“கொரோனாவுக்கு சமமான பேரழிவைக் கால நிலை மாற்றம் ஏற்படுத்தும்” என்று, மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் எச்சரித்து உள்ளார்.

கொரோனா என்னும் பெருந் தொற்று ஒன்று, கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் சீனாவில் பரவத் தொடங்கி, இன்று உலகம் முழுவதும் பரவிக் 
கிடப்பதாகக் கூறப்படுகிறது. 

இந்த கொரோனா வைரஸ் நோய்க்குப் பல லட்சம் பேர் இதுவரை உயிரிழந்துள்ள நிலையில், பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை சுமார் 2 கோடியை நெருங்கி வருகிறது. பல உலக நாடுகளில் கொரோனா வைரசின் 2 ஆம் கட்ட அலை வீசுவதாகவும் கூறப்படும் நிலையில், பல நாடுகளில் கட்டுப்படுத்தப்பட்டிருந்த இந்த வைரஸ் தொற்று மீண்டும் பரவி வருவதாகவும் கூறப்படுகிறது. இதனால், என்ன செய்து என்று தெரியாமல் உலக நாடுகள் எல்லாம் விழி பிதுங்கி நிற்கின்றன.

மேலும், இந்த கொரோனா வைரஸ் உலகிற்கு புதிய நோய் என்பதால், இந்த நோயைக் கட்டுப் படுத்த உந்த உலக நாடுகளிடமும் தற்போது வரை தடுப்பூசி என்று எதுவும் இல்லை. ஆனால். மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் ஒட்டு மொத்த உலக நாடுகளும் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. எனினும், அடுத்த ஆண்டு தொடக்கத்தில், கொரோனா தடுப்பூசி தயாராக வாய்ப்பு இருப்பதாகவும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

ஆனால், அது வரை கொரோனா உயிரிழப்பைக் கட்டுப்படுத்த பிளாஸ்மா தெரபி உள்ளிட்ட பல்வேறு சிகிச்சை முறைகளைத் தீவிரப்படுத்த வேண்டும் என்றும், உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது. 

அதன்படி, தமிழகம் உட்பட இந்தியாவின் பல மாநிலங்களிலும், சில வெளிநாடுகளிலும் சித்த மருத்துவ முறையானது பின்பற்றப்பட்டு வருகிறது.

இந்நிலையில், கொரோனாவுக்கு சமமான பேரழிவைக் கால நிலை மாற்றம் ஏற்படுத்தும் என்று, உலக பணக்காரர் பில்கேட்ஸ் எச்சரித்துள்ளது, மேலும் பீதியை ஏற்படுத்தி உள்ளது. 

இந்த பேரழிவானது, “கால நிலை மாற்றத்தால் நிகழும்” என்றும், மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் எச்சரித்து உள்ளார்.

மேலும், “இந்த கால நிலை மாற்றம் என்பது, கொரோனா நோய் தொற்று போல மிக மோசமானது” என்றும், அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

“காலநிலை மாற்றத்தால் ஏற்படும் சேதங்களை மக்கள் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும் என்றும், கொரோனாவால் ஏற்படும் அழிவைப் கவனியுங்கள்” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

அத்துடன், “தற்போது நாம் கார்பன் டை ஆக்ஸைடு உமிழ்வைக் கட்டுப்படுத்தா விட்டால், தற்போது ஏற்பட்டுள்ள உயிரிழப்புகள் மற்றும் பொருளாதார நெருக்கடியை மீண்டும் நாம் அனைவரும் சந்திக்க நேரிடும்” என்றும், அவர் எச்சரித்துள்ளார்.

“கொரோனா வைரஸ் உயிர் இழப்புகளுடன் ஒப்பிட்டு கால நிலை பிரச்சனைகளை நாம் ஆராய வேண்டும்” என்றும், அவர் வலியுறுத்தி உள்ளார்.

குறிப்பாக, “சுமார் ஒரு லட்சம் மக்களில் 14 பேர் கொரோனாவால் உயிரிழக்கிறார்கள். அதே நேரத்தில், அதிகரித்து வரும் வெப்ப நிலையால் அடுத்த 40 ஆண்டுகளில் அதாவது 2060 ஆம் ஆண்டு இதே உயிரிழப்பு விகிதத்தைக் காண வாய்ப்பு உள்ளது” என்றும், அவர் தெரிவித்துள்ளார். 

“இதே நிலை நீடிக்கும் என்றால், அதிக பட்சமாக ஒரு லட்சம் பேரில் 73 பேர் வரை உயிரிழக்கக் கூடும் என்றும், குறைந்தபட்சமாக ஒரு லட்சம் பேரில் 10 பேர் உயிரிழக்க வாய்ப்பு” உள்ளதாகவும், அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.

“கொரோனாவை விட கால நிலை மாற்றத்தால் தான், அதிக உயிரிழப்புகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது என்றும், பொருளாதார நெருக்கடியும் தற்போது உள்ளதைப் போலவே மோசமாக இருக்கும்” என்றும், அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், “இப்படியான கால நிலை மாற்றத்தை சமாளிக்க, அந்தந்த நாட்டின் அரசுகள் தான் அதிக செலவு செய்ய வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்படும்” என்றும், நாளைய அபாயத்தை இன்றே பில்கேட்ஸ் கணித்து உலக நாடுகளை எச்சரிக்கையாக இருக்கும்படி வலியுறுத்தி உள்ளார்.