தமிழ் திரையுலகில் வித்தியாசமான ஸ்கிரிப்ட்டுகளை தேர்வு செய்து நடித்து வரும் நடிகர் விஷ்ணு விஷால். வெண்ணிலா கபடிகுழு படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமான இவர், முதல் படத்திலேயே தனது நடிப்பால் ரசிகர்களின் கவனத்தை பெற்றார். தொடர்ந்து பலே பாண்டியா, குள்ளநரி கூட்டம், நீர்ப்பறவை போன்ற படங்களில் நடித்தார். இவர் நடிப்பில் வெளியான இன்று நேற்று நாளை, முண்டாசுப்பட்டி ஆகிய படங்கள் ரசிகர்களை ஈர்த்தது. 

அறிமுக இயக்குனர் மனு ஆனந்த் இயக்கத்தில் விஷ்ணு விஷால் நடித்துள்ள திரைப்படம் எஃப்.ஐ.ஆர். இப்படத்தில் மஞ்சிமா மோகன், ரைசா வில்சன், ரெபா மோனிகா ஜான் ஆகிய மூவரும் ஹீரோயின்களாக நடிக்கின்றனர். கருணாகரன் மற்றும் இயக்குனர் கவுதம் மேனன் படத்தில் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளார். அருள் வின்சென்ட் ஒளிப்பதிவில், அஷ்வந்தின் இசையில் உருவாகும் எஃப்.ஐ.ஆர் படத்தை விஷ்ணு விஷாலே தயாரிக்கிறார்.

இந்த படத்தின் டீஸர் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. சமீபத்தில் யார் இந்த இர்ஃபான் அஹ்மத் என்ற ப்ரோமோ வீடியோவை வெளியிட்டது படக்குழு. இதனைத்தொடர்ந்து மீண்டும் எஃப்.ஐ.ஆர் படத்தின் பணிகளுக்கு திரும்பவுள்ளதாக சில நாட்களுக்கு முன் பதிவு செய்திருந்தார். இந்நிலையில் தற்போது எஃப்.ஐ.ஆர் பட டப்பிங் பணிகளை துவங்கியுள்ளார் விஷ்ணு. முறையான பாதுகாப்புடன் இந்த டப்பிங் துவங்கப்பட்டுள்ளது. விரைவில் படத்தின் அப்டேட்டுகள் வரும் என்று தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார் விஷ்ணு. மேலும் டப்பிங் செய்யும் வீடியோவையும் வெளியிட்டுள்ளார். 

விஷ்ணு விஷால் நடிப்பில் மோகன்தாஸ் படத்தின் டைட்டில் அறிவிப்பு வெளியாகி அமோக வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்தை முரளி கார்த்திக் இயக்க, விஷ்ணு விஷால் தயாரிக்கவிருக்கிறார். விக்னேஷ் ராஜகோபாலன் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு சுந்தரமூர்த்தி கேஎஸ் இசையமைக்கிறார். 

பிரபு சாலமன் இயக்கத்தில் விஷ்ணு விஷால் நடித்துள்ள திரைப்படம் காடன். ராணா முதன்மை கேரக்டரில் நடிக்கும் இந்தப் படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய 3 மொழிகளில் உருவாகி வருகிறது. ராணாவுடன் இணைந்து விஷ்ணு விஷால், புல்கிட் சாம்ராட், சோயா ஹுசைன், அஸ்வின் ராஜா, டின்னு ஆனந்த் உள்ளிட்டோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர். காடன் திரைப்படம் 2021-ம் ஆண்டு பொங்கல் நாளன்று வெளியாகும் என்ற அறிவிப்பு சமீபத்தில் வெளியானது.