300 சிறுவர்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்த வழக்கில் 70 வயது டாக்டருக்கு 15 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது. 

பிரான்ஸ் நாட்டில் தான், இப்படி ஒரு கொடூர சம்வம் அரங்கேறி, அதற்கான தண்டனையும் வழங்கப்பட்டு உள்ளது.

பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த 70 வயது டாக்டரான ஜோயல் லே ஸ்கவுர்னெக் என்பவர், அந்நாட்டில் மதிப்பு மிக்க டாக்டராக வலம் வந்திருக்கிறார். 

மேலும், டாக்டர் ஜோயல் லே ஸ்கவுர்னெக், பல சிறுவர்களை பாலியல் வன்கொடுமை செய்து, அவர்களைத் துஷ்பிரயோகம் செய்துள்ளதாகப் பாதிக்கப்பட்ட சிறுவர்களின் பெற்றோர்கள் அடுத்தடுத்து தொடர்ச்சியாக குற்றம்சாட்டி வந்தனர். 

இது தொடர்பாக அந்நாட்டு போலீசார், டாக்டர் ஜோயல் லே ஸ்கவுர்னெக் மீது வழக்குப் பதிவு செய்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையில், பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.

அதாவது, இந்த வழக்கின் விசாரணையின் போது, டாக்டருக்கு சொந்தமான சில டைரிகளை அந்நாட்டு போலீசார் கண்டுபிடித்து உள்ளனர். அந்த டைரியில்,  குழந்தைகளுடன் தமக்கு இருக்கும் பாலியல் உணர்வுகளை காட்சிகளாக வர்ணித்து, அந்த டாக்டர் எழுதி செய்திருந்து உள்ளார். 

மேலும், “ இது ஒன்றும் தவறில்லை என்றும், இது ஒரு வகையான உணர்வு மட்டுமே என்றும், அந்த டைரியில் அவர் குறிப்பிட்டு இருந்திருக்கிறார்” என்றும், போலீசார் தரப்பில் கூறப்பட்டு உள்ளது. 

குறிப்பாக, கடந்த 1986 ஆம் ஆண்டு முதல் 2014 ஆம் ஆண்டு வரை சுமார் 312 சிறுவர்களை அவர் துஷ்பிரயோகம் செய்து உள்ளார் கூறப்படுகிறது. இது தொடர்பான ஆதாரங்கள் தங்களிடம் இருப்பதாக அரசு தரப்பு சட்ட வழக்கறிஞர்கள் தெரிவித்து உள்ளனர்.

அத்துடன், டாக்டர் ஜோயல் லே ஸ்கவுர்னெக்கிடம் முழுவதுமாக விசாரணை மேற்கொள்ளப்பட்ட நிலையில், தன் மீதான குற்றச்சாட்டுகளை விசாரணை காலகட்டத்தில் அவர் ஒப்புக்கொண்டார் என்றும், போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

டாக்டர் ஜோயல் லே ஸ்கவுர்னெக்கிடம் முழுவதுமாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு நிலையில், அதன் தொடர்ச்சியாக அவர் அந்நாட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், சிறுவனை பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்திற்காக, டாக்டர் ஜோயல் லே ஸ்கவுர்னெக்கிற்கு அதிக பட்சமாக 15 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தனர்.

முக்கியமாக, இந்த 70 வயது டாக்டர் ஜோயல் லே ஸ்கவுர்னெக்கிற்கு எதிரான குற்றச்சாட்டில், தற்போது 4 வழக்குகளில் மட்டும் அவர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு, அதற்குத் தீர்ப்பும் வழங்கப்பட்டு உள்ளது. ஆனால், இந்த 4 வழக்குகள் தவிர, அவர் மீது மேலும் பல வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும் கூறப்படுகிறது. அந்த வழக்கின் விசாரணைகளும் முடிவடைந்தால், அவருக்கு மேலும் பல ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படலாம் என்றும், அந்நாட்டின் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த சம்பவம், அந்நாட்டில் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.