கொரோனா ஊரடங்கு தொடங்கியவுடன், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பலரும் கடும் அவதிக்கு உள்ளானார்கள். அந்தச் சமயத்தில் பல்வேறு திரையுலகப் பிரபலங்கள், தொழிலாளர்கள் அவர்களுடைய சொந்த ஊருக்குத் திரும்ப உதவிகள் செய்தார்கள். ஆனால், தொடர்ச்சியாக வெளிநாடுகளிலிருந்து இந்தியாவுக்கு, மாநிலம் விட்டு மாநிலம் எனத் தொழிலாளர்களுக்கு உதவியவர் நடிகர் சோனு சூட்.

இதனால் ட்விட்டர் தளம் மூலமாகப் பலரும் சோனு சூட்டிடம் உதவிகள் கோரினார்கள். அனைவருக்குமே தன்னால் முடிந்த உதவிகளைச் செய்யத் துவங்கினார். சமூக வலைதளங்களில் அனைவருடைய பாராட்டையும் சோனு பெற்றார். தற்போதும் அவரின் உதவிகள் தொடர்கின்றன. தற்போது படப்பிடிப்புகள் தொடங்கிவிட்டதால் சோனு சூட் ஒப்புக்கொண்ட படங்களில் நடிக்கத் தொடங்கிவிட்டார். அவரோடு புகைப்படம் எடுத்து பல்வேறு திரையுலகப் பிரபலங்கள் தங்களுடைய ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து, பாராட்டி வருகிறார்கள்.

இந்நிலையில் ஹைதராபாத்தில் சோனு சூட்டை சந்தித்துப் பேசியுள்ளார் விஷால். சோனு சூட்டுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தைத் தன்னுடைய ட்விட்டர் தளத்தில் பகிர்ந்து, அவரை பாராட்டி பதிவு ஒன்றை செய்துள்ளார். அதில் எனது அன்புச் சகோதரர், அற்புதமான ஆன்மா சோனு சூட் அவர்களை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி. நீங்கள் மனித இனத்துக்குக் கடவுள் தந்த பரிசு. 

நீங்கள் செய்திருக்கும், தொடர்ந்து செய்து வரும் சமூகப் பணிகள் மூலம் எனக்கு ஊக்கம் அளித்துள்ளீர்கள். பரிச்சயம் இல்லாதவர்களின் குடும்பங்களுக்காகப் பலரும் இம்மாதிரியான முயற்சிகளைச் செய்ய மாட்டார்கள். நீங்கள் செய்த அத்தனை பணிகளையும் பற்றிக் கேள்விப்பட்டு வாயடைத்துப் போய்விட்டேன். தொடர்ந்து சிறப்பாகச் செயல்படுங்கள் என்று புகழாரம் சூட்டியுள்ளார் நம் புரட்சி தளபதி. 

விஷால் தற்போது ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் விஷால் 30 படத்தில் நடித்து வருகிறார். கடந்த மாதம் அக்டோபர் 16-ம் தேதி ஹைதராபாத்தில் பூஜையுடன் இந்த படப்பிடிப்பு தொடங்கப்பட்டது. மினி ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் எஸ்.வினோத்குமார் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார். இந்தப் படத்தின் ஒளிப்பதிவாளராக ஆர்.டி.ராஜசேகர் பணிபுரிந்து வருகிறார். தமன் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். 

விஷாலுக்கு வில்லனாக ஆர்யா நடிக்கிறார். படத்தின் ஓப்பனிங் சாங்கின் படப்பிடிப்பை சமீபத்தில் முடித்தனர் படக்குழுவினர். ராமோஜி பிலிம் சிட்டியில் லிட்டில் இந்தியா செட் வடிவமைக்கப்பட்டு, பிருந்தா மாஸ்டர் கோரியோகிராஃபியில் பாடல் காட்சி படமாக்கப்பட்டது. குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் நடிகை மிருணாளினி ரவி சமீபத்தில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

விஷால் நடிப்பில் ரிலீஸுக்கு தயாராக இருக்கும் படம் சக்ரா. எம்.எஸ்.ஆனந்தன் இயக்கிய இப்படத்தில் ஷ்ரத்தா ஸ்ரீநாத் காவல்துறை அதிகாரியாக நடித்துள்ளார். முக்கிய வேடத்தில் ரெஜினா கசண்ட்ரா நடித்துள்ளார். விஷால் பிலிம் பேக்டரி இந்த படத்தை தயாரித்துள்ளது. சக்ரா படத்தின் ட்ரைலர் வெளியாகி ட்ரெண்டானது. ரோபோ ஷங்கர், கே.ஆர்.விஜயா, ஸ்ருஷ்டி டாங்கே, மனோபாலா, விஜய்பாபு மற்றும் பலர் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.