சென்னையில், ஒரே நாளில் 191 கர்ப்பிணிகளுக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டிருக்கிறது. ஒரேநாளில் இத்தனை பேருக்கு கர்ப்பிணிகளுக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டிருப்பது இதுவே முதன்முறை என்பதால் பலருக்கும் இந்தச் செய்தி அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக கர்ப்பிணிகளுக்கு தொற்று குறித்து பயம் இப்போது ஏற்பட்டுள்ளது.

கர்ப்பிணிகள் இந்தக் கொரோனா நேரத்தில் எப்படியான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்து மகப்பேறு மருத்துவர் வினுதா அருச்சாலத்திடம் கேட்டோம்.

``இந்த இடத்தில், கர்ப்பிணிகளுக்கு ஆபத்து என்று பொதுவாக எடுத்துக்கொள்ள வேண்டாம். ஆரோக்கியமான ஓர் நபர் எப்படி கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்கிறாரோ அப்படி மேற்கொண்டாலேவும், கர்ப்பிணிகள் தங்களையும் குழந்தையையும் தற்காத்துக் கொள்ளலாம். மருத்துவமனை செல்லும் நிலை அல்லது அங்கேயே அட்மிட் ஆகும் நிலை ஏற்பட்டால்தான் கர்ப்பிணிகளுக்கு அபாயம் ஏற்படுகிறது. 

எல்லா கர்ப்பிணிகளும், அன்றாடம் மருத்துவமனைக்கு செல்லப்போவதுமில்லை, அட்மிட்டாகி சிகிச்சை பெறப்போவதும் இல்லை. அதனால்தான், எல்லா கர்ப்பிணிகளுக்கும் தொற்று அபாயம் என நினைத்து பயப்பட வேண்டாம் என சொல்கிறேன்.

சரி, மருத்துவமனைக்கு செல்லும் / அட்மிட்டாகும், கர்ப்பிணிகள், தங்களின் பாதுகாப்புக்கு, என்னவெல்லாம் செய்ய வேண்டும்? இதோ சில ஆலொசனைகள்....

* அடுத்தடுத்த வாரத்தில் பிரசவத்துக்கு தயாராகும் பெண்கள், இப்போதைக்கு அச்சத்தை விடுத்துவிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றுங்கள். உங்கள் மருத்துவரின் அறிவுரையை, அப்படியே பின்பற்றுங்கள்.

* பிரசவ தேதி நெருங்கும் போது, உங்கள் மருத்துவரிடம் பேசி, வலி வந்தால் எப்படி மருத்துவமனை வர வேண்டும் என்பதை இப்போதே திட்டமிட்டுக் கொள்ளுங்கள். 

* கட்டாயமில்லை என்றால், கர்ப்பிணிகள் யாரும் இப்போதைக்கு மருத்துவமனை செல்லாதீர்கள். எவ்வளவு தூரம், வீட்டுக்குள்ளேயே சுயசுத்தத்துடன் இருக்கின்றீர்களோ, அந்தளவுக்கு உங்களுக்கும் சிசுவுக்கும் நல்லது.

* ஸ்கேன் எடுக்க வேண்டுமெனும் கர்ப்பிணிகள், நீங்கள் 5 மற்றும் 9 - ம் மாதத்தில் இருந்தால் மட்டும் இப்போதைக்கு ஸ்கேன் எடுக்க செல்லுங்கள். இல்லையென்றால், ஷெட்யூலை மருத்துவ ஆலோசனையோடு தள்ளிவைக்கவும்.

* கர்ப்பிணி இருக்கும் வீட்டிலுள்ளவர்கள், சுத்தத்தோடு இருங்கள். வெளியில் சென்றுவிட்டு வந்தால், உடனடியாக குளிக்கவும்.

இந்த விஷயத்தில், கர்ப்பிணிகள் மட்டுமன்றி, மருத்துவமனை சார்பிலும் சில நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். குறிப்பாக

* அட்மிட் ஆகும் கர்ப்பிணிக்கு, கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு, முடிவு பெறப்பட்டிருக்க வேண்டும். பாசிடிவ் என்றால், அதற்கேற்றார்போலவும் - நெகடிவ் என்றால் அதற்கேற்றார்போலவும் பிரசவம் பார்க்கப்பட வேண்டும்.

* ஒருவேளை பரிசோதனை முடிவு வரவில்லை என்றால், முடிவு வரும் வரை, அவரையும் கொரோனா நோயாளியை அணுகுவது போல பாதுகாப்பு வழிமுறைகளோடு அணுக வேண்டும். 

* ஆலோசனைக்கு வரும் கர்ப்பிணிக்கு, ஒவ்வொரு முறை தொற்றுக்கான அறிகுறிகள் ஏதுமுள்ளதா என பரிசோதிக்கப்பட வேண்டும்.

* பிரசவத்துக்குப் பிறகு, ஒவ்வொரு குழந்தைக்கும் தொற்றுக்கான பரிசோதனை செய்யப்படுவது சிறப்பு. முடிவு வரும்வரை, குழந்தையை மிகவும் பாதுகாப்பாக வைத்திருப்பது அவசியம்.

கர்ப்பிணிகள், மேற்சொன்ன இந்த விஷயங்களெல்லாம், நீங்கள் ஆலோசனைப் பெறும் மருத்துவமனையில் இருக்கிறதா என்பதை உறுதிசெய்துக் கொண்டு, அதற்கேற்ப மேற்கொண்டு சிகிச்சைப் பெறவும்"

என முடித்தார் வினுதா அருணாச்சலம்

- ஜெ.நிவேதா