ஆப்கானிஸ்தான் நாட்டின் தலைநகர் காபூலுக்குள் தலிபான்கள் நுழையத் தொடங்கி உள்ள நிலையில், அந்நாட்டு அதிபர் அஷ்ரப் கானி, நாட்டை விட்டு வெளியேறி 

உள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளதால், வெளியேற விரும்பும் ஆப்கன் மக்களை தலீபான்கள் தடுக்கக் கூடாது என்று, 60 க்கும் மேற்பட்ட உலக நாடுகள் வலியுறுத்தி உள்ளன.

ஆப்கானிஸ்தான் நாட்டின் பெரும்பாலான பகுதிகளைக் கடந்த ஒரே வாரத்தில் தலிபான்கள் கைப்பற்றி வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக, அந்நாட்டின் தலைநகர் காபூலை, இன்று தலிபான்கள் சுற்றி வளைத்து கைப்பற்றி உள்ளனர். 

ஆனால், “தலைநகர் காபலில் தாக்குதல் நடத்தி கைப்பற்றப்போவதில்லை என்றும், அமைதியான அதிகார மாற்றத்திற்காகக் காத்திருக்கிறோம்” என்றும், தலிபான்களின் செய்தித்தொடர்பாளர் சுகைல் சாஹீன் கூறியுள்ளார். 

அதே நேரத்தில், அந்நாட்டில் ஆட்சியை தலிபான்களிடம் ஒப்படைப்பது தொடர்பாக தலிபான்களுடன் பேச்சு வார்த்தை இன்று நடைபெற்றதாகக் கூறப்பட்ட நிலையில், ஆப்கான் அதிபர் அஷ்ரப் கானி, அந்நாட்டை விட்டு வெளியேறி உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. 

மேலும், அந்நாட்டில் இடைக்கால அரசாங்கத்தை அமைக்க அவர் ஒப்புதல் வழங்குவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் உள்ளிட்ட இருவருடன் அவர் நாட்டை விட்டு வெளியேறி இருப்பதாகவும் தகவல்கள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன. 

அத்துடன், அஷ்ரப் கானி எங்கு சென்று உள்ளார்? என்பது குறித்த விவரம் இது வரை வெளியாகவில்லை. கடந்த சில நாட்களுக்கு முன்பு 17 மாகாணங்களை தலிபான்கள் கைப்பற்றிய போது கூட, “நான், நாட்டை விட்டு நான் தப்பியோட மாட்டேன்” என்று, அஷ்ரப் கானி பேசியிருந்த நிலையில், தற்போது அவர் தப்பிச் சென்றிருக்கிறார். 

இதன் காரணமாக, ஆப்கானிஸ்தான் நாடு, தலீபான்கள் வசம் தற்போது சென்றுள்ள நிலையில், அங்கு இடைக்கால அரசு அமைய இருக்கிறது.

தொடர் தாலிபன் தாக்குதல் காரணமாக, காபூல் அமெரிக்க தூதரகம் தற்காலிகமாக அந்நாட்டின் நகர விமான நிலைய வளாகத்துக்கு மாற்றப்பட்டு உள்ளது.

குறிப்பாக, “ரத்த வெள்ளம் ஓடுவதைத் தவிர்க்கவே வெளியேறியதாக” ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறிய முன்னாள் அதிபர் அஷ்ரப் கானி தகவல் வெளியிட்டு இருக்கிறார்.

அதே நேரத்தில், காபூலில் இருந்து இந்தியர்களையும், இந்திய தூதரக ஊழியர்களையும் அவசரமாக அழைத்து வருவதற்காக இந்திய விமானப்படையின் சி-17 குளோப்மாஸ்டர் ராணுவ சரக்கு விமானம் தயார் நிலையில் வைக்கப்பட்டு இருப்பதாக மத்திய அரச தெரிவித்துள்ளது.

அதே நேரத்தில் “ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறும் அந்நாட்டு மக்களையும், வெளிநாட்டவர்களையும் செல்வதற்கு எந்த இடையூறும் இன்றி அனுமதிக்க வேண்டும்” என்று, அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து உள்ளிட்ட 60 நாடுகள் வலியுறுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.