தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தீவிரமடைந்து வரும் நிலையில், இன்றைய தினம் தமிழக ஆளுநரின் உதவியாளருக்கு கொரோனா தொற்று உறுதியாகியிருந்தது. அதிகாரத்தில் இருப்பவர்கள், மக்கல் பணியில் இருப்பவர்கள், முதல் நிலை களப்பணியாளர்கள் போன்றோருக்கு கொரோனா தொற்று தொடர்ச்சியாக உறுதிசெய்யப்பட்டு வருகின்றது. பொதுமுடக்கம் நேரத்திலும் அதிகம் பேரோடு தொடர்பில் இருப்பவர்கள் இவர்கள்தான் என்பதால், இவர்களுக்கு உறுதிசெய்யப்படும்போது, சூழல் சற்றே சிக்கல் நிறைந்ததாக மாறிவிடுகின்றது.

இப்படியொரு சிக்கலான சூழல்தான், இப்போது தமிழக ஆளுநர் விஷயத்திலும் நடந்துள்ளது. கிண்டி சர்தார் படேல் சாலையில் பல 100ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள ஆளுநர் மாளிகையில் நூற்றுக்கணக்கான ஊழியர்கள் பணியாற்றுகிறார்கள். அவர்களில், பாதுகாப்பு படை வீரர்கள் மற்றும் தீயணைப்பு வீரர்கள் உள்பட 84 பேருக்கு சில தினங்களுக்கு முன் கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டது.  அதனை தொடர்ந்து ஆளுநர் மாளிகையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த மேலும் சிலருக்கு கொரோனா தொற்று இருப்பதாக சொல்லப்பட்டது.

பரிசோதனை செய்தததில், மேலும் நால்வருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளதாக  ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு சொல்கிறது. 

அதிலொருவராக, தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தின் உதவியாளர் தாமஸூக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. ஏற்கனவே பலருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில், ஆளுநரின் உதவியாளருக்கும் கொரோனா தொற்று உறுதியானது மிகவும் தீவிரமான பேசுபொருளாக தற்போது மாறியுள்ளது.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும், தற்போது சுகாதாரத் துறையால் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இவர்கள் யாரும் ஆளுநர் அல்லது ராஜ் பவனின் மூத்த அதிகாரிகளுடன் தொடர்பு கொள்ளவில்லை என்று கூறப்பட்டிருந்தது. ஆளுநருடன் நேரடி தொடர்பில் இருநந்து, உதவியாளர் தாமஸ் மட்டும்தான். அவருக்கு கொரோனா உறுதியானதால், தற்போது ஆளுநர் தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.

அவர் தற்போது நலமாக இருப்பதாகவும், உடல்நிலை நன்றாகவே இருக்கிறது என்றும் தகவல் வெளியாகியுள்ளது. 

இப்போதுவரை தமிழகத்தில் சமூக பரவல் இல்லை என சொல்லிவரும் அரசு, தன் அதிகாரிகளே கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையிலும்கூட, சமூக பரவல் விஷயத்தில் பின்வாங்குவதாக தெரியவில்லை. அதேநேரம் தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு, பலி ஆகிய எண்ணிக்கைகள் உயர்ந்துக்கொண்டே போகின்றது. இனிவரும் நாள்களில், தடுப்பு நடவடிக்கைகள், பொது முடக்கம் நீட்டிக்கப்படுமா, விலக்கிக் கொள்ளப்படுமா என்பது கேள்விக்குறியாக இருக்கிறது.

தமிழகத்தை போலவே, அண்டை மாநிலமான ஆந்திராவிலும் நிலைமை கட்டுக்குள் இல்லை. ஆந்திரா மாநிலத்தில், இன்று ஒரு நாளில் மட்டும் 10,000 - க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. 7,000 ஒட்டிய தினமும் புதிய நோயாளிகள் கண்டறியப்பட்டுவந்த நிலையில், இன்று ஒஏ நாளில் 10,000 பேருக்கு உறுதிசெய்யப்பட்டிருந்து, அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கேரளாவில் மட்டும், நிலைமை ஓரளவு கட்டுக்குள் இருப்பதாக சொல்லப்பட்டு வருகின்றது. வரும் நாள்களில், அனைத்து இடங்களிலும் பாதிப்பு இன்னும்கூட அதிகரிக்கலாம் என்றே மருத்துவர்களும் அறிவியலாளர்களும் கணித்து வருகின்றனர்.

இருப்பினும் ``தமிழகத்தில் வீடு வீடாக சென்று பரிசோதனை நடத்தப்படுகிறது. கொரோனா தடுப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. நாளொன்றுக்கு 63 ஆயிரம் கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. மருத்துவ உபகரணங்கள் தேவையான அளவில் கையிருப்பில் உள்ளன. பிளாஸ்மா சிகிச்சையின் மூலம் குணமடைவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது" என்று நம்பிக்கை தெரிவித்திருக்கிறார் தமிழக முதல்வர் பழனிச்சாமி