திரையுலகில் சிறந்த நடிகர்களாகவும், நல்ல நண்பர்களாகவும் திகழ்பவர்கள் விஷால் மற்றும் ஆர்யா. இருவரும் சேர்ந்து பாலா இயக்கத்தில் கடந்த 2011-ம் வெளியான அவன் இவன் படத்தில் ஒன்றாக நடித்திருந்தனர். தற்போது ஒன்பது வருடங்களுக்கு பிறகு ஆர்யா மற்றும் விஷால் இருவரும் சேர்ந்து ஒரு படத்தில் நடிக்கவுள்ளனர். 

கடந்த 2014-ம் ஆண்டு விக்ரம் பிரபு நடித்த அரிமா நம்பி படத்தின் மூலம் இயக்குனராக கால் பதித்தவர் ஆனந்த் ஷங்கர். 2016-ம் ஆண்டு சியான் விக்ரம் நடித்த இருமுகன் படத்தை இயக்கியிருந்தார். அதைத்தொடர்ந்து 2018-ம் ஆண்டு விஜய் தேவரகொண்டா நடித்த நோட்டா எனும் படத்தை இயக்கினார். தற்போது விஷால் மற்றும் ஆர்யா வைத்து புதிய படத்தை உருவாக்கவுள்ளார். விஷால் 30 மற்றும் ஆர்யா 32 ஆன இந்த படத்தில் விஷாலுக்கு வில்லனாக நடிக்க ஆர்யாவும் சம்மதம் தெரிவிக்கவே, படத்தின் பணிகள் தொடங்கப்பட்டன.

அக்டோபர் 16-ம் தேதி ஹைதராபாத்தில் படப்பூஜையுடன் கூடிய படப்பிடிப்பு தொடங்கப்பட்டது. மினி ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் எஸ்.வினோத்குமார் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார். தமிழில் லென்ஸ், வெள்ளை யானை மற்றும் திட்டம் இரண்டு ஆகிய படங்களைத் தொடர்ந்து அந்நிறுவனம் தயாரிக்கும் 4-வது தமிழ்ப் படம் இதுவாகும்.

இந்தப் படத்தின் ஒளிப்பதிவாளராக ஆர்.டி.ராஜசேகர் பணிபுரிந்து வருகிறார். நாயகியாக மிருணாளிணி நடிக்கவுள்ளார். இதர நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பில் இணைந்த புரட்சி தளபதி விஷாலின் வீடியோவை வெளியிட்டது படக்குழு. முறையான பாதுகாப்புடன் படப்பிடிப்பை நடத்தி வருகின்றனர் படக்குழுவினர். 

இரண்டு மாதங்களுக்கு முன்பு கொரோனா பாதித்திருந்த புரட்சி தளபதி விஷாலின் உடல் நிலை சரியான உடன் ஜிம்முக்கு அழைத்து சென்று பாக்ஸிங் செய்யும் புகைப்படத்தை பகிர்ந்திருந்தார் ஆர்யா. இருவரும் சேர்ந்து நடிக்கவிருக்கும் இந்த படம் திரை விரும்பிகளின் ஆர்வத்தை தூண்டியுள்ளது. 

விஷால் நடிப்பில் வெளியாகவிருக்கும் திரைப்படம் சக்ரா. விஷால் பிலிம் பேக்டரி தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்தாய் எம்.எஸ்.ஆனந்தன் இயக்கியுள்ளார். ஷ்ரத்தா ஸ்ரீநாத் காவல்துறை அதிகாரியாக நடிக்கிறார். முக்கிய வேடத்தில் ரெஜினா கசண்ட்ரே நடிக்கிறார். ட்ரைலர் காட்சிகளை பார்க்கையில் டிஜிட்டல் உலகில் நடக்கும் திருட்டு குறித்த கதை போல் தெரிகிறது. ரோபோ ஷங்கர், கே.ஆர்.விஜயா, ஸ்ருஷ்டி டாங்கே, மனோபாலா, விஜய்பாபு மற்றும் பலர் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். பாலசுப்பிரமணியம் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு சமீர் முகமது படத்தொகுப்பு செய்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது. 

கடந்த ஆண்டு வெளியான காப்பான் மற்றும் மகாமுனி படத்தில் நடித்திருந்தார் ஆர்யா. தற்போது இவர் நடிப்பில் உருவாகி ரிலீஸுக்கு ரெடியாக இருக்கும் படம் டெடி. ஸ்டுடியோ கிரீன் சார்பில் ஞானவேல் ராஜா தயாரிப்பில் உருவாகியிருக்கும் இந்த படத்தை சக்தி சௌந்தர் ராஜன் இயக்கியுள்ளார். இமான் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். ஆர்யாவுக்கு ஜோடியாக சாயிஷா நடித்துள்ளார். யுவா இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். திருமணத்திற்கு பிறகு ஆர்யா மற்றும் சயீஷா இருவரும் ஒன்று சேர்ந்து நடிக்கும் படம் என்பதால் ரசிகர்கள் மத்தியில் இப்படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. கடைசியாக காப்பான் படத்தில் இருவரும் சேர்ந்து நடித்திருந்தனர். சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் ப்ரோடக்ஷன் பணிகளும் முடிவடைந்தது.

ஆர்யா தற்போது ரஞ்சித் இயக்கத்தில் சல்பேட்டா படத்தில் நடித்து வருகிறார். இதன் இறுதி கட்ட படப்பிடிப்பு நடந்து வருகிறது. வடசென்னை பாக்ஸிங்கை மையப்படுத்தி இந்த படம் உருவாகிறது. சந்தோஷ் நாராயணன் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். விஷால் கைவசம் துப்பறிவாளன் 2 படம் உள்ளது. நடிகர் பிரசன்னா விஷாலுடன் சேர்ந்து முக்கிய ரோலில் நடிக்கிறார்.