லைக்கா தயாரிப்பில் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அக்ஷய் குமார் மற்றும் எமி ஜாக்சன் நடிப்பில் 29 நவம்பர் வெளியான 2.0 படம் திரையரங்குகளில் சக்கை போடு போட்டு வருகிறது. இப்படம் உலகளவில் 500 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. இயக்குனர் ஷங்கர் மற்றும் படக்குழுவினரின் உழைப்பு வீண் போகவில்லை என்பதற்கு சிறந்த எடுத்துக்காட்டு 2.0. 

தற்போது இயக்குனர் ஷங்கர் அவரது ட்விட்டரில், 2.0 - சில பதில்கள் என பிரபல எழுத்தாளர் ஜெயமோகன் கூறிய தெளிவுரையை பதிவிட்டிருக்கிறார். மறுபடியும் சினிமா பற்றிய கேள்விகள். கிட்டத்தட்ட மின்னஞ்சல்கள் அனைத்துமே இக்கேள்விகளால் நிறைந்துவிட்டன. தனித்தனியாக பதில்போடுவது இயலாதது. ஆகவே ஒட்டுமொத்தமாக ஒரு விளக்கம். இத்துடன் முடித்துக்கொள்வோம்.

பல கேள்விகள் 2.0 வின் வசூல் பற்றிய ஐயங்கள். ரசிகர்கள் இதைப்பற்றி ஏன் கவலைப்படுகிறார்கள் என எனக்குப் புரியவில்லை. சினிமா செயல்படும் விதமே வேறு. இதழ்களோ, சமூகவலைத்தளங்களோ முற்றிலும் சம்பந்தமில்லாத திசையில் செயல்பட்டுக்கொண்டிருக்கின்றன.

அவை வெறும் செய்திக்கேளிக்கைகள் மட்டுமே. 2.0 படம் நவம்பர் 29 அன்று காலை வெளியாகியது. சுமார் பத்து மணிக்கு அதன் தோராயமான மொத்த வசூலை கணக்கிட்டுவிட்டார்கள். அதற்கான எல்லா சூத்திரங்களும் வேறு எந்தத் தொழிலையும்போல இதிலும் உண்டு. இந்தியவரலாற்றில் ஒரு சினிமா ஈட்டும் உச்சவசூல் 2.0 வுக்குத்தான்.ஏனென்றால் 2.0 உலகமெங்கும் வெளியாகியது. முதல் ஐந்து நாட்களிலேயே நாநூறுகோடியை தாண்டிவிட்டது வசூல் என லைக்கா அறிவித்துள்ளது [ எந்த நிறுவனமும் வசூலை மிகையாக அறிவிக்காது] மொத்தத்தில் இந்திய அளவில் வசூலில் அதன் இரண்டாமிடத்தில் இருக்கும் படத்தைவிடஒரு மடங்குக்குமேல் கூடுதல் வசூலாகலாம். முதலீட்டை விட இருமடங்கு வசூல்.

பதினொன்றரை மணிக்கே ஷாம்பேன் உடைத்துக் கொண்டாடிவிட்டார்கள். அதன்பின்னர்தான் இங்கே இணையத்தில் சம்பந்தமில்லாதவர்கள் வசூல் கணக்குகளை அலச ஆரம்பிக்கிறார்கள். அவர்கள் எவரிடமும் தகவல்கள் இல்லை. சினிமாவுக்கும் அந்தச் செய்திகளுக்கும் சம்பந்தமில்லை. 2.0 வெளிவந்தபின்னரும் சர்க்கார் அரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த ஆண்டின் இரு முதன்மைவெற்றிப்படங்கள் இவைதான்.

இது அடிப்படையில் தமிழ்ப்படம் அல்ல. இதன் வருவாயில் 20 சதம்கூட தமிழகத்தில் இல்லை. 50 சதம்கூட இந்தியாவிலிருந்து அல்ல. இது சர்வதேச ரசிகர்களுக்கான கதை. குறிப்பாகச் சொல்லப்போனால் மூன்றாமுலக நாடுகளுக்கான படம். உலகமெங்கும் பத்தாயிரத்துக்குமேற்பட்ட அரங்குகளில் வெளியாகியது. சீனாவில் வரும் மேமாதம் பத்தாயிரம் அரங்குகளில் வெளியாகவிருக்கிறது. ஆகவேதான் எந்திரனில் இருந்த குடும்ப அம்சங்கள், காமெடி டிராக், காதல் போன்றவை இதில் இல்லை.

