தமிழ் திரையுலகின் முதல் டைம் ட்ராவல் திரைப்படமான இன்று நேற்று நாளை திரைப்படம் கடந்த 2015-ம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்த படத்தின் இரண்டாம் பாகம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியான நிலையில் முதல் பாகத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்த நடிகர் ஆர்யா தான் இரண்டாம் பாகத்தில் ஹீரோவாக நடிப்பார் என செய்திகள் வெளிவந்தன. ஆனால் முதல் பாகத்தில் நடித்த விஷ்ணு விஷாலே இந்த பாகத்திலும் கதாநயகனாக நடிக்க உள்ளார்.

அதுமட்டுமில்லாமல் முதல் பாகத்தில் நடித்த அனைவரும் அவர்களின் கதாபாத்திரத்திலேயே நடிக்க உள்ளனர். இரண்டாம் பாகத்தை, முதல் பாகத்தை இயக்கிய இயக்குனர் ரவிகுமாரின் உதவியாளர் கார்த்திக் இயக்கவுள்ளார். திருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் 25 ஆவது படமாக உள்ள இந்த படத்துக்கு ஜிப்ரான் இசையமைக்க தினேஷ் குமார் ஒளிப்பதிவு செய்கிறார்.

கொரோனா காரணமாக தள்ளிப்போன இந்த படத்தின் பூஜை இன்று நடைபெற்றுள்ளது. அது சம்மந்தமானப் புகைப்படம் இணையத்தில் வைரலாகியுள்ளது. படத்தில் முக்கிய ரோலில் நடிக்கும் நடிகர் கருணாகரனும் பூஜையில் கலந்து கொண்டார். 

விஷ்ணு விஷால் நடிப்பில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் FIR. மனு ஆனந்த் இந்த படத்தை இயக்கி வருகிறார். லாக்டவுனுக்கு பிறகு துவங்கிய இந்த படப்பிடிப்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன் படக்குழுவினர் செயல்பட்டு வருகின்றனர். இரவு நேர ஷூட்டிங் முழுமூச்சில் நடைபெற்று வருகிறது. 

இந்த படத்தை தொடர்ந்து பிரபு சாலமன் இயக்கத்தில் உருவான காடன் திரைப்படம் ரிலீஸுக்கு தயாராக உள்ளது. ராணா முதன்மை கேரக்டரில் நடித்துள்ள இந்த படத்தில் யானை பாகனாக நடித்துள்ளார் விஷ்ணு. தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய 3 மொழிகளில் உருவாகி வருகிறது. மார்ச் மாதம் 26-ம் தேதி வெளியாகும் என்று காடன் படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.