தமிழகத்தில் நேற்றைய தினம் புதிதாக 5,976 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டிருந்தது. உயிரிழப்பை பொறுத்தவரையில், நேற்றொரு நாளில் 76 பேர் பலியாகியிருந்தனர். 

இதில் தமிழகத்தில் மட்டும் பாதிக்கப்பட்டவர்கள் 5,951. வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளிலிருந்து வந்தவர்கள் 25 பேர். இதுவரை தமிழகத்தில் ஏற்பட்ட மொத்த பாதிப்பு 4,51,827 ஆக உயர்ந்துள்ளது.

இரண்டு தினங்களுக்கு முன்பு, அமைச்சர் விஜயபாஸ்கர் தமிழகத்தில் கொரோனாவின் நிலை என்ன என்பது பற்றி வெளியிட்ட அறிக்கையில்,

"தமிழக அரசு, தமிழ்நாடு முதல்வரின் தலைமையில் கொரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்த தமிழ்நாடு முழுவதும் சிறப்பான நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட வேளையில் காசநோயாளிகளுக்குச் சிகிச்சை, மருந்து, மாத்திரைகள், கண்காணிப்பு ஆகியவை எவ்வித சுணக்கமும் இல்லாமல் நடைபெற வேண்டும் என்று தமிழ்நாடு முதல்வரால் அறிவுறுத்தப்பட்டது.

தமிழ்நாட்டில் காசநோய்க்காக வெளி நோயாளிகளாக தொடர் சிகிச்சை பெற்றுவரும் நபர்களுக்குக் காசநோய்க்கான மருந்து, மாத்திரைகள் அவர்களின் இருப்பிடத்திற்கே சென்று வழங்கி தங்கு தடையின்றி சிகிச்சை அளிக்கப்படுகிறது.

தமிழ்நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் முதல் இதுவரை 50 ஆயிரத்து 38 காசநோயாளிகளுக்கும், 2,451 டன் மருந்து எதிர்ப்புக் காசநோயாளிகளுக்கும் (MDR-TB) என மொத்தம் 52 ஆயிரத்து 489 காச நோயாளிகளுக்கு அவர்களின் சிகிச்சை காலம் முழுவதற்கும் தேவைப்படும் காசநோய் மருந்துகள் காசநோய் களப்பணியாளர்கள் மூலம் அவர்களின் இருப்பிடங்களுக்கே சென்று வழங்கப்பட்டுள்ளது.

மேலும், சிகிச்சை நெறிமுறைகளின்படி அவர்களது வீட்டிலேயே சளி மாதிரி எடுக்கப்பட்டும், தேவைப்படுபவர்களுக்கு நடமாடும் ஊடுகதிர் கருவிகளை அவர்களின் இருப்பிடங்களுக்கே அனுப்பி ஊடுகதிர் படம் எடுக்கப்பட்டு, தொலைபேசி வாயிலாக சிகிச்சைக்கான மருந்துகளை உரிய வகையில் உட்கொள்வது, பக்கவிளைவுகள், காசநோயின் தன்மை போன்றவைகள் குறித்து கேட்டறிந்து தொடர் கண்காணிப்பும் (Continuous Monitoring) மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேலும், காசநோயாளிகள் சத்து நிறைந்த உணவுகள் சாப்பிட வேண்டும். அதற்காக தமிழகம் முழுவதும் தன்னார்வலர்கள், தொண்டு நிறுவனங்கள் மூலம் சத்து நிறைந்த உணவு தயாரிப்பதற்கான பொருட்கள் அரசால் வழங்கப்பட்டு சத்தான உணவு கிடைப்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுபோன்ற தமிழ்நாடு முதல்வரின் மக்கள் நலன் காக்கும் பன்முக நடவடிக்கைகள் மூலம் காசநோயாளிகள் எவ்வித சிரமும் இன்றி ஊரடங்கு காலத்திலும் சிறப்பான சிகிச்சையை அளித்துவரும் சரியான செயல்பாட்டினை பல்வேறு தரப்பினரும் தொடர்ந்து பாராட்டி வருகின்றனர்".

என்று கூறினார்.

இன்று பேசிய அவர், ``கொரோனா காலத்திலும் விபத்து, அவசரகால சிகிச்சை மையங்களில் சிறப்பான சிகிச்சை அளிக்கப்படுகிறது" என்று கூறியிருக்கிறார்.

இது குறித்து அவர் கூறியிருப்பதாவது, ``தமிழக அரசு, கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த தமிழ்நாடு முழுவதும் சிறப்பான நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. அதே வேளையில், விபத்து மற்றும் அவசர கால சகிச்சைகள் தங்கு தடையின்றி சிறப்பான முறையில் அளித்திட தமிழக முதல்வர் பழனிசாமி அறிவுறுத்தியுள்ளார்.

தமிழ்நாடு முழுவதும் அரசு மருத்துவமனைகள் மற்றும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் தமிழ்நாடு விபத்து மற்றும் அவசர சிகிச்சை முன்னெடுப்பு திட்டத்தின் கீழ் செயல்பட்டுவரும் விபத்து மற்றும் அவசர சிகிச்சை மையங்களில் மார்ச் 2020 முதல் இதுவரை 1,52,118 நபர்களுக்கு விபத்து உள்ளிட்ட நிகழ்வுகளால் ஏற்பட்ட காயங்களுக்கு அவசரகால சிகிச்சைகள் வழங்கப்பட்டுள்ளது. 


இவர்களில் 63,633 நபர்களுக்கு உயிர்காக்கும் அறுவை சிகிச்சைகள் அளிக்கப்பட்டுள்ளது. இம்மையங்களில், விஷம் அருந்துதல் உள்ளிட்ட சுய தீங்கு ஏற்படுத்திக் கொண்ட 52,849 நபர்களுக்கு சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பாம்பு கடித்த 19,947 நபர்களுக்கு உடனடி சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. மேலும், 4,494 குழந்தைகளுக்கு அவசரகால உயிர்காக்கும் சிகிச்சைகளும், 4,432 நபர்களுக்கு மாரடைப்பிற்கான சிகிச்சைகள், 7,775 நபர்களுக்கு பக்கவாத நோய்க்கான சிகிச்சைகள் என மொத்தம் 2,41,615 நபர்களுக்கு அவசரகால சேவைகள் அளிக்கப்பட்டு விலை மதிப்பில்லாத உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளது.

தமிழக அரசின் மக்கள் நலன் காக்கும் பணிகள் மூலம் கொரோனா வைரஸ் தொற்று காலத்திலும் தமிழக அரசின் தொய்வில்லா செயல்பாடு அனைவரின் கவனத்தையும் தொடர் பாராட்டினையும் பெற்றுவருகிறது"

என்று குறிப்பிட்டுள்ளார்.