“இரு வேறு தடுப்பூசி போட்டுக்கொண்டால் கூடுதல் நோய் எதிர்ப்பு சக்தி கிடைப்பதாக” சுவீடன் நாட்டு ஆய்வில் தற்போது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

சீனாவின் உகான் நகரில் கடந்த 2019 ஆம் ஆண்டு இறுதியில் பரவியதாகக் கூறப்படும் கொரோனா வைரஸ், தொடர்ந்து புதிது புதிாக உருமாறிக்கொண்டே வந்த நிலையில், தற்போது 2 அலையாகப் பரவிய நிலையில், அதன் தாக்கம் சற்று குறைந்து காணப்பட்டு வருகிறது. 

அத்துடன், இந்த கொரோனா தடுப்பூசிகள் பொது மக்களுக்குப் போடப்பட்டு வரும் அதே வேளையில், அந்த ஊசி தொடர்பான வதந்திகளும், எதிர் மறையான கருத்துக்களும் தொடர்ந்து முன் வைக்கப்பட்டு வருகின்றன.

இப்படியான சூழலில் தான், இந்தியா உட்பட பல உலக நாடுகளில் கொரோனா தடுப்பூசி திட்டம் நாளுக்கு நாள் வேகம் எடுத்து வருகிறது. 

இவற்றுடன், குழந்தைகளுக்குப் பாலூட்டும் தாய்மார்கள், இந்த கொரோனா தடுப்பூசியைப் போட்டுக்கொள்ளலாமா?” என்கிற சந்தேகமும் கடந்த சில மாதங்களாக எழுந்து உள்ளன.

மேலும், கடந்த சில மாதங்களுக்கு முன்பு பேசிய பிரதமர் மோடி கூட, “கொரோனாவை இந்தியாவில் முற்றிலுமாக ஒழிக்க, கடைசி வரை நாம் தடுப்பூசியைக் கொண்டுசெல்ல வேண்டியது நம் கடமை என்றும், எப்போதும் கிடைக்கும் வகையில் தடுப்பூசி உற்பத்தி நிரந்தரமாக இந்தியாவில் இருக்கும்” என்றும், அவர் நம்பிக்கைத் தெரிவித்தார்.

எனினும், உலகம் முழுவதும் கொரோனா தடுப்பூசியைப் பற்றிய ஆராய்ச்சிகள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.

இந்த சூழலில் தான், தடுப்பூசியைப் பற்றிய ஆராய்ச்சியில் ஒரு புதிய விசயம் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. 

அதாவது, “முதலில் அஸ்ட்ராஜெனிகா தடுப்பூசியும், 2 வது தவணையாக பைசர் தடுப்பூசியும் போட்டுக்கொண்டால் கொரோனாவுக்கு எதிராகக் கூடுதல் நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும்” என்று, சுவீடன் நாட்டில் நடந்த ஆய்வில் கண்டறியப்பட்டு உள்ளது. 

இந்த ஆய்வு முடிவுகள், பிரபலமான ஐரோப்பிய பத்திரிகையான லான்செட் இதழில் வெளியிடப்பட்டு இருக்கிறது.

இந்த ஆய்வுக்காக 7 லட்சம் பேர் பயன்படுத்தப்பட்டு உள்ளனர் என்றும், 2 டோஸ் போட்ட பிறகு, அவர்கள் இரண்டரை மாதங்கள் தொடர் கண்காணிப்பில் வைக்கப்பட்டனர் என்றும், இதில் 2 வெவ்வேறு தடுப்பூசி போட்டவர்களுக்கு கொரோனா தாக்கும் ஆபத்து 67 சதவீதம் குறைவாக இருப்பதும், அந்த ஆய்வின் மூலம் தெரிய வந்திருக்கிறது.

ஆனால், 2 தவணையும் அஸ்ட்ராஜெனிகா தடுப்பூசி போட்டிருந்தால், நோய் அபாயம் 50 சதவீதம் தான் குறைவாக இருப்பதாகவும், அந்த ஆய்வில் கண்டறியப்பட்டு உள்ளது.