தமிழ் சினிமா இசை ரசிகர்களில் யுவன் ஷங்கர் ராஜாவின் ரசிகர்கள் பட்டாளம் எண்ணிலடங்காது. மனதை மயக்கும் மெலடி ஆனாலும் சரி  குத்தாட்டம் போட வைக்கும் ஃபோக் ஆனாலும் சரி  யுவன் இசை தரும் சுகம் தனி ரகம் தான்.  யுவன் இசையில் வரும் பாடல்கள் ஒரு போதை என்றால் யுவன் குரலில்  வரும் பாடல்கள் அதைவிட பெரிய போதை.

அந்தவகையில் யுவன் ஷங்கர் ராஜாவின் இசை ரசிகர்களுக்கு போதையேற்ற வந்திருக்கிறது மாமனிதன் திரைப்படத்திலிருந்து ஏ..ராசா பாடல். தமிழ் சினிமாவின் மிகச்சிறந்த இயக்குனர்களில் ஒருவராக இருக்கும் சீனு ராமசாமியின் இயக்கத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்து உருவாகியுள்ள மாமனிதன் திரைப்படத்திற்கு இசைஞானி இளையராஜா யுவன் சங்கர் ராஜா மற்றும் கார்த்திக் ராஜா மூவரும் இணைந்து இசையமைத்து வருகிறார்கள்.

மாமனிதன் படத்திலிருந்து "தட்டிப்புட்டா தட்டிப்புட்டா" என்ற முதல் பாடல் இசைஞானி இளையராஜாவின் குரலில் வெளிவந்து  ரசிகர்களின் மனதில் தாளம் போட்டது. தற்போது மாமனிதன் திரைப்படத்தின் இரண்டாவது பாடலாக ஏ..ராசா பாடல் யுவன்ஷங்கர் ராஜாவின் குரலில் வெளியாகியுள்ளது.

நெனச்சதொன்னு...நடந்ததொன்னு...ஏ...ராசா

நீ...கேட்டதொன்னு...  கெடச்சதொன்னு... ஏ... ராசா 

எனத் தொடங்கும் அந்தப் பாடல் ரம்மியமாக ரசிகர்களின் இதயத்தின் உள்ளே நுழைந்து  மனதை லேசாக்கும் வகையில் அமைந்துள்ளது. தற்போது வெளியாகியுள்ள இந்த பாடல் வீடியோவில் யுவன்ஷங்கர்ராஜா  பசுமையான மலைப் பகுதிகளில்  நடந்தபடியே பாடும் அந்த வீடியோ காட்சியும் பார்ப்பவர்களை வெகுவாக ரசிக்க வைக்கிறது. இந்த கடினமான காலகட்டத்தில் கனமான இதயத்தோடு நாம் அனைவரும் வீட்டில் அமர்ந்திருக்கும் இந்த வேலையில் யுவன் சங்கர் ராஜாவின் இந்த பாடல் நமக்கு மருந்தாக அமைந்துள்ளது கேட்டு மகிழ்வோம்.