தமிழ் திரையுலகில் முன்னணி நகைச்சுவை நடிகராக திகழ்பவர் நடிகர் யோகி பாபு. யோகிபாபு நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ட்ரிப். டார்லிங், 100, எனக்கு இன்னொரு பேர் இருக்கு மற்றும் கூர்கா உள்ளிட்ட படங்களை இயக்கிய சாம் ஆண்டனின் அஸிஸ்டண்ட் டென்னிஸ் மஞ்சுநாத் இந்த திரைப்படத்தை எழுதி இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தை சாய் ஃபில்ம் ஸ்டூடியோஸ் தயாரித்து வெளியிடுகின்றது. கொரோனா காரணமாக தடைப்பட்டு வரும் படங்களின் பட்டியலில் ட்ரிப் படமும் ஒன்று. 

இந்த படத்தில் கருணாகரண் முக்கிய பாத்திரத்தில் நடிக்கிறார். தமிழ் சினிமாவில் எதார்த்த காமெடி செய்யும் ஒருவர்களில் கருணாகரனும் ஒருவர். ஜிகர்தண்டா, யாமிருக்க பயமேன், சூதுகவ்வும் போன்ற படங்களில் இவரது காமெடியை ரசித்த ரசிகர்கள், ட்ரிப் படத்திலும் இவரது நடிப்பை காண ஆவலில் உள்ளனர். 

த்ரில்லர் கலந்த நகைச்சுவை படமாக இந்த படம் இருக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உதயஷங்கர் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு சித்து குமார் இசையமைக்கிறார். அடர்ந்த காட்டில் மாட்டுக்கொள்ளும் மனிதர்கள் எப்படி தப்பித்து வருகிறார்கள் என்பதே இதன் கதைக்கரு. 

இவர்களுடன் நடிகை சுனைனாவும் இணைந்துள்ளார். காதலில் விழுந்தேன் என்ற படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் நடிகை சுனைனா. அதனைத் தொடர்ந்து மாசிலாமணி, யாதுமாகி, வம்சம் உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். வெகு நாட்களுக்கு பிறகு அட்லீ இயக்கிய தெறி படத்தில் கௌரவ ரோலில் நடித்தார். கடந்த 2019-ம் ஆண்டில் எனை நோக்கி பாயும் தோட்டா, சில்லுக்கருப்பட்டி போன்ற படங்கள் வெளியாகி அசத்தின. 

இந்நிலையில் இந்த படத்தின் முதல் சிங்கிள் What a life பாடலின் லிரிக் வீடியோ வெளியானது. கானா பாலா பாடிய இந்த பாடல் வரிகளை மோகன் ராஜன் எழுதியுள்ளார். கார்ட்டூன் ஸ்டைலில் இதன் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளது.