித்த சூறாவளி புயலில் கடல் அலைகள் பல அடி உயரத்திற்கு எழுந்து அந்த பகுதி வாழ் மக்களை இன்னும் பீதியடையச்  செய்திருக்கின்றன. 

இவற்றுடன், இது வரை இல்லாத வகையில், அங்கு வரலாறு காணாத மழை மற்றும் வெள்ளத்தை எதிர்கொண்டு வரும் ஹெனான் மாகாணத்தில் பல்வேறு இடங்களில் தற்போது நிலச்சரிவுவும் ஏற்பட்டுள்ளது. 

அதிலும் குறிப்பாக, அங்குள்ள வட மேற்கு சீனாவில் டன்ஹுவாங் நகரத்தை சுமார் 350 அடி உயரம் கொண் மணற் புயல் தாக்கி இருக்கிறது. இந்த மணற் புயலில்
பலரும் சிக்கித் தவித்துப் போனார்கள்.

இப்படியாக, சீனாவை அடுத்தடுத்து கனமழை, நிலச்சரிவுகள், சூறாவளி, மணல் புயல் என அடுத்தடுத்த இயற்கை பேரிடர்கள் தாக்கி வருவதால், சீன மக்கள் நிலை குலைந்து போய் உள்ளனர். இதன் காரணமா, சீனாவில் சுமார் 5 நாட்கள் அந்த பகுதியில் உள்ள நகரம் முழுவதுமே இருளில் மூழ்கிப் போய் உள்ளது. 

உயிர் பயத்தில் உரைந்து போன மக்கள் பலரும், அச்சத்துடன் தங்களது வீடுகளுக்குள் முடங்கிப் போய் உள்ளனர். 

மேலும், சீனாவில் கடந்த 25 ஆம் தேதி வீசிய மணல் புயல் தொடர்பான காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி காண்போரை கடும் அதிர்ச்சிக்கு
உள்ளாக்கி உள்ளது. இந்த மணற் புயலால், பெருமளவு பாதிப்புகள் ஏற்படவில்லை என்ற போதும், தண்ஹுவாங் நகரில் உள்ள வீடுகள் முழுவதையும் மணல்
சூழ்ந்க்கொண்டு தாக்கியிருக்கிறது.

சீனாவை அடுத்தடுத்து தொடரும் இயற்கை பேரிடரில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை தற்போது 33 ஆக உயா்ந்து இருக்கிறது. இந்த எண்ணிக்கை இன்னும் உயரும் என்றும் அஞ்சப்படுகிறது.

சீனாவில் ஏற்பட்ட மழை மற்றும் வெள்ளம் காரணமாக அந்நாட்டில் 75,000 கோடி அளவுக்கு பொருள் சேதம் ஏற்பட்டு உள்ளது என்று கணக்கிடப்பட்டு உள்ளது. 

அத்துடன், வெளுத்து வாங்கும் தொடர் கன மழையால், சீனாவின் ஹெனான் பகுதியில் வசிக்கும் 3.76 லட்சம் பேர் தற்போது பாதுகாப்பான பகுதிகளுக்கு சென்று
உள்ளனர். 

இந்த கன மழையில் மொத்தம் 12.4 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். முக்கியமாக, பலரது கார்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு உள்ளன. அங்குள்ள சுரங்க பாதைகள், தெருக்கள், ஓட்டல்கள் உள்ளிட்ட பல கட்டிடங்கள் வெள்ள நீரால் சூழ்ந்து உள்ளன. இதனால், அந்த பகுதியில் பொது போக்குவரத்தும் அப்படியே முடங்கிப்போய் உள்ளது குறிப்பிடத்தக்கது.