துருக்கியை சேர்ந்த தனது காதலியை இந்து மத முறைப்படி ஆந்திராவை சேர்ந்த இளைஞன் திருமணம் செய்துள்ளார்.

marriage

ஆந்திர மாநிலம் குண்டூரை சேர்ந்தவர் மது சங்கீர்த். ஐடி துறையில் பணியாற்றி வரும் இவர் 2016-ம் ஆண்டு பணி நிமித்தமாக துருக்கியை சேர்ந்த ஜிஜீம் என்ற இளம்பெண்ணுடன் இணைந்து பணியாற்றியுள்ளார். அப்போது இருவக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் நண்பர்களாக பழகியுள்ளனர்.

அதனைத்தொடர்ந்து  பணி நிமித்தமாக மது சங்கீர்த் துருக்கிக்கு சென்றுள்ளார். அங்கு சங்கீர்த்தும் ஜிஜீமும் அவ்வப்போது சந்தித்து பேசியுள்ளனர். இது நாளடைவில் இருவருக்கும் இடையே காதலாக மாறியுள்ளது.
தங்கள் காதல் குறித்தும் இருவரும் திருமணம் செய்துகொள்ள விரும்புவதாகவும் தங்கள் பெற்றோரிடம் தெரிவித்துள்ளனர். ஆனால் இருவரின் காதலுக்கும் இரு தரப்பிலும் பெற்றோர் முதலில் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

அதன்பிறகு  இருவரின் காதலை உணர்ந்த பெற்றோர் இறுதியாக திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்தனர். இதனையடுத்து காதல் ஜோடி இருவருக்கும் 2019-ம் ஆண்டு நிச்சயதார்த்தம் நடைபெற்றது. ஆனால் கொரோனா தொற்று பரவல், ஊரடங்கு போன்ற காரணங்களால் மது சங்கீர்த் - ஜிஜீம் திருமணம் நடைபெறுவதில் கால தாமதம் ஏற்பட்டது. தற்போது கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதை தொடர்ந்து மது சங்கீர்த் - ஜிஜீம் தம்பதி துருக்கி முறைப்படி அந்நாட்டில் திருமணம் செய்துகொண்டனர். இந்நிலையில் காதல் ஜோடிகள் இருவரும் தற்போது இந்து மத முறைப்படி திருமணம் செய்துகொண்டுள்ளனர்.

ஆந்திராவின் குண்டூரில் மது சங்கீர்த் - ஜிஜீம் தம்பதி கடந்த வியாழக்கிழமை திருமணம் செய்துகொண்டனர். இந்து மத முறைப்படி இந்த திருமணம் நடைபெற்றது. அதன்பின்னர் காதல் தம்பதியரை அவர்களின் பெற்றோர் வாழ்த்தி ஆசி வழங்கினர்.