சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் இயக்குனர் சிவா இயக்கத்தில் தல அஜித்குமார் நடிப்பில் இன்று 10 ஜனவரி 2019 வெளியாகியிருக்கும் படம் விஸ்வாசம். நயன்தாரா, ரோபோ ஷங்கர், தம்பி ராமைய்யா, யோகிபாபு, கோவை சரளா, விவேக், ஜகபதி பாபு என நட்சித்திர பட்டாளமே இப்படத்தில் உள்ளது. 

இயக்குனர் சிவா உடன் அஜித்குமார் நான்காவது முறையாக இணையும் இப்படம் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளது. இந்த அளவற்ற எதிர்பார்ப்பை தனது அன்பான ரசிகர்களுக்கு விருதளிக்கும் படம் தான் விஸ்வாசம்.

அரங்கையே அதிரவைக்கும் திறன் அஜித்குமாரின் என்ட்ரிக்கு மட்டுமே உள்ளது என தனது ஒவ்வொரு படங்களின் மூலம் நிரூபித்து வருகிறார் அஜித். தூக்குதுரை எனும் கேரக்ட்டரில் வரும் இவரது நடிப்பு கதைக்கு ஏற்றவாறு அமைந்துள்ளது. வீரம் படத்தை தொடர்ந்து கிராமபுற சாயலை கொண்ட இப்படத்தில் இரண்டு கெட்டப்பில் வந்து அசத்துகிறார். அஜித்தின் பஞ்ச் வசங்களுக்கு எப்படி கைதட்டல் வருகிறதோ அதேபோல் அவரது சீரான நடிப்பிற்கும் அடிமையாகிறார்கள் ரசிகர்கள்.

ஆக்ஷன் நிறைந்த கிராமத்து சப்ஜெக்ட்டுகளை சரியான முறையில் கொண்டு சேர்கிறார் இயக்குனர் சிவா. தொழில் நுட்ப ரீதியாகவும், தல ரசிகர்கள் விருப்பத்திற்கு ஏற்றவாறு கதையை சீரமைத்திருக்கிறார். ஃபேமிலி ஆடியன்ஸின் நாடித்துடிப்பை அறிந்த இயக்குனர்களில், சிவாவும் ஒருவராக திகழ்கிறார்.

நிரஞ்சனா எனும் ரோலில் தனது சிறப்பான பங்காற்றலை வெளிப்படுத்தியிருக்கிறார் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா. ஏகன், பில்லா படத்திற்கு பிறகு அஜித்துக்கு சரியான ஜோடியாக தோன்றியிருக்கிறார். தேனி மாவட்டம் கொடுவிளார்பட்டிக்கு மருத்துவ கேம்பிற்கு வரும் நயன்தாரா, அஜித்தை சந்திக்கிறார். வழக்கம் போல் மோதலில் ஆரம்பித்து காதலில் முடிகிறது. மனைவி, மகளை விட்டு தவிக்கும் தந்தையாக அஜித் நடிக்கும் பாசக்கட்சியில் தனது உன்னதமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். தூக்குதுரையின் மகளாக வரும் ஸ்வேதாவின் நடிப்பு அம்சமாக உள்ளது. பொறுமையாக நகரும் முதல் பாகம் சிலருக்கு வறுத்தம் தந்தாலும், இன்பமாய் ரெயின் சண்டையுடன் அமைகிறது இன்டெர்வல் பிளாக்.

படம் மெல்லமாக நகர்வது தல ரசிகர்களுக்கு மிகுந்த சோகத்தை அளிக்கிறது. கிளைமாக்ஸ் காட்சிகளில் இப்படம் வெறும் ஃபேமிலி ஆடியன்ஸுக்கு மட்டுமே என்பதை தெரிவிக்கிறது. நடிகர் விவேக்கின் ரோல் பெரிதளவில் ரசிகர்களை கவரவில்லை.

கிராமப்புற கதைகளுக்கு இதுபோன்ற சிறப்பான துணை நடிகர்கள் தேவை என்பதை பூர்த்தி செய்திருக்கிறார்கள் தம்பி ராமைய்யா மற்றும் ரோபோ ஷங்கர். மாரி படத்திற்கு பிறகு ரோபோ ஷங்கர் காட்டில் மழை என்றே கூறலாம்.

மறைந்த நடிகை ஆச்சி மனோரமா இல்லாத குறையை நடிகை கோவை சரளா போக்கியுள்ளார். இவர் திரையில் வந்தாலே விசில் தான் என்ற வகையில் தனது பங்காற்றலை வெளிப்படுத்தியிருக்கிறார் நடிகர் யோகிபாபு. 

ஸ்டைலிஷான வில்லனாக வரும் ஜகபதி பாபுவின் வசனங்கள் சில இடங்களில் பிசிறு தட்டினாலும் பிற காட்சிகளில் கட்சிதமாக பொருந்தியுள்ளது. தல அஜித் போன்ற உச்ச நட்சித்திரம் முன்பு வில்லத்தனம் கொண்ட நடிப்பை வெளிக்காட்டுவது கொஞ்சம் கடினம் தான்.

கிராமத்து கதைக்கு ஏற்றவாறு இயற்கையான லைட்டிங்கை காண்பித்த ஒளிப்பதிவாளர் வெற்றிக்கு சல்யூட். குறிப்பாக தல அஜித்தின் இன்ட்ரோ காட்சியை ரசிகர்கள் பார்வையிலிருந்து ஒளிப்பதிவு செய்திருக்கிறார் என்றே கூறலாம். தல அஜித் மற்றும் இயக்குனர் சிவாவுடன் நீண்ட நாட்கள் பயணம் செய்தவர் என்று நிரூபித்திருக்கிறார் வெற்றி.

மாஸ் ஹீரோ நடிகர்களுக்கு எப்படி கட் செய்வது, எவ்வித எடிட்டிங் முறையை கையாளுவது என்பதை எடிட்டர் ரூபன் இடமிருந்து வளர்ந்து வரும் எடிட்டர்கள் கற்றுகொள்ள வேண்டும். நம்பகத்தன்மை சில இடங்களில் அத்துமீறினாலும் சரியான ஸ்டண்ட் காட்சிகளை வடிவமைத்திருக்கிறார் திலீப் சுப்பராயன்.

பட்டி தொட்டி எங்கும் அடிச்சுதூக்கிய இமானின் இசை திரையரங்கில் அடிச்சு தூக்கியது. மாஸான பாடல்கள் ஓடியபின்னர், கண்ணான கண்ணே என்று மெலோடியான பாடலை கண்முன் கம்போஸ் செய்த வண்ணம் அசத்தியிருக்கிறார் இமான். கிராமத்து படம் என்றாலே இமானுக்கு இனிப்பு சாப்பிடுவது போல் என தல ரசிகர்களை திருப்தி படுத்துகிறார்.

இப்படம் தல ரசிகர்கள் தவிர்த்து ஃபேமிலி ஆடியன்ஸ் என அனைத்து தரப்பினருக்கும் பொங்கல் விருந்தாக அமையும் என்றே கூறலாம். சுயம்பாக முளைத்து, தன்னம்பிகையுடன் உழைத்து இன்று ரசிகர்களின் மனதில் தலயாக உயர்ந்து நிற்கும் அஜித் அவர்களின் வெற்றி பாதையில் இந்த விஸ்வாசம் ஓர் முக்கிய படமாக இருக்கும் என்பதை பதிவு செய்கிறோம். படத்தை தாண்டி ரசிகர்களுக்கு இந்த களைகட்டும் திருவிழாவை ஏற்படுத்தி தந்த விஸ்வாசம் படக்குழுவினரை பாராட்டுவதில் பெருமை கொள்கிரது நம் கலாட்டா.

கலாட்டா ரேட்டிங் - 2.5/5