லெபனான் நாட்டு தலைநகர் பெய்ரூட்டில் உள்ள துறைமுகத்தில் பழைய வெடிபொருட்கள் வைக்கப்பட்டிருந்த இடத்தில், இந்திய நேரப்படி நேற்று இரவு 9.30 மணியளவில் பயங்கரமான வெடி விபத்து ஏற்பட்டிருந்தது. அணு ஆயுதங்கள் வெடித்துச் சிதறியதைப்போல் பயங்கரமான சத்தமும் நில அதிர்வும் பெய்ரூட்டில் இந்த குண்டுவெடிப்பு ஏற்படுத்தியிருந்தது. இதன் வீடியோ சாட்சியங்கள் யாவும், உலகையே அச்சுறுத்தியது.

விபத்தைத் தொடர்ந்து, லெபனான் பொதுப் பாதுகாப்புத் தலைவர் ஜெனரல் அப்பாஸ் இப்ராஹிம் குண்டு வெடிப்பு நடந்த பெய்ரூட் துறைமுகத்தை பார்வையிட்டார்,

அப்போது அவர் கூறுகையில், ``வெடிகுண்டுகள் சேமித்து வைக்கப்பட்டிருந்த கிடங்கில் விபத்து ஏற்பட்டு வெடித்து சிதறியதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. வெடித்து சிதறிய வெடி பொருள்கள் பல ஆண்டுகளுக்கு முன்பு பறிமுதல் செய்யப்பட்டது. 

நாங்கள் பெய்ரூட்டின் துறைமுகத்தின் நுழைவாயிலில் இருக்கிறோம். ஆம்புலன்ஸ்கள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றன, தொடர்ந்து உயிரிழந்தவர்களை ஏற்றி கொண்டு வெளியேற்றுகின்றன.

பாதுகாப்பு வட்டாரங்களின்படி, குறைந்தது 10 பேர் கொல்லப்பட்டுள்ளனர். ஆனால் அந்த எண்ணிக்கை உயரும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம், ஏனெனில் சுகாதார அமைச்சர் மற்றும் லெபனான் செஞ்சிலுவை சங்கம் ஆகியவற்றின் கூற்றின்படி நூற்றுக்கணக்கானோர் காயங்கள் அடைந்துள்ளார்கள் என்பதை நாங்கள் புரிந்துகொள்கிறோம். மீட்பு முயற்சியில் உதவ நாடு முழுவதும் இருந்து ஆம்புலன்ஸ்கள் வரவழைக்கப்பட்டுள்ளன. இது ஒரு பெரிய குண்டு வெடிப்பு; சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வண்டிகள் தீப்பிழம்பை வெளியேற்ற முயற்சிப்பதை நீங்கள் காணலாம்." என்றார்.

இந்த விபத்து காரணமாக லெபனானில் இன்று (ஆகஸ்ட 5) தேசிய துக்க தினமாக அனுசரிக்கப்படுகிறது. மேலும், இந்த விபத்து குறித்து அந்நாட்டு அதிபர் தேசிய பாதுகாப்பு கவுன்சிலை உடனடியாக கூட்டி ஆலோசிக்கிறார். மேலும், இந்த விபத்துக்கான முழுமையான காரணம் குறித்து விரைவில் தெரிவிக்கப்படும் என அந்நாட்டு பாதுகாப்புத்துறை விளக்கம் அளித்துள்ளது. பெய்ரூட் நகரில் 2 நாட்களுக்கு அவசர நிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், கி.மீ தூரங்களுக்கு பரவிய சேதங்களை கணக்கிடும் பணி மற்றும் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடந்துவருகிறது.

அணு ஆயுதங்கள் வெடித்து சிதறியதைப்போல் பயங்கரமான சத்தமும் நிலஅதிர்வும் லெபனானின் தலைநகர் பெய்ரூட்டில் இந்த குண்டுவெடிப்பு ஏற்படுத்தி உள்ளது. இந்த வெடிவிபத்தால் ஏற்பட்ட நில அதிர்வு 234 கி.மீ. தொலைவில் உள்ள சைப்ரஸ் நாட்டில் உணரப்பட்டதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

இந்த விபத்தில் தற்போது வரை 80 பேர் உயிரிழந்திருப்பதாகவும், நூற்றுக்கணக்கானோர் காயமடைந்துள்ளதாகவும் லெபனான் சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. சம்பவம் நடந்த இடத்தின் சுற்றளவு முழுவதும் கடும் சேதம் அடைந்துள்ளது. 200 மீ தொலைவில் உள்ள தீவிலும் விபத்தின் தாக்கம் உணரப்பட்டது.

வெடி விபத்து நடந்த கட்டடத்தின் அருகே 3 மணி நேரத்திற்கு முன்னதாக தீ விபத்து ஒன்று நடந்துள்ளது. அந்த தீயை அணைக்கும் பணியிலிருந்தவர்கள், வெடிவிபத்தால் மாயமாகியுள்ளனர். அவர்கள் உயிரிழந்திருக்கலாம் என்ற அச்சம் நீடிக்கிறது.

விபத்து தொடர்பாக லெபனான் அரசு உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், துறைமுகத்தில் உள்ள சேமிப்பு கிடங்கில் வைக்கப்பட்டிருந்த மிகவும் ஆபத்து நிறைந்த வெடிக்கக்கூடிய அமோனியம் நைட்ரேட் வேதிப்பொருளால் தான் இந்த கோரவிபத்து நடைபெற்றுள்ளதாக லெபனான் பிரதமர் ஹசன் டியப் தெரிவித்துள்ளார்.

"எந்தவித பாதுகாப்பு நடைமுறைகளும் பின்பற்றப்படாமல் மக்களுக்கு ஆபத்து தரக்கூடிய வகையில் பெய்ரூட் துறைமுகத்தில் உள்ள சேமிப்பு கிடங்கில் 6 ஆண்டுகளாக 2 ஆயிரத்து 750 டன் அமோனியம் நைட்ரேட் வேதிப்பொருள் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. இதனால் தான் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இதை ஏற்றுக்கொள்ளவே முடியாது.

இந்த கொடூர விபத்துக்குக் காரணமானவர்களைக் கண்டுபிடித்து அவர்களுக்கு உச்சபட்ச தண்டனையைக் கொடுக்கும் வரை நான் ஓயப்போவதில்லை" என்று அவர் கூறியுள்ளார்.

தற்போது வெளிவரும் தகவலின்படி, 2,750 டன் அமோனியம் நைட்ரேட் வேதிப்பொருள் இருந்த குட்-அவுனில், சிறு ஓட்டை ஏற்பட்டிருந்ததாகவும் - அதை மூடுவதற்காக வெல்டிங் வைத்ததாகவும் - வெல்டிங் மூலம் எழுந்த தீப்பொறி, மொத்த விபத்துக்கும் காரணமாக அமைந்து விட்டதாகவும் தெரியவந்துள்ளது.