அமெரிக்காவின் கிளவ்லேண்ட் தேசிய வனப்பகுதியில் கடந்த 6ம் தேதி காட்டுத்தீயொன்று ஏற்பட்டது. 6 ஆயிரத்து 200 ஏக்கர் பரப்பளவில் ஏற்பட்டுள்ள இந்த தீயானது, குடியிருப்பு பகுதிகளுக்கும் பரவி வருவதால், அப்பகுதியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. 

அமெரிக்காவில் அதிக கொரோனா நோயாளிகளை கொண்ட முதல் மாகாணமாக கலிபோர்னியா உள்ளது. அங்கு கொரோனா வைரஸ் மின்னல் வேகத்தில் பரவிவருகிறது. இதனிடையே கொரோனாவால் முடங்கியுள்ள கலிபோர்னியா மாகாணத்தை காட்டுத்தீயும் திணறடித்து வருகிறது. 

கலிபோர்னியாவில் ஒவ்வொரு ஆண்டும், கோடை காலத்தில் மரங்கள் வெயிலின் காரணமாக காய்ந்து சருகாகி விடும். அந்த சமயங்களில் மின்னல் போன்ற இயற்கை காரணிகளாலும், மனிதர்களின் தவறுகளாலும் காட்டுத் தீ ஏற்படுகிறது. அத்துடன் வேகமாக வீசும் காற்றும் தீ பரவுவதற்கு காரணமாக அமைந்து விடுகிறது. இதன் காரணமாக ஒவ்வொரு ஆண்டும் கலிபோர்னியா மாகாணத்தில் ஒரே சமயத்தில் பல இடங்களில் காட்டுத்தீ பரவி பெரும் பாதிப்பு ஏற்படுகிறது.

அந்த வகையில் கடந்த சில வாரங்களாக கலிபோர்னியா மாகாணத்தின் பல்வேறு பகுதிகளில் காட்டுத் தீ பற்றி எரிந்து வருகிறது. சொல்லப்போனால் கடந்த மாதம் 15-ந்தேதி முதல் தற்போது வரை ஆயிரத்துக்கும் மேற்பட்ட காட்டுத்தீயை கலிபோர்னியா கண்டுள்ளது என்று தரவுகள் சொல்கின்றன. இவற்றில் பெரும்பாலான காட்டுத்தீ அணைக்கப்பட்டு விட்டாலும் ஒரு சில இடங்களில் காட்டுத் தீ கட்டுக்குள் வராமல் தொடர்ந்து பரவி வருகிறது.

அந்த வகையில் தற்போது கலிபோர்னியா மாகாணம் முழுவதும் 24 இடங்களில் பயங்கர காட்டுத் தீ பற்றி எரிந்து வருகிறது. 14 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் இந்த காட்டுத் தீயை அணைப்பதற்காக கடுமையாக போராடி வருகின்றனர். வறண்ட வானிலை மற்றும் காற்றின் வேகம் காரணமாக காட்டுத் தீயை கட்டுக்குள் கொண்டு வருவதில் சிக்கல் நீடிக்கிறது.

இதனிடையே கலிபோர்னியா மாகாணத்தின் சியாரா மலைப்பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை ஏற்பட்ட காட்டுத்தீ, இந்த ஆண்டில் இதுவரை இல்லாத அளவுக்கு பெரும் காட்டுத்தீயாக பதிவாகியுள்ளது. இதனால் கடந்த 5 நாட்களில் இந்த காட்டுத்தீ 78 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பை சாம்பலாக்கியது.

மேலும் இந்த காட்டுத்தீ பிக் கிரீக் நகரில் பத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகளை சாம்பலாகி விட்டது. எனினும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மக்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டதால் உயிரிழப்பு போன்ற அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

இதற்கிடையில் சியாரா மலைப்பகுதியில் மாமூத் பூல் நீர்த்தேக்கம் அருகே மலையேற்றத்துக்காக சென்றிருந்த 200-க்கும் மேற்பட்டோர் காட்டுத்தீயில் சிக்கி கொண்டனர்.

பல மணி நேர போராட்டத்துக்கு பிறகு அவர்கள் அனைவரும் சிறிய ரக விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் மூலம் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

இதனிடையே பிரெஸ்னோ, மடேரா, மரிபோசா, சன்பெர்னார்டினோ மற்றும் சான் டியாகோ ஆகிய நகரங்களில் காட்டுத் தீ கட்டுக்குள் வராமல் தொடர்ந்து வேகமாக பரவி வருகிறது. இதன் காரணமாக மேற்கூறிய நகரங்களில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் அந்த நகரங்களில் காட்டுத்தீ பரவி வரும் பகுதிகளில் உள்ள குடியிருப்புகளில் இருந்து மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டு வருகின்றனர். அதன்படி இதுவரை 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

இதற்கிடையில் இந்த ஆண்டு கலிபோர்னியா காட்டுத் தீயில் ஒட்டுமொத்தமாக 20 லட்சம் ஏக்கர் நிலம் எரிந்து சாம்பலாகி உள்ளதாகவும், 8 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 3,300 கட்டிடங்கள் முற்றிலும் அழிந்ததாகவும் கலிபோர்னியா மாகாண அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.