ஆப்கானிஸ்தான் விமான நிலையத்தில் திரண்ட மக்களை கட்டுப்படுத்த அங்கு துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதில் 5 பேர் சுட்டுக்கொள்ளப்பட்ட நிலையில், விமானத்தில் ஃபூட்போர்ட் அடித்த 3 பேர் அந்தரத்தில் இருந்து தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் கடும் அதிர்ச்சியையும், பீதியையும் ஏற்படுத்தி உள்ளது.

ஆப்கானிஸ்தான் நாட்டின் பெரும்பாலான பகுதிகளைக் கடந்த ஒரே வாரத்தில் தலிபான்கள் கைப்பற்றிய நிலையில், அந்நாட்டின் தலைநகர் காபூலையும், இன்று தலிபான்கள் சுற்றி வளைத்துக் கைப்பற்றி உள்ளனர். 

அதுவும், ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் விலகியதையடுத்தே, தாலிபான்கள் ஆப்கானிஸ்தானை தற்போது கைப்பற்றி இருக்கிறார்கள்.

ஆப்கானிஸ்தானின் அதிபர் அஷ்ரப் கானி, பதவி விலகியதால் தாலிபான்கள் துணைத் தலைவர் முல்லா பராதார் புதிய இடைக்கால அதிபராகப் பதவியேற்று இருப்பதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.

அத்துடன், ஆப்கானிஸ்தானை தன் வசப்படுத்தியதுடன் முதல் வீடியோவை வெளியிட்டுள்ள தாலிபான்கள் தலைவர், “ஆப்கான் மக்கள் தங்களுடைய வாழ்வை மேம்படுத்திக் கொள்ள வேண்டிய நேரம் இது என்றும், எங்களுடைய சேவையைத் தேசத்துக்கு வழங்குவோம் என்றும், அமைதியை நிலைநாட்டுவோம்” என்றும், பேசியிருக்கிறார்.

அதே நேரத்தில், அந்நாட்டின் முக்க நகரான காபூல் நகரை, தாலிபான்கள் முழுமையாகக் கைப்பற்றியதால், பீதியடைந்த அந்நாட்டின் அப்பாவி மக்கள் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர், ஒரே நேரத்தில் வெளியேற முயற்சி செய்து வருகின்றனர். இதனால், காபூல் விமான நிலையத்தில் ஏராளமான மக்கள் குவிந்தனர்.

அந்த விமான நிலையம் தற்போது நோட்டோ கூட்டுப்படை வசம் வந்திருக்கிறது. இதனால், அங்கிருந்து மக்கள் வெளியேற முயல்வதை அறிந்த தாலிபான்கள், ராணுவ விமானங்களைத் தவிர மற்ற அனைத்து விமானங்களுக்கும் தடை விதித்திருக்கின்றனர். 

அதையும் தாண்டி, அங்குள்ள விமானத்தில் அந்நாட்டு மக்கள் ஆயிரக்கணக்கானோர் முண்டியடித்து ஏற முயன்றனர். அப்போது, அந்த விமான நிலையத்தில் மக்கள் கூட்டத்தைக் கட்டுப்படுத்த பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் அப்பாவி பொது மக்கள் 5 பேர் சுட்டுக்கொல்லப்பட்டடனர்.

துப்பாக்கிச் சூடு குறித்து ஆப்கானிஸ்தானை சேர்ந்த ஒருவர் பேசும் போது, “எனக்கு இங்கு இருப்பது பயமாக இருக்கிறது என்றும், வான்வழித் தாக்குதல்கள் நடக்கின்றன” என்றும், பீதியுடன் தெரிவித்துள்ளார்.

மேலும், காபூலில் இருந்து புறப்படும் அனைத்து விமானங்களும் ரத்து செய்யப்படுவதாகத் தாலிபான்கள் அறிவித்ததால், அங்கிருக்கும் இந்தியர்களை மீட்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. 

மிக முக்கியமாக, ஒரே விமானத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் முண்டியடித்து ஏறி முயன்றும் பலராலும் விமானத்தின் உள்ளே செல்ல முடியவில்லை. இதனால், உயிர் பயத்தில் சிலர் அந்த விமானத்தில் நம்ம ஊர் லோக்கல் பேருந்தில் ஃபூட்போர்ட் அடிப்பது போல், விமானத்தில் ஃபூட்போர்ட் அடித்த சென்றுள்ளனர்.

எனினும், அவசர அவசரமாக இயக்கப்பட்ட அந்த விமானம் மேலே எழுந்து வானில் உயரே பறந்துகொண்டிருந்த போது, விமானத்தில் ஃபூட்போர்ட் அடித்துச் சென்ற 3 பேர் காற்றின் வேகத்தில் மூச்சு திணறி பரிதாபமாகக் கீழே விழுந்தனர். இதில், கீழே விழந்த 3 பேரும் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளன. 

இதனிடையே, ஆப்கானிஸ்தானில் விமானத்தில் ஃபூட்போர்ட் அடித்த 3 பேர் அந்தரத்தில் இருந்து தவறி விழுந்த வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகி கடும் அதிர்ச்சியையும், பீதியையும் ஏற்படுத்தி உள்ளது. இந்த காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.