விநாயகர் சதுர்த்தி தினத்தில், அதிகாலையில் நீராடி நித்ய கர்மங்களை நிறைவேற்ற வேண்டும் என சொல்லப்படுவது உண்டு. வழிபாட்டுக்குப் பிறகு, பூஜை நடைபெறும் இடத்தைச் சுத்தப்படுத்தி, மாக்கோலமிட்டு அலங்கரிக்க வேண்டும். அன்று மண்ணால் பிள்ளையார் விக்கிரகம் செய்து வைத்து வழிபடுவது விசேஷம் என சொல்வார்கள்.

பொதுவாக ஆவணி மாதத்தில் வரும் வளர்பிறை சதுர்த்தி திதியை விநாயகர் சதுர்த்தியாக கொண்டாடப்படும். அன்றைய தினம் விநாயகப்பெருமானை முழுமனதோடு பூஜித்து விரதமிருந்து, அருகில் உள்ள ஆலயத்திற்குச் சென்று மக்கள் வழிபட்டு வருவார்கள்.

அதன்பின் அழகான குடை அமைத்து, அதன் கீழ் விநாயகரை அமர்த்தி, அருகம்புல், வெள்ளெருக்கு மாலை சார்த்தி, சந்தனகுங்கும திலகமிட்டு  அலங்கரிக்கலாம். நைவேத்தியமாக பழங்கள், அச்சு வெல்லம், அவல், பொரிகடலையுடன், சுண்டல் மற்றும் கொழுக்கட்டையை தாம்பூலத்துடன் சமர்ப்பிப்பர். பின்னர், விநாயகர் ஸ்லோகங்கள், துதிகள் பாடி, தூப தீப உபசாரங்கள் செய்து வழிபட வேண்டும். பின்னர்,  குறிப்பிட்டதொரு நன்னாளில், விநாயகர் விக்கிரகத்தை ஊர்வலமாக எடுத்துச் சென்று நீர்நிலையில் சேர்க்கப்பட்டு, அது கரைக்கப்படும்.

ஆனால் இந்தச் சூழல் அனைத்தையும் புரட்டி போட்டுள்ளது, இந்த வருடம். 2020 முழுக்கவே, கொரோனாவால் முடங்கிப்போய்விட்டது. மக்களுக்கு மட்டுமன்றி, கடவுள் வழிபாட்டையும் கொரோனா முழுவதுமாக முடக்கிப்போட்டுள்ளது.

இப்படியான சூழலில், தமிழகத்தில் இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி பண்டிகையை மக்கள் வீட்டிலேயே கொண்டாட வேண்டும் என்று அரசு கேட்டுக்கொண்டுள்ளது. சிலைகளை வைப்பதற்கும், ஊர்வலத்திற்கும் அனுமதியில்லை என்றும் அரசு கூறியுள்ளது.

தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:

தமிழ்நாட்டில் விநாயகர் சதுர்த்தி பண்டிகை 22ஆம் தேதி கொண்டாடப்பட இருக்கிறது.

தொற்று நோய் பரவலை தடுக்கவும், பொதுமக்களின் நலன் கருதியும், பொது இடங்களில் மக்கள் அதிகமாக கூடுவதை தவிர்க்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

* தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி பண்டிகையை அவரவர் வீடுகளிலேயே கொண்டாட வேண்டும்.

* விநாயகர் சதுர்த்தியையொட்டி பொது இடங்களில் விநாயகர் சிலை வைக்க அனுமதி இல்லை

* பொது இடங்களில் விநாயகர் சிலை வைக்க, ஊர்வலமாக எடுத்து சென்று கரைக்க அனுமதி இல்லை

* அரசு வெளியிட்ட வழிகாட்டுதலுடன் சிறிய கோவில்களில் விநாயகர் சதுர்த்தியன்று வழிபாடு செய்ய அனுமதி

கொரோனா பொதுமுடக்கம் அமலில் உள்ளதால் முன்னெச்சரிக்கையாக தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. கொரோனா பரவலை தடுக்கவும், மக்கள் நலன் கருதியும் கட்டுப்பாடுகளை தமிழக அரசு விதித்துள்ளது

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.