பெண் ஒருவர், தன்னை தானே திருமணம் செய்து கொண்டு விவாகரத்து பெற்று, தன் பழைய காதலனை திருமணம் செய்துகொண்ட சம்பவம், இணையத்தில் வைரலாகி வருகிறது.

அமெரிக்காவில் தான், இப்படி ஒரு வினோத சம்பவம் அரங்கேறி உள்ளது.

அமெரிக்காவின் மாசாச்சூசெட்ஸ் பகுதியைச் சேர்ந்த 35 வயதான நிக்கோல் ருஸ்ஸோ என்ற பெண்மணி, கடந்த 7 வருடங்களுக்கு முன்பு பாலோ டீ சௌச 
என்னும் இளைஞரை காதலித்து வந்தார்.

நிக்கோல் ருஸ்ஸோவும் - பாலோ டீ சௌச இருவரும் காதலர்களாக அந்த ஊரின் பல்வேறு பகுதிகளுக்கும் சென்று சுற்றிப் பார்த்து காதலர்களாக வலம் வந்தனர்.

இருவரும் நெருக்கமாகப் பழகி வந்த நிலையில், தங்களது காதலை அடுத்து நிலைக்குக் கொண்டு செல்ல முயன்றனர். அதாவது, அந்த காதலர்கள் இருவரும் முறைப்படி திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தனர்.

அதன்படி, காதலர்கள் நிக்கோல் ருஸ்ஸோவும் - பாலோ டீ சௌசக்கு இடையே கடந்த 2013ஆம் ஆண்டு இரு வீட்டார் சம்மதத்துடன் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இதன் காரணமாக, இருவரும் திருமணத்திற்குத் தயார் ஆனார்கள்.

திருமண ஏற்பாடுகளும் முழு வீச்சில் நடைபெற்று வந்தன. திருமண நாள் நெருங்கி வரும் வேளையில், அவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு, திருமணம் அப்படியே நின்றுபோனது. 

இதனால், இளம் பெண் நிக்கோல் ருஸ்ஸோ கடும் மன உளைச்சலுக்கு ஆளானார். அதே நேரத்தில், திருமணம் நின்று சுமார் ஒரு வருடம் வரை இருவரும் அமைதி காத்து வந்த நிலையில், அதன் பிறகு இருவரும் தனித்தனியாகப் பிரிந்து சென்றுள்ளனர். 

மேலும், கடும் மன உளைச்சலுக்கு ஆளான காதலி நிக்கோல் ருஸ்ஸோ, மன அழுத்தத்தில் இருந்த தான் விடப்பட நிக்கோல் ருஸ்ஸோ, தன்னை தானே திருமணம் செய்து கொள்ளப்போவதாக அறிவித்தார். அத்துடன், “நான் என்னை மிகவும் விரும்புகிறேன். என்னையே நான் அளவு கடந்த விரும்புவதால், என் தன்னம்பிக்கையை மேலும் வளர்க்கும் வண்ணம், இந்த முடிவை எடுத்துள்ளதாக” அவர் அதிரடியாக விளக்கம் அளித்தார்.

அதன்படி, கடந்த 2014 ஆம் ஆண்டு இளம் பெண் நிக்கோல் மணமகள் போல் அலங்காரம் செய்து கொண்டு கண்ணாடி முன்பு வந்து நின்று உள்ளார். அதன் பிறகு, கண்ணாடியைப் பார்த்தபடி, தன்னுடைய 2 கைகளிலும் மாறி மாறி மோதிரம் மாற்றிக்கொண்டு திருமணமும் செய்து கொண்டார். இப்படியாக சுமார் 5 ஆண்டு காலம் அவர் வாழ்ந்து வந்தார். 

இந்நிலையில், சுமார் 5 ஆண்டுகளுக்குப் பிறகு தன்னுடைய முன்னாள் காதலன் பாலோவை காதலி நிக்கோல் எதார்த்தமாகப் பார்த்து உள்ளார். இதனால், அவரின் பார்வையால் ஈர்க்கப்பட்ட அவர், பாலோவுடன் மீண்டும் காதல் உறவில் சேர்ந்து உள்ளார். 

இதன் காரணமாக, நிக்கோல் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு தன்னை தானே திருமணம் செய்துகொண்டதை, திரும்பப் பெற்றுக் கொள்வதாக அறிவித்து விட்டு, தனக்கு தானே விவாகரத்தும் பெற்றுக்கொண்டதாகக் கூறப்படுகிறது. 

இதன் தொடர்ச்சியாக, தனது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் காதலன் பாலோவுடன், நிக்கோல் திருமணம் செய்து கொண்டு உள்ளார்.

இது தொடர்பாகக் கருத்து தெரிவித்துள்ள காதலி நிக்கோல், “நான் என்னையே திருமணம் செய்துகொண்ட என்னுடைய சுய திருமணம் என்பது, என்னுடைய  நம்பிக்கையையும் சுயமரியாதையையும் மேம்படுத்தும் விதமாக இருந்தது. என்னுடைய பாதுகாப்பின்மைகளை எதிர்த்துப் போராட அது உதவியது. நான் என்னை மிகவும் மதித்தேன். நேசித்தேன். தற்போது, காதலன் பாலோவிடம் அதே அன்பைக் காண்கிறேன். அதனால், அவரை திருமணம் செய்துகொண்டேன்” என்று விளக்கம் அளித்துள்ளார். இதனால், இந்த திருமண வைபோகம் இணையத்தில் வைரலாகி வருகிறது.