முன்னணி நகைச்சுவை நடிகராக தமிழக மக்களை மகிழ்வித்து வரும் நடிகர் யோகிபாபு தேர்ந்த நடிகராகவும் தன்னை நிரூபித்து வருகிறார். குறிப்பாக சமீபத்தில் வெளியான மண்டேலா & கர்ணன் உள்ளிட்ட திரைப்படங்களில் நகைச்சுவை பஞ்ச் வசனங்கள் ஏதுமில்லாமல் சாமானிய மக்களின் வாழ்வியலோடு இணைந்த கதாபாத்திரங்களில் நடித்து அசத்யினார்.

கடைசியாக இயக்குனர் மணிரத்தினத்தின் தயாரிப்பில் நெட்பிளிக்ஸில் வெளியான நவரசா வெப்சீரிஸில் இயக்குனர் பிரியதர்ஷன் இயக்கத்தில் வெளிவந்த சம்மர் ஆஃப் 92 என்னும் எபிசோட்டில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் யோகி பாபு. தொடர்ந்து தளபதி விஜய் நடிக்கும் பீஸ்ட்,  நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவர இருக்கும் டாக்டர் & அயலான், தல அஜித் நடித்துள்ள வலிமை உள்ளிட்ட படங்கள் அடுத்தடுத்து வெளிவர உள்ளன.

மேலும் இயக்குனர் சுந்தர்.சி.யின் அரண்மனை 3, சந்தானத்தின் டிக்கிலோனா, சுந்தரா டிராவல்ஸ் 2 மற்றும் காசேதான் கடவுளடா ரீமேக் என வரிசையாக பல படங்கள் வருகின்றன. இந்நிலையில் யோகி பாபுவின் அடுத்த புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது.

 ஃபோர் ஸ்கொயர் ஸ்டூடியோஸ் மற்றும் ஹாப்பி ஜிபி என்டர்மெண்ட் இணைந்து தயாரிக்கும் வீரப்பனின் கஜானா படத்தை இயக்குனர் யாஷ் எழுதி இயக்கியுள்ளார். கோபி துரைசாமி ஒளிப்பதிவில் ஞானேஸ்வரன் இசையமைத்துள்ளார். ஃபேன்டஸி படமாக தயாராகி இருக்கும் வீரப்பனின் கஜானா படத்தில் யோகிபாபு, மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர் . இந்த கலக்கலான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது.