இலங்கையில் மகிந்த ராஜபக்சவை தவிர, மற்ற அனைத்து அமைச்சர்களும் பதவி விலகி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இந்தியாவின் அண்டை நாடான இலங்கையில் மிக கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு, அந்நாட்டு மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். இதனால், பொருளாதார நெருக்கடியால் இலங்கை தற்போது தத்தளித்துக்கொண்டு இருக்கிறது. 

இலங்கையில் தற்போது, அன்னியச் செலாவணி கையிருப்பு கரைந்து போனதால் இறக்குமதி மிக கடுமையான அளவில் பாதிக்கப்பட்டு உள்ளது. 

இதன் காரணமாகவே, இலங்கையில் அத்தியாவசியப் அடிப்படை பொருட்களுக்கு மிக கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டு, அவற்றின் விலையும் கிடுகிடுவென உயர்ந்து உள்ளது. 

இவற்றுடன், அந்நாட்டில் எரிப்பொருட்களுக்கு கடுமையான தட்டுப்பாடுகள் ஏற்பட்டு உள்ளது. அந்நாட்டில் உள்ள பெட்ரோல் நிலையங்களில் வாகன ஓட்டிகள் பல மணி நேரம் காத்துக் கிடந்து, பல மடங்கு அளவுக்கு அதிக விலை கொடுத்து எரிப்பொருட்களை வாங்கிச் செல்கின்றனர்.

குறிப்பாக, இப்படியான பொருளாதார நெருக்கடியால், இலங்கையில் தினமும் 13 மணி நேரம் வரையில் மின்வெட்டு நிலவி வருகிறது. இப்படியான சூழல், அந்நாட்டு மக்களின் இயல்பு வாழ்க்கையில் மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. 

எனினும், இந்தியா உட்பட பல்வேறு நாடுகளும் இலங்கைக்கு உதவிகளை செய்து வரும் நிலையில், சர்வதேச நிதியம் ஐ.எம்.எப்.பின் உதவியை இலங்கை அரசு நாடி வருகிறது.

இந்த நிலையில் தான், இலங்கையில் அந்நாட்டு மக்கள் புரட்சியில் ஈடுபட்டு, அந்நாட்டு பிரதமர் மகிந்த ராஜபக்சவுக்கு எதிராக வீதிகளில் இறங்கி போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், இலங்கையில் புரட்சி வெடித்து உள்ளது.

குறிப்பாக, வெகுண்டெழுந்த இலங்கை மக்கள் ராஜபக்ச சகோதரர்கள் அந்நாட்டு அரசிலிருந்து வெளியேறக் கோரி, கடுமையாக போர்கொடி தூக்கி உள்ளனர். இதனால், அந்நாட்டின் பல இடங்களிலும், ராணுவ வாகன எரிப்பு உள்ளிட்ட வன்முறை சம்பவங்களும் தொடர்ச்சியாக அரங்கேறி வருகின்றன. 

இவற்றடன், கோத்தபய ராஜபக்ச அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகளுடன் சேர்ந்து கூட்டணி கட்சிகளும் போர்க்கொடி உயர்த்தின.

இதனால், பொது மக்களின் போராட்டங்களை கட்டுப்படுத்தும் விதமாக, நேற்றைய தினம் இலங்கையில் முழுமையாக 144 ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. எனினும், இந்த ஊரங்கு கட்டுப்பாட்டையும் மீறி, அந்நாட்டு மக்கள் வீதிகளில் இறங்கி போராடினார்கள். எனினும், போராட்டத்தில் ஈடுபட்ட 100 க்கணக்கான மக்களை, அந்நாட்டு போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

இந்த போராட்டம் காரணமாக, சமூகவலைதளங்களும் முடக்கப்பட்ட நிலையில், தற்போது சமூகவலைதளங்களுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டு உள்ளது.

இந்த சூழலில் தான், நேற்றைய தினம் அந்நாட்டு “பிரதமர் மகிந்த ராஜபக்ச பதவி விலகியதாக” சில செய்திகள் பரவின. 

ஆனால், சிறிது நேரத்தில், இந்த செய்திகள் பொய்யென்று இலங்கை அரசு சார்பில் அந்நாட்டு பிரதமர் அலுவலகம் விளக்கம் கூறியது.

அதன் தொடர்ச்சியாக, தற்போது இலங்கையின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சரும், பிரதமர் மகிந்த ராஜபக்சேவின் மகனுமான நமல் ராஜபக்ச, தனது ராஜினாமாவை அதிகாரபூர்வமாக உறுதி செய்து உள்ளார். இது குறித்து, அவர் தனது சமூக வலைதளங்களில் பதிவிட்டு, உறுதி செய்து உள்ளனர். 

அத்துடன், நமல் ராஜபக்ச மட்டுமின்றி, இலங்கையில் அனைத்து அமைச்சர்களும் தங்களின் ராஜினாமாவை ஒவ்வொருவராக அறிவித்து வருகின்றனர். 

இது குறித்து, அந்நாட்டு ஊடங்கள் வெளியாகும் தகவல் படி, “அதிபர் பதவியிலிருந்து கோட்டாபய ராஜபக்ச பதவி விலக வலியுறுத்தி போராட்டம் வெடித்துள்ள நிலையில், அமைச்சர்கள் அனைவரும் ராஜினாமா செய்திருப்பதால், புதிய அமைச்சரவை விரைவில் அமைக்கப்படும்” என்றும், இலங்கையில் இருந்து வரும் தகவல் தெரிவிக்கின்றன. 

இதனால், இலங்கையில் மகிந்த ராஜபக்ச எப்போது வேண்டுமானாலும் பதவி விலகலாம் என்கிற ஒரு தகவலும் தற்போது வெளியாகி, பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.