தமிழ் சினிமாவின் குறிப்பிடப்படும் கதாநாயகர்களில் ஒருவரான நடிகர் விஷ்ணு விஷால் நடித்த கட்டா குஸ்தி திரைப்படம் கடந்த சில தினங்களுக்கு முன்பு ரிலீஸாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. முன்னதாக இவரது நடிப்பில், ராட்சசன் திரைப்படத்திற்கு பிறகு மீண்டும் சைக்கோ த்ரில்லர் திரைப்படமாக தயாராகி வரும் மோகன்தாஸ் நிறைவடைந்து ரிலீஸுக்காக காத்திருக்கிறது. 

அடுத்ததாக ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகும் லால் சலாம் திரைப்படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். லைகா ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிப்பில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் இணைந்து முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கும் லால் சலாம் படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கௌரவ வேடத்தில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

லால் சலாம் திரைப்படத்திற்கு விஷ்ணு ரங்கசாமி ஒளிப்பதிவு செய்ய, பிரவீன் பாஸ்கர் படத்தொகுப்பு செய்கிறார். ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கும் லால் சலாம் திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் பூஜை உடன் தொடங்கியது. இதனிடையே நமது கலாட்டா சேனலுக்கு அளித்த பிரத்தியேக பேட்டியில் பேசிய நடிகர் விஷ்ணு விஷால் தனது திரையுலக அனுபவம் குறித்து பல சுவாரசிய தகவல்களை பகிர்ந்து கொண்டார்.

அந்த வகையில் லால் சலாம் படத்தில் நடிப்பது குறித்து சுவாரஸ்யமான தகவலை நம்மோடு பகிர்ந்து கொண்டார். “முன்னதாக ஜெர்சி படத்தின் ரீமேக்கில் நான் நடிக்க வேண்டி இருந்தது. எனது திரைப்பயணத்தில் 9 திரைப்படங்கள் DROP ஆனது என தெரிவித்திருந்தேன் அல்லவா! அதில் ஒன்று ஜெர்சி.. இப்போது புரிகிறது ஏன் அந்த படம் DROP ஆனது என்று, ஒரு கிரிக்கெட்டராக நான் ஜெர்சி நடித்திருந்தால், நான் லால் சலாம் நடிக்க முடியாது. ஏனென்றால் லால் சலாம் பண்ண வேண்டும் என இருந்தது என் தலையெழுத்து. அதனால் ஜெர்சி கிடைக்கவில்லை. ஒருவேளை அந்த படம் நடித்திருந்தால் இந்த திரைப்படத்திற்கு என்னை யோசித்து இருக்கவே மாட்டார்கள்” என விஷ்ணு விஷால் தெரிவித்துள்ளார். விஷ்ணு விஷாலின் அந்த முழு பேட்டி இதோ…