தெற்கு பெங்களூரு துணை ஆணையர் அண்ணாமலை தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.

மே 28ம் தேதி தனது ராஜிநாமா கடிதத்தை அவர் சமர்பித்துள்ளதாக கூறி, தனது நண்பர்கள் மற்றும் நலம் விரும்பிகள் அனைவருக்கும் கடிதம் ஒன்றை இணையத்தில் அனுப்பியுள்ளார். அந்தக் கடிதத்தில், ஆறு மாதங்கள் நன்றாக சிந்தித்து இந்த முடிவை எடுத்துள்ளதாக கடிதத்தில் தெரிவித்துள்ள அண்ணாமலை, கடந்த ஒன்பது ஆண்டுகால காவல்துறையின் பணியில், ஒவ்வொரு நொடிபொழுதையும் தனது காக்கி உடைக்கான பணியை வாழ்ந்து காட்டியுள்ளதாக தெரிவித்திருக்கிறார்.

காக்கியால் வருகின்ற பெருமையை வேறு எதனுடனும் ஒப்பிட முடியாது என்று தெரிவித்துள்ள அண்ணாமலை, போலீஸ் வேலை கடவுளுக்கு மிகவும் நெருக்கமான வேலை என்று கூறியுள்ளார். தனக்கு பிடித்த ஐபிஎஸ் மதுக்கார் ஷெட்டியின் இறப்பு தனது சொந்த வாழ்க்கையை சுய ஆய்வுக்குட்படுத்தி பார்க்க தூண்டியதாக அண்ணாமலை கூறியுள்ளார்.

இந்திய மக்களவைத் தேர்தலுக்கு முன்னால் பதவியை ராஜிநாமா செய்வதன் மூலம் கஷ்டங்களை வழங்கக்கூடாது என்பதாலேயே, தேர்தல்கள் முடிந்த பின்னர், இந்த முடிவை நிறைவேற்றியுள்ளதாக அண்ணாமலை தெரிவித்திருக்கிறார்.

இனிமேல் தனது நேரத்தை குடும்பத்தோடு செலவிட்டு, விரைவாக வளர்ந்து வரும் மகனோடு மகிழ்ச்சியாக கழிக்க விரும்புவதாகவும் அவர் கூறியுள்ளார்.

சொந்த ஊருக்குச் சென்று விவசாயத்தில் ஈடுபட்டு, எனது ஆடு இன்னும் எனது குரலுக்கு செவிமடுக்கிறதா என்பதை பார்க்க ஆசையோடு இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அண்ணாமலையின் தந்தை பெயர் குப்புசாமி. கரூர் மாவட்டம் சின்னதாராபுரத்திலுள்ள சொக்கம்ப்பட்டி கிராமம்தான் அண்ணாமலையின் பூர்வீகம். கோவையிலுள்ள பிரபல கல்வி நிறுவனம் ஒன்றில் அண்ணாமலை தனது கல்லூரி படிப்பை முடித்துள்ளார். பின்னர் லக்னோவில் உள்ள இந்திய மேலாண்மை நிறுவனத்தில் தனது மேல்படிப்பை படித்துள்ளார்.

2008ஆம் ஆண்டு மும்பையில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல் தனக்குள் சிவில் சர்வீஸ் தேர்வு குறித்த தாக்கத்தை ஏற்படுத்தியதாகவும், ஓய்வுப்பெற்ற போலீஸ் அதிகாரி விஜயகுமார்தான் தனது ரோல் மாடல் என்றும் நேர்க்காணல் ஒன்றின்போது தெரிவித்துள்ளார் அண்ணாமலை.

தமிழகத்தைச் சேர்ந்த முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி, கர்நாடகத்தின் சிங்கம் என்று அடைமொழியோடு அழைக்கப்பட்ட அண்ணாமலை இன்று பாஜகவில் இணைந்தார்.

புது டெல்லியில் இன்று மதியம் நடைபெற்ற நிகழ்ச்சியில், பாஜக தேசிய பொதுச் செயலாளர் முரளிதர ராவ், பாஜக மாநில தலைவர் எல். முருகன் முன்னிலையில் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை பாஜகவில் இணைந்தார்.

நிகழ்ச்சியில் பேசிய அண்ணாமலை,  தமிழகத்தில் பாஜகவை வலுப்படுத்த என்னால் ஆன முயற்சிகளை செய்வேன். பதவியை எதிர்பார்த்து பாஜகவில் இணையவில்லை. சாதாரண தொண்டனாகவே வந்துள்ளேன் என்று கூறினார்.

ஐபிஎஸ் தேர்ச்சி பெற்று கர்நாடக மாநிலத்தில் பணியாற்றிய அண்ணாமலை, பெங்களூரு, சிக்கமகளூரு பகுதிகளில் காவல்துறையின் முக்கியப் பதவிகளை வகித்து, தனது சிறப்பான பணியால் மக்களால் பெரிதும் விரும்பப்பட்டார். 2019-ஆம் ஆண்டு பணியில் இருந்து விருப்ப ஓய்வு பெற்று, சமூக ஆர்வலராக மாறினார். தமிழகத்தில் பல்வேறு சமூகப் பணிகளில் ஈடுபட்டு வந்த அண்ணாமலை, இன்று பாஜகவில் இணைந்துள்ளார்.

முன்னதாக, தான் ஒரு தேசியவாதி மற்றும் பிரதமர் நரேந்திர மோடியின் அபிமானி என்று கூறியிருந்த அண்ணாமலை, அரசியலில் ஈடுபட வேண்டும் என்று நினைத்ததுமே எனது முதல் தேர்வாக இருந்தது பாஜக தான் எனவும் கூறியிருந்தார்.