அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல நிறுவனமான பெட்டர் டாட் காம் ஒரே ஒரு ஜூம் காலில் 900 ஊழியர்களை பணி நீக்கம் செய்து கடும் விமர்சனத்துக்கு ஆளாகியுள்ளது.

அமெரிக்காவில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விஷால் கார்க் 'பெட்டர் டாட் காம்' என்ற வலைதள வீட்டு வசதி கடன் நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்த வலைதளத்தில் புரோக்கர் கட்டணமின்றி நிலம், வீடு வாங்க கடன் வசதி பெறலாம். மேலும் இன்சூரன்ஸ், பொருட்களை அடகு வைத்தல் போன்ற சேவைகளையும் பெட்டர் டாட் காம் நிறுவனம் வழங்கி வருகிறது. 

நியூயார்க்கை தலைமையிடமாக கொண்டு வரும் இந்த நிறுவனத்தில் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். ரியல் எஸ்டேட் துறையின் அனைத்து பிரிவிலும் வெளிப்படைத் தன்மை இருந்ததால் அந்த நிறுவனம் வேகமாக வளர்ச்சி அடைந்துள்ளது. 

இந்நிலையில் ஜூம் மீட்டிங் வாயிலாக 900 பணியாளர்களை பணிநீக்கம் செய்துள்ளார் 43 வயதான விஷால் கார்க். அதுவும் 3 நிமிடங்களில் 900 பேரை நீக்கி விஷால் கார்க் அதிர்ச்சி அடையவைத்துள்ளார்.  இதன்மூலம் மொத்த ஊழியர்களில் 15 சதவீதம் பேர் வேலையிழப்பிற்கு ஆளாகியுள்ளனர். இதற்கு வேலையில் மந்தம், செயல்பாடுகளில் திறமையின்மை, உற்பத்தி திறன் குறைவு ஆகிய காரணங்களை விஷால் கார்க் கூறியுள்ளார். 

அதுமட்டுமின்றி சந்தையில் போட்டிகள் அதிகரித்துவிட்டன. தீவிரமாக செயல்பட்டால் மட்டுமே நிறுவனத்தின் முன்னணி மதிப்பை தக்கவைக்க இயலும் என்றும் காரணம் கூறப்பட்டுள்ளது.

VISHAL GARG BUSINESS MAN INDIA AMERICA

புதன்கிழமையன்று விஷால் கார்க் பேசிய அந்த ஜூம் வீடியோ காலில், "இந்த செய்தியை நீங்கள் யாரும் கேட்க விரும்பப்போவதில்லை. ஆனால் அந்த முடிவை எடுத்துதான் ஆக வேண்டும். இந்த முடிவை நான் எடுப்பது இது இரண்டாவது முறை. முதல் முறை நான் அழுதேன்.

ஆனால் இம்முறை வலிமையோடு இருப்பேன் என்று நினைக்கிறேன். எனக்கும் இந்த முடிவை எடுப்பதில் விருப்பம் இல்லைதான். ஆனால் இது முக்கியமான முடிவாக இருக்கும். 

நீங்கள் இந்த வீடியோ காலில் இருக்கிறீர்கள் என்றால், துரதிர்ஷ்டவசமானவர்கள் என்று அர்த்தம். இதில் இருக்கும் அத்தனை பேரும் உடனடியாக பணிநீக்கம் செய்யப்படுகிறீர்கள். உங்களுக்கே தெரியும் இதில் 250 பேருக்கு மேல் 8 மணி நேர வேலைக்கான சம்பளம் வாங்கிக்கொண்டு 2 மணி நேரம் மட்டுமே வேலை பார்க்கிறீர்கள் என்று. 

அவர்கள் நிறுவனத்திடம் இருந்தும், நிறுவனத்தின் வாடிக்கையாளர்களிடம் இருந்தும் பணத்தை திருடுகிறார்கள் என்று அர்த்தம். எனவே இந்த நிறுவனத்தில் இருந்து 15 சதவீத பணியாளர்கள் நீக்கப்படுகிறார்கள். இந்த பணி நீக்கம் இப்பொழுது முதல் அமலுக்கு வருகிறது" என்று விஷால் கார்க் கூறியிருக்கிறார்.

