தமிழ் திரையுலகில் முன்னணி நகைச்சுவை நடிகராக திகழ்பவர் நடிகர் யோகி பாபு. இவரது பெயர் இல்லாமல் திரைப்படங்கள் வெளியாவதே இல்லை என்றும் கூறலாம். சின்னத்திரை மூலம் அறிமுகமான இவர், தனது அயராத உழைப்பினால் தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத பிரபலமாக மாறியுள்ளார். தினமும் படப்பிடிப்பு என பிஸியாக இருந்த யோகிபாபு, இந்த ஊரடங்கில் வீட்டில் குடும்பத்துடன் நேரத்தை செலவு செய்து வருகிறார். லாக்டவுனில் சோஷியல் மீடியாவிலும் ஆக்ட்டிவாக இருந்து வருகிறார். 

சில நாட்கள் முன்பு தான் சிறு கதாபாத்திரங்களில் நடித்த படத்தில் கூட, நான் தான் கதாநாயகன் என விளம்பரப்படுத்துவதாக யோகி பாபு வேதனை தெரிவித்தார். இதனால் தனது இதர படங்கள் பாதிக்கப்படுவதாகவும், இனிமேல் அவ்வாறு செய்ய வேண்டாம் என வேண்டுகோளும் விடுத்தார். ஆனால், தொடர்ச்சியாக இது நடைபெற்றுக் கொண்டே இருக்கிறது என்று யோகிபாபு பேசி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். 

வீடியோவில் பேசிய யோகிபாபு, சில வருடங்களுக்கு முன்பு சின்ன சின்ன படங்களாக நிறைய நடித்துள்ளேன். அந்தப் படங்கள் எல்லாம் இப்போது வெளியாகிறது. அந்தப் படங்களில் எல்லாம் 2, 3 காட்சிகள் தான் நடித்திருப்பேன். இப்போது என்னுடைய புகைப்படத்தைத் தனியாக போஸ்டரில் போட்டு விளம்பரப்படுத்துகிறார்கள். தயவு செய்து இந்த மாதிரி செய்யாதீர்கள். எனக்கென்று சில ரசிகர்கள் இருப்பார்கள். அவர்கள் எல்லாம் இந்த மாதிரியான போஸ்டர்களால் ஏமாந்து போய்விடுகிறார்கள். 

இடைப்பட்ட காலங்களில் என்னுடைய புகைப்படம் மட்டும் போட்டு சிலர் ஏமாற்றியுள்ளார்கள். சிலர் எனக்கு தொலைபேசி வாயிலாக, உங்கள் புகைப்படத்தைப் பார்த்து தான் வாங்கியிருக்கிறோம் என்று சொன்னார்கள். அண்ணா, முழுமையாக இருப்பீர்கள் என நம்பி திரையரங்கிற்குச் சென்றோம். ஆனால், 2 - 3 காட்சிகளில் தான் வருகிறீர்கள். என்ன அண்ணா இது என்று சில ரசிகர்கள் தொலைபேசி வாயிலாக கேட்டார்கள். 

இதனால் எனக்கு மனவேதனையாக இருக்கிறது. இடையே தெளலத் என்ற படத்துக்குக் கூட அப்படியொரு போஸ்டர் வெளியிட்டுள்ளனர். அதில் சிவன் தான் ஹீரோ, நான் அல்ல. தயவு செய்து இந்த மாதிரி செய்யாதீர்கள். என்னை முன்னிலைப்படுத்தி படங்கள் எடுக்கும் இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் எல்லாம் திட்டத் தொடங்கிவிட்டார்கள். விநியோகஸ்தர்கள், ரசிகர்களை எல்லாம் ஏமாற்றுவது போல் இருக்கிறது. தயவு செய்து அந்த தவறை மட்டும் செய்யாதீர்கள்.

நான் முழுமையாக நடித்திருந்தால் போடலாம் தவறில்லை. ஆனால் 2-3 காட்சிகளுக்கு எல்லாம் போடுவது தவறு. அது எனக்குத் தான் பாதிப்பாக இருக்கிறது. தயவு செய்து தனி புகைப்படம் போட்டு போஸ்டர்கள் வெளியிடாதீர்கள் என்று கேட்டுக்கொண்டார் யோகிபாபு. இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.