தமிழில் தாம்தூம் படத்தின் மூலம் பிரபலமானவர் கங்கனா ரனாவத். தற்போது ஹிந்தி சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பதும் இவர்தான். ஹிந்தி சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என்று கூட சொல்லலாம். சமீப காலமாக பாலிவுட்டில் உள்ள நெபோட்டிசம் குறித்து பேசி வரும் கங்கனா ரனாவத், நடிகர் சுஷாந்தின் மரணத்திற்கு நீதி கேட்டும் வருகிறார். 

மும்பை பாந்த்ராவில் உள்ள பாலி ஹில் பகுதியில் உள்ள கங்கணா ரணாவத் வீட்டில் பல்வேறு கட்டிடங்கள் அனுமதி பெறாமல் கட்டப்பட்டதால், நேற்று (செப்டம்பர் 9) மும்பை மாநகராட்சி நிர்வாகம் அவரின் வீட்டை இடித்தது. கங்கணாவும் மும்பை வந்ததால் பெரும் சர்ச்சை உருவானது. தொடர்ச்சியாக மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்ரே மீது குற்றம் சாட்டியும், சவால் விடுத்தும் வருகிறார் கங்கணா ரணாவத்.

இந்நிலையில், கங்கணாவுக்கு ஆதரவு தெரிவித்து கடிதம் ஒன்றை தனது ட்விட்டர் பதிவில் வெளியிட்டுள்ளார் விஷால். அதில் விஷால் கூறியிருப்பதாவது: அன்பார்ந்த கங்கணா, உங்கள் துணிச்சலுக்குப் பாராட்டுகள். எது சரி, எது தவறு என்பது பற்றி குரல் கொடுக்க நீங்கள் தயங்கியதே இல்லை. இது உங்கள் தனிப்பட்ட பிரச்சினை கிடையாது. ஆனாலும், அரசின் எதிர்ப்பைச் சம்பாதித்துக் கொண்டும் வலிமையாக இருந்தீர்கள். அது உங்களை மிகப்பெரிய உதாரணமாக்குகிறது.

1920-களில் பகத்சிங் செய்ததற்கு ஒப்பானது நீங்கள் செய்திருக்கும் காரியம். பிரபலமாக இருந்தால் மட்டுமல்ல, சாதாரண மனிதர் கூட, ஒரு விஷயம் சரியில்லாதபோது அரசாங்கத்துக்கு எதிராகப் பேச இது ஒரு உதாரணமாக இருக்கும். உங்களுக்கு என் வாழ்த்துகள், தலைவணங்குகிறேன். கடவுள் உங்களை ஆசிர்வதிக்கட்டும் என விஷால் தெரிவித்துள்ளார். தமிழ்த் திரையுலகில் முதல் நபராக கங்கனாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார் விஷால் என்பது குறிப்பிடத்தக்கது. 

எம்.எஸ்.ஆனந்தன் இயக்கத்தில் விஷால் நாயகனாக நடிக்கும் படம் சக்ரா. இப்படத்தில் ஷ்ரத்தா ஸ்ரீநாத் காவல்துறை அதிகாரியாக நடிக்கிறார். முக்கிய வேடத்தில் ரெஜினா கசண்ட்ரே நடிக்கிறார். விஷால் பிலிம் பேக்டரி இந்த படத்தை தயாரிக்கிறது. தற்போது சக்ரா படத்தின் ட்ரைலர் வெளியாகி ட்ரெண்டாகி வருகிறது. ட்ரைலர் காட்சிகளை பார்க்கையில் டிஜிட்டல் உலகில் நடக்கும் திருட்டு குறித்த கதை போல் தெரிகிறது. கண்ணுக்கு தெரியாத வைரஸ் மட்டுமில்ல, வைர் லெஸ்ஸும் ஆபத்துதான் எனும் வசனம் அம்சமாக உள்ளது. 

ரோபோ ஷங்கர், கே.ஆர்.விஜயா, ஸ்ருஷ்டி டாங்கே, மனோபாலா, விஜய்பாபு மற்றும் பலர் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். பாலசுப்பிரமணியம் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு சமீர் முகமது படத்தொகுப்பு செய்கிறார். ஆன்லைன் வர்த்தக மோசடிகள் பற்றிய பின்னணியுள்ள கதையாக உருவாகி வருகிறது இந்த படம். படத்தின் ஷூட்டிங் முழுவதும் சென்னை மற்றும் கோயம்புத்தூர் பகுதிகளில் நடத்தப்பட்டது. 

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட என நான்கு மொழிகளில் இப்படம் வெளியாகவுள்ளது. விரைவில் இதன் ரிலீஸ் தேதி தெரியவரும். இதனால் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர் விஷால் ரசிகர்கள். இந்த படத்தை தொடர்ந்து துப்பறிவாளன் 2 படத்தை இயக்கவுள்ளார் விஷால். கொரோனா காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டு உள்ளது. விரைவில் திரையரங்குகள் திறந்தவுடன் சக்ரா படத்தின் ரிலீஸ் தேதியை எதிர்பார்க்கலாம்.