நடிகர் விஷால் கதாநாயகனாக நடித்து கடைசியாக வெளிவந்த திரைப்படம் சக்ரா. ஆக்ஷன் த்ரில்லர் திரைப்படமாக வெளிவந்த சக்ரா திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. தொடர்ந்து விஷால் நடிப்பில் அடுத்தடுத்து திரைப்படங்கள் வெளிவர உள்ளன. 

நடிகராகவும் தயாரிப்பாளராகவும் பல திரைப்படங்களை கொடுத்து வரும் விஷால் தற்போது இயக்குனராகவும் அவதாரம் எடுத்திருக்கிறார் இசைஞானி இளையராஜா இசையமைப்பில் உருவாகும் துப்பறிவாளன் இரண்டு திரைப்படத்தை நடிகர் விஷால் இயக்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இயக்குனர் ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் நடிகர் ஆர்யா மற்றும் விஷால் இணைந்து நடித்துள்ள எனிமி திரைப்படமும் அடுத்து வெளிவர உள்ளது. சமீபத்தில் வெளியான எனிமி திரைப்படத்தின் டீசர் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இந்நிலையில் நடிகர் விஷால் நடிப்பில் தயாராகும் விஷால் 31 திரைப்படத்தின் முக்கிய தகவல் வெளியானது. இயக்குனர் து.பா.சரவணன் இயக்கும் புதிய திரைப்படமான விஷால் 31 நாட் எ காமன் மேன் திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.நடிகர் பிரபுதேவா நடித்த தேவி 2 திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமான டிம்பிள் ஹயாட்டி விஷால் 31 படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார்.

விஷால் 31 நாட் எ காமன் மேன் திரைப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்ற நிலையில் தற்போது இரண்டாம் மற்றும் இறுதிக்கட்ட படப்பிடிப்பு இன்று தொடங்கப்பட்டுள்ளது.  அடுத்த 10 முதல் 15 நாட்களுக்குள் படப்பிடிப்பை நிறைவு செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.