அரசியல் நையாண்டி திரைப்படங்களுக்கு எப்போதுமே அதிக வரவேற்பு உண்டு. அதுவும் இப்போதுள்ள தேர்தல் காலத்தில் அரசியல்வாதிகளை வச்சு செய்யும் திரைப்படங்கள் வெளியானால் கண்டிப்பாக சர்ச்சைகளையும், வரவேற்பையும் பெறும். அந்த வகையில் நேற்று வெளியான யோகிபாபுவின் மண்டேலா திரைப்பட டீசர் சமூக வலைத்தளங்களில் பட்டையை கிளப்பி கொண்டிருக்கிறது.

மடோன் அஸ்வின் இயக்கியுள்ள மண்டேலா திரைப்படத்தின் டீசரை நேற்றைய தினம் நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்டார். வழக்கம் போல இந்த படத்துலயும் கலக்குங்க என யோகி பாபிற்கு தனது வாழ்த்துக்களையும் தெரிவித்திருந்தார் சிவகார்த்திகேயன். 

வேட்பாளர் அறிவிப்பு, தேர்தல் அறிக்கை என தமிழக அரசியல் களம் சூடுபிடித்துள்ள, இந்த நேரத்தில் மண்டேலா டீசர் ஏகப்பட்ட அரசியல் நையாண்டி வசனங்களுடன் வெளியாகியுள்ளது. விது அய்யண்ணா ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்தை, பிலோமின்ராஜ் எடிட் செய்துள்ளார். பரத் சங்கர் இசையமைப்பாளராக பணிபுரிந்துள்ளார்.

இயக்குனர் பாலாஜி மோகன் முதல் முறையாக க்ரியேட்டிவ் ப்ரொட்யூசராக பணியாற்றியுள்ள இந்த திரைப்படத்தில், ஷீலா ராஜ்குமார், சங்கிலி முருகன் உள்ளிட்ட நடிகர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.தேர்தலை முன்னிட்டு கட்சிக்காரர்கள் மக்களுக்கு 20 ரூபாய் டோக்கன் கொடுப்பது போல காட்சியையும் படத்தில் சேர்த்து பரபரப்பை கூட்டியிருக்கிறார் இயக்குநர். ஆர்கே நகர் இடைத்தேர்தலில் பணப்பட்டுவாடாவிற்காக இருபது ரூபாய் டோக்கன் வழங்கப்படுவதாக சமூக வலைத்தளங்களில் குற்றச்சாட்டுகள் வெளியானது குறிப்பிடத்தக்கது.

பா. ரஞ்சித் தயாரிக்கும் பொம்மை நாயகி படத்தில் நடித்து வருகிறார் யோகிபாபு. யோகிபாபு நடிப்பில் ட்ரிப் திரைப்படம் கடைசியாக வெளியானது. டென்னிஸ் மஞ்சுநாத் இயக்கிய இந்த படத்தில் சுனைனா, கருணாகரண் முக்கிய பாத்திரத்தில் நடித்திருந்தனர்.த்ரில்லர் கலந்த நகைச்சுவை படமாக அமைந்தது.