“குழந்தை திருமணத்தால் உலக அளவில் தினம் 60 க்கும் மேற்பட்ட பெண் குழந்தைகள் உயிரிழப்பதாக” ஆய்வறிக்கையில் அதிர்ச்சி தரும் தகவல்கள் தெரிய வந்துள்ளன.

சர்வதேச பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, சமீபத்தில் அதிர்ச்சி அளிக்கும் ஒரு ஆய்வறிக்கை ஒன்று வெளியிடப்பட்டது.

அதாவது, சேவ் தி சில்ரன் வெளியிட்டுள்ள இந்த ஆய்வறிக்கையில், “தெற்காசியாவில் ஒவ்வொரு ஆண்டும் குழந்தை திருமணம் தொடர்பாக கிட்டதட்ட 2 ஆயிரம் பெண் குழந்தைகள் உயிரிழப்புகள்” நிகழ்வதாக குறிப்பிடப்படப்பட்டு உள்ளது.

அத்துடன், “கிழக்கு ஆசியா மற்றும் பசிபிக் பகுதியில் 650 உயிரிழப்புகளும் லத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியன் பகுதியில் 560 பெண் குழந்தைகள் உயிரிழப்புகளும் நிகழ்கின்றன” என்று, வேதனையான மற்றும் அதிர்ச்சி அளிக்கும் வகையிலான செய்தியை வெளியிட்டு உள்ளது.

மேலும், “உலகளவில் மேற்கு மற்றும் மத்திய ஆப்பிரிக்காவில் குழந்தைத் திருமண விகிதம் மிகப் பெரிய அளவில் முன் எப்போதும் இல்லாத வகையில் அதிகமாக உள்ளதாகவும்” அதில் கவலையுடன் குறிப்பிடப்பட்டு உள்ளது. 

உலகளவில் குழந்தைத் திருமணம் தொடர்பான உயிரிழப்புகளில் அதிகமாக பதிவாகி வருவதாகவும்” அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அதாவது, “குழந்தை திருமணத்தால் ஏற்படும் கர்ப்பம் மற்றும் பிரசவத்தால் மட்டும் ஆண்டுக்கு 22,000 க்கும் அதிகமான பெண் குழந்தைகள் உயிரிழக்கின்றனர்” என்கிற அதிர்ச்சியூட்டும் தகவல்களும் அதில் இடம் பெற்று உள்ளன.

அதே போல், “கடந்த 25 ஆண்டுகளில் உலக அளவில் கிட்டத்தட்ட 80 மில்லியன் குழந்தை திருமணங்கள் தடுக்கப்பட்டு இருப்பதாகவும், குழந்தை திருமணங்கள் அதிகரிக்க காரணமான கொரோனா தொற்று நோய் பாதிப்புக்கு முன்பே இந்த முன்னேற்றம் தடைப்பட்டு விட்டதாகவும்” அதில் கூறப்பட்டு உள்ளது.

“நீண்டகால ஊரடங்கு காரணமாக, பல குடும்பங்கள் வறுமைக்கு தள்ளப்படுவதால், பெண்கள் மற்றும் சிறுமிகள் மீதான வன்முறை அதிகரிக்கும் அபாயத்தை பல இடங்களில் எதிர்கொள்ள நேரிடுகிறது என்றும், இதனால், 10 மில்லியன் சிறுமிகள் 2030 க்குள் திருமணம் செய்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும்” அதில் சுட்டிக்காட்டப்பட்டு உள்ளது. 

இதனால், “அதிகமான பெண்கள் இறக்கும் அபாயமும் இப்பதாகவும்” அந்த ஆய்வறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

இது குறித்து சேவ் தி சில்ட்ரன் சர்வதேச தலைமை நிர்வாக அதிகாரி இங்கர் ஆஷிங் பேசும்போது, “இந்த உயிரிழப்பு பட்டியலில், டீனேஜ் பெண்களின் பிரசவமே முதலிடத்தில் உள்ளது என்றும், அதற்கு காரணம் அவர்களின் இளம் உடல்கள் குழந்தைகளைப் பெற்றெடுக்கத் தயாராக இல்லை” என்றும் அவர் வெளிப்படையாகவே தெரிவித்து உள்ளார்.