டென்னிஸ் மஞ்சுநாத் இயக்கத்தில் நாளை வெளியாகவிருக்கும் திரைப்படம் ட்ரிப். யோகிபாபு மற்றும் கருணாகரண் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளனர். த்ரில்லர் கலந்த நகைச்சுவை படமாக இந்த படம் இருக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உதயஷங்கர் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு சித்து குமார் இசையமைக்கிறார். 

சமீபத்தில் படத்தின் ட்ரைலர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அடர்ந்த காட்டில் மாட்டுக்கொள்ளும் மனிதர்கள் எப்படி தப்பித்து வருகிறார்கள், சோம்பிகளிடம் எப்படி போராடுகிறார்கள் என்பதை ட்ரைலர் காட்சியில் காண்பித்துள்ளனர் படக்குழுவினர். 

இந்நிலையில் படத்தின் நகைச்சுவை ஸ்னீக் பீக் காட்சி வெளியானது. காட்டிற்குள் அமர்ந்து மது அருந்தும் இருவரை யாரோ அம்பு விட்டு தாக்குவது போல் உள்ளது. இந்த நகைச்சுவையான ப்ரோமோ ரசிகர்களை கவர்ந்து வருகிறது. 

ட்ரிப் திரைப்படத்தை தொடர்ந்து ஜெகஜாலக்கில்லாடி, பிஸ்தா, பேய் மாமா ஆகிய திரைப்படங்கள் படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு காத்திருக்கிறது. யோகிபாபு கைவசம் சைத்தான் கா பச்சா, சதுரங்க வேட்டை2, அடங்காதே, பன்னிக்குட்டி, மண்டேலா, வெள்ளை யானை, கடைசி விவசாயி, தனுஷ் நடிக்கும் கர்ணன் போன்ற படங்களும் ரிலீஸ் பட்டியலில் உள்ளது. 

நேற்று யோகிபாபு நடிப்பில் பொம்மை நாயகி என்ற படம் தொடங்கப்பட்டது. பா. ரஞ்சித் அவரது நீலம் தயாரிப்பு நிறுவனம் மூலம் தயாரிக்கிறார். ஷான் இந்த படத்தை இயக்குகிறார். சுந்தர மூர்த்தி இசை, ஜெயரகு கலை இயக்கம், செல்வா படத்தொகுப்பு பணிகளை கவனிக்கிறார். இந்த படத்தின் டைட்டில் லுக் போஸ்டர் ரசிகர்களை கவர்ந்து ட்ரெண்டானது. 

நடிகர் கருணாகரனும் பிஸியாக இருக்கிறார் என்று தான் கூற வேண்டும். சிம்பு நடித்து வரும் மாநாடு, விஷ்ணு விஷால் நடித்து வரும் இன்று நேற்று நாளை 2 ஆகிய படங்களில் நடித்து வருகிறார். ட்ரிப் படத்தில் இவர் வரும் காட்சிகளும் ரசிகர்களை கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.