“ஆண்களின் வழுக்கை தலை குறித்து கேலி செய்வது பாலியல் குற்றம்” என்று, இங்கிலாந்து தொழிலாளர் தீர்ப்பாயம் கூறியுள்ளது.

இந்தியாவில் உள்ள பெரும்பாலன சட்டங்கள் பெண்களுக்கு சாதகமாகவே இருக்கிறது. ஆனால், அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட பல வெளிநாட்டில் ஆண் மற்றும் பெண்களுக்கு சமமான அளவிலேயே சட்டங்கள் நடைமுறையில் உள்ளன.

அந்த வகையில், வட கிழக்கு இங்கிலாந்தின் யார்க்ஷயர் (Yorkshire) நகரில் உள்ள தனியாா் நிறுவனத்தில் கடந்த ஆண்டு எலக்ட்ரீசன் பணியில் இருந்து டோனி ஃபின் என்ற ஊழியர் அதிரடியாக நீக்கம் செய்யப்பட்டார். 

அப்படி, பணியில் இருந்து நீக்கப்பட்ட அந்த ஊழியர், அந்த நிறுவனத்தின் கிட்டதட்ட 24 ஆண்டுகள் பணியாற்றி இருக்கிறார்.  இந்த நிலையில் தான்,  அந்த நிறுவனத்தின் உயரதிகாரி “என்னை வழுக்கை என்று, கேலி செய்ததாகவும் அதற்கு எதிா்ப்பு தெரிவித்ததால் நியாயமற்ற முறையில் பணி நீக்கப்பட்டதாகவும்” தொழிலாளர் தீா்ப்பாயத்திடம் புகார் அளித்திருந்தார்.

இந்த வழக்கை 3 பேர் அடங்கிய அந்நாட்டின் நீதிமன்ற அமர்வு விசாரித்து வந்தது. 

இது தொடர்பான வழக்கில் தீப்பு வழங்கிய நீதிபதிகள், “இந்த அவமதிப்பு என்பது உரிமைகோருவோரின் கண்ணியத்துக்கு எதிரானது” என்று, குறிப்பிட்டனர்.

அத்துடன், “பணி இடத்தில் பெண்களின் உறுப்புகளை கேலி செய்வது என்பது, பாலியல் குற்றம் என்பதைப் போல், ஆண்களின் வழுக்கையை கேலி செய்வதும் பாலியல் குற்றத்துக்குள் அடங்கும்” என்றும், நீதிபதிகள் தெளிவாக தெரிவித்தனர்.

மேலும், அந்த தீர்ப்பாயத்தின் 3 நீதிபதிகளும், “முடி உதிர்தல் குறித்த தங்கள் சொந்த அனுபவத்தைக் குறிப்பிட்டு பேசிய நிலையில், பெண்களை விட ஆண்களுக்கு வழுக்கை அதிகமாக இருப்பதாகவும்” குறிப்பிட்டு பேசினர். 

இதனால், “வழுக்கை என்ற வார்த்தையைப் பயன்படுத்துவது பாலினத்தின் பாதுகாக்கப்பட்ட பண்பு தொடர்பான அவமதிப்பானது” என்றும், அவர்கள் சுட்டிக்காட்டினர்.

“கடந்த 1995 ஆம் ஆண்டு வழக்கை குறிப்பிட்டு, ஆண்களை வழுக்கை என்று குறிப்பிடுவது பெண்ணின் மார்பகம் குறித்து விமர்சிப்பது போன்றது” என்றும், நீதிபதிகள் சுட்டிக்காட்டினர். 

இதனால், “பாதிக்கப்பட்ட அந்த நிறுவனத்தின் ஊழியர் டோனி ஃபின்னுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்” என்றும், நீதிபதிகள் தீா்ப்பு அளித்தனா். இந்த வழக்கின் தீர்ப்பு, தற்போது உலகம் முழுவதும் வைரலாகி வருகிறது.