உலகளவில் புகழ்பெற்ற இணைய தொடரான ‘மாடர்ன் லவ்’ தற்போது இந்திய மொழிகளிலும் இணைய தொடராக தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்தி, தெலுங்கு, தமிழ் ஆகிய மொழிகளில் தயாரிக்க திட்டமிடப்பட்டது. அதன்படி முன்னதாக ‘மாடர்ன் லவ் மும்பை’ என்ற பெயரில் இந்தியிலும், ‘மாடர்ன் லவ் ஹைதராபாத்’ என்ற பெயரில் தெலுங்கிலும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவு டிரெண்ட் ஆனது. தொடர்ந்து தற்போது தமிழில் ‘மாடர்ன் லவ் சென்னை’ என்ற பெயரில் பிரபல ஒடிடி தளமான அமேசான் பிரைமில் வரும் மே 18 ம் தேதி வெளியாகவுள்ளது.
தமிழ் திரையுலக ரசிகர்களால் கொண்டாடப்பட்ட சூப்பர் டீலக்ஸ் திரைப்படத்தின் இயக்குனர் தியாகராஜன் குமாராஜா மேற்பார்வையில் ஒருங்கிணைக்கப்பட்ட இந்த மாடர்ன் லவ் சென்னை இணைய தொடர் 6 எபிசோடுகள் கொண்ட தொகுப்பாக உருவாகியுள்ளது. இதில் இயக்குனர்கள் பாரதி ராஜா, ராஜூ முருகன், பாலாஜி சக்திவேல், கிருஷ்ண குமார், அக்ஷய் சுந்தர் மற்றும் தியாகராஜன் குமாராஜா ஆகியோர் இயக்குனர்களாக பணியாற்றியுள்ளனர். மேலும் தொடரில் பாலாஜி தரணி தரன், பாடகர் பிரதீப் குமார், ரேஷ்மா கட்டாலா ஆகியோர் கூடுதல் கதையாசிரியராக பணியாற்றுகின்றனர். ரம்யா நம்பீசன், ரித்து வர்மா, விஜய லக்ஷ்மி, கிஷோர் போன்ற பிரபல முன்னணி நட்சத்திரங்கள் பலர் நடிப்பில் உருவான இந்த ஆந்தாலாஜி தொடருக்கு இசையமைப்பாளர்களாக இளையராஜா, யுவன் ஷங்கர் ராஜா, ஜிவி பிரகாஷ் குமார் மற்றும் ஷான் ரோல்டன் ஆகியோர் பணியாற்றியுள்ளனர். இந்த தொடரின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய அளவு வைரலானது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தொடரில் யுவன் ஷங்கர் ராஜா இசையில் உருவான யாயும் ஞாயும் பாடலை தற்போது படக்குழு வெளியிட்டுள்ளது. யுகபாரதி வரிகளில் உருவான இப்பாடலை ஷிவானி பன்னீர் செல்வம் பாடியுள்ளார். காதலை மையப்படுத்தி உருவான இந்த பாடல் தற்போது ரசிகர்களை கவர்ந்து இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது. விரைவில் இந்த தொடரில் இடம் பெற்றுள்ள அடுத்தடுத்த பாடல்கள் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.