பெட்டர் டாட் காம் நிறுவனம் கூறுகையில் “நீக்கப்பட்ட பணியாளர்களின் வேலையை தீவிர ஆராய்ச்சிக்கு உட்படுத்திய பிறகே இந்த முடிவுக்கு வந்துள்ளதாக” தெரிவித்துள்ளது. 

“ஒவ்வொரு பணியாளரும் எத்தனை வாடிக்கையாளர்கள்  மீட்டிங் செய்துள்ளார்கள். எத்தனை போன் கால்கள் செய்துள்ளார்கள். எத்தனை இன்கமிங் கால்களை பேசியுள்ளார்கள். எத்தனை கால்கள் மிஸ்டு காலாக மாறியுள்ளது என்பதையெல்லாம் ஆராய்ந்த பின்னரே, அத்தனை தரவுகளோடும் வேலையிலிருந்து நீக்கி உள்ளதாக” நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VISHAL GARG BUSINESSMAN BETTER.COM

இதற்கு முன்னதாகவும் இவ்வாறான அநாகரிகமான பணிநீக்கத்துக்காக பெயர் பெற்றவர்தான் விஷால் கார்க். ஒரு முறை அவர் ஊழியர்களுக்கு அனுப்பிய இ மெயில் ஃபோர்ப்ஸ் பத்திரிகைக்கு கிடைத்தது. அந்த மெயிலில் அவர், “நீங்கள் படு மந்தமாக இருக்கிறீர்கள். மந்தமான டால்பின்கள் எனக்கு வேண்டாம். 

நீங்கள் என்னை தர்மசங்கடத்துக்கு ஆளாக்குறீர்கள். உங்கள் பணியை இத்தோடு முடித்துக் கொள்ளுங்கள்” என்று அந்த மெயிலில் குறிப்பிட்டிருந்தார். விஷால் கார்க் குறித்த செய்திகளை வெளியிட்டுள்ள அமெரிக்க ஊடகங்கள், பணியாளர்களுக்கு வந்த ஜூம் கால் அழைப்பை, Call From Hell (நரகத்திலிருந்து வந்த அழைப்பு) என்று கூறியுள்ளன.

அமெரிக்காவில் கிறிஸ்துமஸ் நெருங்குவதால் இது விடுமுறை நெருங்கும் மாதமாக பார்க்கப்படுகிறது. இந்த மாதத்தில் அமெரிக்கர்கள் நீண்ட விடுமுறை எடுத்து கிறிஸ்துமஸை கொண்டாடுவார்கள். இந்த விடுமுறைக்கு முன்னதாக இவர் இந்த பணி நீக்கத்தை அறிவித்துள்ளது, பலரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இந்த 900 ஊழியர்களில் பலர் அமெரிக்காவிலும் சிலர் இந்தியாவிலும் இருக்கின்றனர்.

 விஷால் கார்க் வெளியிட்ட இந்த அறிவிப்பை ஊழியர் ஒருவர் பதிவு செய்து அதை சமூக வலைதளத்தில் வைரலாக்கினார். இப்போது விஷால் கார்கை இணையவாசிகள் மிகக் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இந்த அதிரடி நடவடிக்கைக்கு பின்னர், ஏராளமான செய்தி ஊடகங்களில் தகவல் வெளியிடப்பட்டதால் பெட்டர் டாட் காமும், அதன் நிறுவனர் விஷால் கார்க்கும் மிகவும் பிரபலம் அடைந்துள்ளார்கள்.

Vishal Garg: “I wish I didn’t have to lay off 900 of you over a zoom call but I’m gonna lay y’all off right before the holidays lmfaooo”pic.twitter.com/6bxPGTemEG

— litquidity (@litcapital) December 5, 2021