தமிழில் இயக்குனர் சுசீந்திரனின் வெண்ணிலா கபடிக்குழு திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கதாநாயகனாக அறிமுகமானவர் நடிகர் விஷ்ணு விஷால். இதனையடுத்து நீர்ப்பறவை, குள்ளநரிக்கூட்டம், ஜீவா உள்ளிட்ட பல தமிழ் திரைப்படங்களில் நடித்து வருகிறார். 

இயக்குனர் ராம்குமார் இயக்கத்தில் வெளிவந்த முண்டாசுப்பட்டி மற்றும் ராட்சசன் உள்ளிட்ட திரைப்படங்கள் விஷ்ணு விஷாலின் திரைப் பயணத்தில் முக்கியமான திரைப்படங்களாக அமைந்தன. கடைசியாக பிரபுசாலமன் இயக்கத்தில் உருவான காடன் திரைப்படத்தில் விஷ்ணு விஷால் நடித்து இருந்தார்.

அடுத்ததாக விஷ்ணு விஷால் நடித்திருக்கும் திரைப்படம் F.I.R. . இயக்குனர் மனோ ஆனந்த் எழுதி இயக்கியிருக்கும் F.I.R.  படத்தை விஷ்ணு விஷாலின் விஷ்ணு விஷால் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. ஒளிப்பதிவாளர் அருள் வின்சென்ட் ஒளிப்பதிவு செய்ய இசையமைப்பாளர் அஸ்வந்த் இசையமைத்திருக்கிறார். F.I.R. படத்தில் விஷ்ணு விஷால் உடன் இணைந்து ரெபா மோனிகா ஜான்சன் ,மஞ்சிமா மோகன் மற்றும் ரைசா வில்சன் ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர்.  

இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. F.I.R. படத்தின் இறுதிகட்ட பணிகள் தற்போது மும்முரமாக நடைபெற்று வரும் இந்த சூழலில் படத்தின் பாடல் வெளியீடு குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. வருகிற ஜூன் 17ஆம் தேதி விஷ்ணு விஷாலின் பிறந்தநாள் பரிசாக பயணம் என்ற இந்தப் பாடல் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.