கதையின் உணர்ச்சிகள் நாடகத்தனம் குறைவாக அளவோடு உள்ளன. ஆரா போன்ற மதம்சாராத ஆன்மிகச் சாயல்கொண்ட கருத்துக்கள் கீழைநாட்டு ரசிகர்களுக்கு மிக உகந்தவை. இந்தப்படத்தின் திரைக்கதை அமைப்பு உலகளாவிய இளையதலைமுறை ரசிகர்களுக்குரியது. அவர்களின் ரசனையை கணக்கில்கொண்டது. ஆகவேதான் பாடல்கள் இல்லை. வழக்கமான தமிழ்ப்படம் முதலில் நெடுநேரம் விளையாட்டாக அலையும், அதன்பின்னரே முதல்முடிச்சு விழும். இதில் இரண்டாவதுகாட்சியிலேயே முதல் முடிச்சு விழுந்துவிடுகிறது. அதன்பின் நகைச்சுவை, குடும்பக்காட்சி எதற்கும் இடமில்லை.

உணர்ச்சிகரக் காட்சிகள் அளவோடு உள்ளன. வழக்கமான தமிழ்ப்பட அளவுகோல்களைக்கொண்டு இதை மதிப்பிட்டவர்கள் இதன் மலைக்கச்செய்யும் உலகளாவிய வசூலை எண்ணிப்பார்க்கவேண்டும். இனி இந்த வகைப் படங்கள் கூடுதலாக வரும் என்றும் புரிந்துகொள்ளவேண்டும். அத்துடன் இது முப்பரிமாணப் படம். அதில் ஓர் அளவுக்குமேல் காட்சிகளை வசனங்களாக நீட்டமுடியாது. ஏனென்றால் முப்பரிமாணம் கொண்டு நின்றிருக்கும் பொருட்கள் கவனச்சிதறலை உருவாக்கும். இங்கே எழுந்த பெரிய கேள்வி, இதன் அறிவியல் அடிப்படை பற்றியது.

வாழ்நாளில் ஓர் அறிவியல்நூலைக்கூட, ஓர் அறிவியல்கட்டுரையைக் கூட வாசித்திராதவர்களெல்லாம் அறிவியல்பற்றிப் பேசவைத்ததுதான் 2.0 வின் முதல்சாதனை. அவர்களிடமிருந்து அறிவியலைத் தெரிந்துகொள்ள நேர்ந்ததுதான் சோதனை.

தெளிவாகவே ஒன்று தெரிந்துகொள்ளவேண்டும். அறிவியல்புனைவு [science fiction] வேறு அறிவியல்மிகைக்கற்பனை [science fantasy] வேறு. அறிவியல்புனைவு என்பதன் விதிகள் மூன்று.

1. அது அறிவியலின் அடிப்படைக் கொள்கைகளுக்கு உட்பட்டதாகவே இருக்கமுடியும்.

2 அறிவியலின் முன்னூகங்களில் [hypothesis] மட்டுமே அது கற்பனையை ஓட்டமுடியும். அதன் நிரூபணவழிமுறை அறிவியல் சார்ந்ததாகவே இருக்கமுடியும்.

3.அறிவியல்புனைவு என்பது வாழ்க்கையின் ஓர் உண்மையை, தத்துவத்தை அறிவியலைத் துணைகொண்டு சொல்வதாகவே இருக்கும். அதன் இலக்கு அறிவியலில் தாக்கம் செலுத்துவதல்ல, வாழ்க்கையை விளக்குவதே.

2.0-வின் குறியீட்டுத்தன்மை மிகச்சிறிய ஒன்றை அழிக்க முயன்றால் அது மிகப்பெரிய வடிவை எடுக்கும் என்ற பார்வையில் உள்ளது. அது எப்போதுமே அறிவியலில் பேசப்பட்டு வருவது. பூச்சிமருந்துகளால் வெல்லமுடியாதவையாக ஆன பூச்சிகள் உண்டு. முறிமருந்துக்களால் பெரிய நோய்களாக ஆன கிருமிகள் உண்டு. அந்த அறிவியல் தரிசனமே அதில் குறியீடாகச் சொல்லப்பட்டுள்ளது. மிகச்சிறிய சிட்டுக்குருவி அழிவுச்சக்தியாக ஆகிறது. இப்பிரபஞ்சத்தில் நல்லது – கெட்டது என ஏதுமில்லை. கட்டுக்குள் நிற்பது– கட்டற்றது என்ற இரண்டு விஷயங்களே உண்டு. கட்டுக்குள் இருக்கையில் மிக அழகியது, எளியது, உயிரூட்டுவது கட்டற்றுப் பெருகினால் அழிவுச்சக்தியாக ஆகும் என்பதை அறிவியல் மீண்டும் மீண்டும் சொல்லிக்கொண்டிருக்கிறது. 2.0 அதைத்தான் சொல்கிறது. உங்களுக்குப் புரியாவிட்டால் நவீன படக்கதைகளை வாசிக்கும் உங்கள் குழந்தைகளிடம் கேளுங்கள், விளக்குவார்கள்.