தமிழ் சினிமாவின் அதிரடி ஆக்சன் கதாநாயகர்களில் ஒருவராக வலம் வரும் நடிகர் விஷால் முதல் முறை இயக்குனராக அவதாரம் எடுத்துள்ள துப்பறிவாளன் 2 படப்பிடிப்புக்காக வருகிற 2022-ஆண்டு ஜனவரி மாதம் லண்டனுக்கு படக்குழு செல்ல இருப்பதாகவும், லண்டனில் ஏப்ரல் மாதம் முதல் படப்பிடிப்பை தொடங்க  உள்ளதாகவும், நடிகர் விஷால் சில தினங்களுக்கு முன் அதிகாரப்பூர்வமாக தெரிவித்தார்.

முன்னதாக அறிமுக இயக்குனர் து.பா.சரவணன் இயக்கத்தில், யுவன் ஷங்கர் ராஜா இசையில்,  விஷால் நடித்துள்ள வீரமே வாகை சூடும் திரைப்படம் அடுத்த ஆண்டு (2022) ஜனவரி 26ம் தேதி ரிலீசாக உள்ளது. இதனையடுத்து ராணா புரோடக்சன் சார்பில் நடிகர்கள் ராணா மற்றும் நந்தா இணைந்து தயாரிக்க, இயக்குனர் வினோத் குமார் இயக்கத்தில் விஷால் நடித்துள்ள திரைப்படம் “லத்தி சார்ஜ்" .

காவல் துறை அதிகாரியாக நடித்துள்ள , விஷாலுக்கு ஜோடியாக நடிகை சுனைனா கதாநாயகியாக நடித்து வரும் லத்தி சார்ஜ் படத்தில் இளைய திலகம் பிரபு முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். இசையமைப்பாளர் சாம்.சி.எஸ் இசையில், ஒளிப்பதிவாளர் பாலசுப்ரமணியம் ஒளிப்பதிவு செய்யும் லத்தி சார்ஜ் திரைப்படத்தின் 2வது கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக நடிகர் விஷால் தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

மேலும், "2வது கட்ட படப்பிடிப்பின் கடைசி நாள் 24 மணி நேரமும் படப்பிடிப்பு நடைபெற்றது. அடுத்ததாக  ஹைதராபாத்தில் நடைபெறவுள்ள 3-வது கட்ட படப்பிடிப்பு 40 நாட்கள் நடைபெற உள்ளது. பீட்டர் ஹெய்ன் ஸ்டன்ட் இயக்கத்தில் முழுக்க முழுக்க அதிரடி ஆக்ஷன் காட்சிகள் நிறைந்த படப்பிடிப்புக்கு தயாராகவுள்ளோம்..." எனவும் தெரிவித்துள்ளார்.