19 மாடி கட்டிட குடியிருப்பில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 9 குழந்தைகள் உள்பட மொத்தம் 19 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அமெரிக்காவில் தான் இப்படியான ஒரு கோர விபத்து அரங்கேறி இருக்கிறது.

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் 19 தலங்களைக் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் 100 க்கணக்கான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

இந்த 19 மாடிகள் கொண்ட குடியிருப்பில் நேற்றைய தினம் திடீரென தீ விபத்து ஏற்பட்டு உள்ளது. 

அதிலும் குறிப்பாக, அந்த கட்டிடத்தில் 3 வது மாடியில் இருந்த வீடு ஒன்றில் பற்றிய தீயானது, கண் இமைக்கும் நேரத்தில் மளமளவென்று பரவி, அந்த குடியிருப்புக் கட்டடத்தில் உள்ள அனைத்துத் தளங்களுக்கும் அதிக வேகமாக பரவி உள்ளது. 

இந்த தீ விபத்தில் அந்த குடியிருப்பில் இருந்த 100க் கணக்கானோர் அப்படியே சிக்கிக் கொண்டனர்.  

அத்துடன், இந்த தீ விபத்து குறித்து, உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், இது குறித்து விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர், நீண்ட நேரம் போராடி தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். 

சுமார் 200 க்கும் அதிகமாக மீட்பு படையினர் மற்றும் தீயணைப்பு வீரர்கள் துரிதமாக செயல்பட்டு மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

எனினும், இந்த பயங்கரமான தீ விபத்தில் 9 குழந்தைகள் உள்பட மொத்தம் 19 பேர் தீயில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர். 

மேலும், இந்த தீ விபத்தில் பலர் தீயில் கருகியும், தீ விபத்தினால் எற்பட்ட புகை காரணமாக மூச்சுத்திணறல் ஏற்பட்டும் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

அத்துடன், பலரும் படுகாயம் அடைந்துள்ளதாகவும், அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.

குறிப்பாக, அந்த குடியிருப்பில் 60 க்கும் மேற்பட்டோர், தீ கயங்களுடன் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர். 

இவர்களில் பலரும் உயிருக்கு ஆபத்தான நிலையில் அதுவும் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன.

இது குறித்து தீயணைப்பு வீரர்கள் கூறும்போது, “இது மிகவும் மோசமான தீ விபத்து என்றும், அந்த குடியிருப்பில் சிக்கிய பலருக்கும் அதிகப்படியான மூச்சுத்திணறல் ஏற்பட்டு மாரடைப்பு ஏற்பட்டுள்ளதாகவும்” அவர்கள் கவலை தெரிவித்து உள்ளனர்.

இந்த தீ விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள அமெரிக்க போலீசார் மேற்கொண்ட முதல் கட்ட விசாரணையில், “மின்சார ஹீட்டரில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாகவே, இந்த தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம்” என்பது தெரியவந்துள்ளதாக அவர்கள் கூறியுள்ளனர்.

இது குறித்து, போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். முன்னதாக கடந்த 5 ஆம் தேதி புதன் கிழமை அன்று அமெரிக்காவில் உள்ள பிலடெல்ஃபியாவில் இருக்கும் ஒரு குடியிருப்பில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் அப்போது 12 பேர் உயிரிழந்தனர். தற்போது, அதன் தொடர்ச்சியாக அதுவும் ஒரு வாரத்திற்குள்ளாக அமெரிக்காவில் ஏற்பட்ட மற்றொரு பயங்கர தீ விபத்தில் குழந்தைகள் உட்பட 19 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் அமெரிக்க மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.