நகைச்சுவை நடிகர் யோகிபாபு ஆரம்ப காலகட்டத்தில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான லொள்ளு சபா நிகழ்ச்சியில் கூட்டத்தில் ஒருவனாக இருந்தார். ஆனால் இன்று தமிழ் சினிமாவின் முன்னணி நகைச்சுவை நடிகர்களில் ஒருவராக வளர்ந்து தனக்கென மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியிருக்கிறார்.

யோகி படத்தின் மூலம் நகைச்சுவை நடிகராக அறிமுகமான நடிகர் யோகிபாபு தொடர்ந்து மான்கராத்தே, காக்காமுட்டை, ஆண்டவன் கட்டளை, கோலமாவு கோகிலா என பல சூப்பர் ஹிட் தமிழ் திரைப் படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தளபதி விஜய், அஜித் குமார், சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி என தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திர நடிகர்கள் அனைவருடனும் இணைந்து நடித்துள்ளார்.

அடுத்ததாக நடிகை காஜல் அகர்வால் கதாநாயகியாக நடிக்கும் கோஸ்டி திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். குலேபகாவலி , ஜாக்பாட் ஆகிய திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் கல்யாண் இயக்கும் அடுத்த திரைப்படமாக தயாராகிறது கோஸ்டி திரைப்படம். பிரபல இசையமைப்பாளர் சாம்.C.S. இசையமைக்கும் கோஸ்டி திரைப்படத்துக்கு ஜேக்கப் ரத்தினராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

நடிகை காஜல் அகர்வாலுடன் இணைந்து நடிகர் யோகிபாபு, இயக்குனர் K.S.ரவிக்குமார், நடிகர்கள் சுப்பு பஞ்சு, மொட்டை ராஜேந்திரன், சத்யன், ஆடுகளம் நரேன், அஜய் ரத்தினம், மனோபாலா, சுரேஷ் மேனன், சந்தானபாரதி, மயில்சாமி உள்ளிட்டோருடன் இணைந்து நடிகை ஊர்வசி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். 

கலகலப்பான நகைச்சுவை திரைப்படமாக உருவாகியுள்ள கோஸ்டி படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது. கோஸ்டி திரைப்படத்தின் ப்ரோமோ பாடல் படப்பிடிப்புடன் நேற்று  படப்பிடிப்பை முடித்துள்ளனர் என்ற தகவல் அதிகாரபூர்வமாக வெளியாகியுள்ளது. விரைவில் படத்தின் அடுத்தடுத்த தகவல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.