இத்தாலி நாட்டில் 20 மாடிகளைக் கொண்ட அடுக்குமாடிக் குடியிருப்புக் கட்டடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டு உள்ளது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
 
இத்தாலி நாட்டில் உள்ள மிலன் நகரில் 20 மாடிகள் கொண்ட அடுக்கு மாடி குடியிருப்பு ஒன்று உள்ளது. இதில், 100 க்கணக்கான குடும்பங்கள் வசித்து வந்தனர்.

இந்த நிலையில் தான், இந்த 20 மாடிகள் கொண்ட அடுக்கு மாடி குடியிருப்பில் பட்ட பகலில் திடீரென்று தீ பற்றி எரிந்து உள்ளது.

முதலில், அந்த குடியிருப்பின் 15 வது மாடியில் தான் தீ பற்றியிருப்பதாகக் கூறப்படுகிறது. அதன் பிறகே, அங்கிருந்து, தீ மளமளவென்று, மற்ற மாடிகளுக்கும் பரவி உள்ளது. 

இதனால், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த 50 க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்களில் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், தீயை அணைக்க போராடினார்கள். 

எனினும், அந்த 20 மாடி கட்டத்தின் எல்லா பகுதியிலும் தீ முழுவதுமாக பரவி, கொழுந்துவிட்டு எரிந்ததால் அடுக்குமாடி கட்டிடத்திற்குள் சென்று மீட்பு பணியைத் தொடர்வதில் வீரர்களுக்கு பெரும் சிக்கல் ஏற்பட்டது.

ஆனாலும், மிலன் நகரில் உள்ள அந்த 60 மீட்டர் உயர கட்டடத்திற்குள் 50 க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள், உள்ளே நுழைந்து கிட்டதட்ட 20 க்கும் மேற்பட்ட மக்களை அங்கிருந்து பத்திரமாக மீட்டனர். 

அப்போதும், அந்த கட்டிடத்தின் வெளிப் பகுதியிலும் தீ கொழுந்துவிட்டு எரிந்ததால், அடுக்குமாடி கட்டடத்திற்குள் சென்று மீட்புப்பணியைத் தொடர்வதில் பெரும் சிக்கல் ஏற்பட்டு உள்ளது.

மேலும், இந்த 20 மாடி கட்டடத்தில் தீ கொழுந்து விட்டு எரிந்த போது, விண்ணை முட்டும் அளவுக்கு கரும்புகைகள் சூழ்ந்து வெளியேறியது. 

அத்துடன், “ இந்த தீ விபத்தில் வேறு யாரேனும் சிக்கி இருக்கிறார்களா? வேறு யாரேனும் உயிரிழந்திருக்கிறார்களா?” என்பது பற்றிய எந்த தகவலும் இது வரை வெளியாக வில்லை.

இந்த 20 மாடி கட்டடத்தில் தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து அந்நாட்டு போலீசார், வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

இதனிடையே,  20 அடுக்கு மாடி குடியிருப்பு கட்டடம் கொழுந்துவிட்டு எரிந்த வீடியோ மற்றும் புகைப்படங்கள் வெளியாகி, உலகம் முழுவதும் தற்போது வைரலாகி வருகின்றன.