ஆப்கானிஸ்தான் நாட்டில்  தலிபான்களை எதிர்க்க புதிய கொரில்லா படை மற்றும் ராணுவம் தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஆப்கானிஸ்தான் நாட்டில் தாலிபன்கள் ஆட்சியைக் கைப்பற்றி உள்ளனர். அந்நாட்டில், கடந்த காலங்களில் தாலிபன்களின் ஆட்சியில் பெண்கள், குழந்தைகளின் பாதுகாப்பு கேள்விக்குறியானதாகப் பகிரங்கமாகக் குற்றம்சாட்டப்பட்ட நிலையில், அது போன்ற பீதியே தற்போதும் அந்நாட்டில் நிலவி வருவதாகக் கூறப்படுகிறது.

அதே நேரத்தில், பெண் அடிமைத்தன அடையாளத்தை மாற்ற தாலிபன்கள் புதிதாக முயற்சித்து வருவதாகவும் கடந்த சில தினங்களாகச் செய்திகள் வெளிவந்த வண்ணம் இருந்தன.

ஆனால், ஆப்கானிஸ்தானில் அரசு ஊடகத்தில் வேலை செய்த பெண் ஊழியர்களைத் தாலிபான்கள் அதிரடியாகப் பணி நீக்கம் செய்துள்ளனர்.

இதன் காரணமாக, ஆப்கானிஸ்தானில் உள்ள பெண்களின் கல்வி, வேலை, சுதந்திரம் ஆகியவை உறுதி செய்யப்பட வேண்டும் என ஐரோப்பிய ஒன்றியம் தாலிபான்களை வலியுறுத்தி உள்ளது.

அத்துடன், தலிபான் தீவிரவாதிகள் எந்த நேரத்திலும் அடக்குமுறையிலும், அட்டூழியங்களிலும் ஈடுபடலாம் என்று பீதி நிலவுவதால். அந்நாட்டு மக்கள் தங்கள் குடும்பத்தாருடன் நாட்டை விட்டுச் செல்லும் அவல நிலையும் அங்கு ஏற்பட்டு இருக்கிறது.

அதே நேரத்தில், அந்நாட்டில் இது வரை அமெரிக்கா சார்பில் ஆப்கனை சேர்ந்த 7 ஆயிரம் பேரை, அந்நாட்டை விட்டு வெளியேற்றி இருக்கிறது.

இந்தச் சூழலில் தான், காபூல் விமான நிலையத்துக்கு உரிய ஆவணங்களுடன் வேறு நாட்டுக்குப் பயணிக்க வரும் மக்களையும் தலிபான்கள் அனுமதிக்க மறுத்து வருகின்றனர்.

அதே சூழலில், ஆப்கானை தலிபான்கள் கைப்பற்றி உள்ளதால், அந்நாட்டின் மீதான சர்வதேச பார்வை தற்போது மேலும் அதிகரித்து உள்ளது.

அந்நாட்டில் நடக்கும் சம்பவங்கள் சர்வதேச சமூகத்தைக் கவலையடையச் செய்திருக்கிறது.

அமெரிக்க அரசுப் படைகளுக்கும், தலிபான்களுக்கும் இடையே கடந்த 20 ஆண்டுகளாக நடந்த போர் முடிவுக்கு வந்து உள்ளதால், அமெரிக்கப் படைகள் வெளியேறி வருகின்றன. சர்வதேச நாடுகள் தலிபான் ஆட்சியை அங்கீகரிக்கவில்லை என்பதால், ஆப்கான் நாட்டின் பொருளாதாரம் கடும் நெருக்கடி நிலையைச் சந்தித்து வருகிறது.

“தாலிபான்கள் ஆட்சி என்பது மிகவும் பழைமை வாய்ந்தது என்றும், பெண்கள் படிக்கக் கூடாது, வெளியே வந்தால் தனியாக வரக்கூடாது உள்ளிட்ட பல பழமையான சிந்தனைகளைக் கொண்டது” என்றும், விமர்சிக்கப்பட்டு வருகிறது.

இதனால், அந்நாட்டுக்கள மக்கள் முற்றிலுமாக அச்சம் அடைந்த நிலையிலேயே இருந்து வருகின்றனர்.

மேலும், அந்நாட்டை விட்டு ஆப்கான் அதிபர் தப்பி ஓடி உள்ள  நிலையில், “சட்டப்படி நானே அதிபர்” என்று, தற்போது துணை அதிபராக இருக்கும் அம்ருல்லா சாலே டிவிட்டரில் தகவல் தெரிவித்து உள்ளார்.

இந்த நிலையில் தான், “ஆப்கானிஸ்தானை தாலிபான்கள் முழுமையாக கைப்பற்றவில்லை என்றும், அவர்களை அழிக்கத் தாலிபான் எதிர்ப்பு கொரில்லா படை மற்றும் ஆப்கான் ராணுவம் தற்போது மீண்டும் தயாராகி வருகிறது” என்றும், ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக, இது குறித்து கருத்து கூறிய ஆப்கான் துணை அதிபர் அம்ருல்லா சாலே, “தலிபான்களிடம் அடிபணியப் போவதில்லை என்றும், தன் குருநாதர் அகமதுஸாதின் மகன் அகமது மசூத் உடன் இணைந்து பங்ஷீர் மலைப் பகுதியில் தலிபான்களுக்கு எதிரான கொரில்லா படையைத் தயார் செய்து வருவதாகவும், போர் பயிற்சியில் ஈடுபட்டு வருவதாகவும்” அவர் கூறியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளது.