புரட்சி தளபதி விஷாலின் தந்தையும், தயாரிப்பாளருமான ஜி.கே. ரெட்டிக்கு அண்மையில் தான் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது. அவரை மருத்துவமனையில் அனுமதிக்காமல் வீட்டிலேயே வைத்து நன்றாக பார்த்துக் கொண்டார் விஷால். தந்தையை பார்த்துக் கொண்ட போது விஷாலுக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது. இருவருமே வீட்டில் இருந்தபடியே ஆயுர்வேத மருந்துகளை சாப்பிட்டு பூரண குணமடைந்தார்கள். 

82 வயதில் ஜி.கே. ரெட்டி கொரோனா வைரஸை எதிர்த்து போராடி வென்றதை பார்த்தவர்களால் வியக்காமல் இருக்க முடியவில்லை. கொரோனாவில் இருந்து குணமடைந்த கையோடு பழையபடி ஒர்க்அவுட் செய்யத் துவங்கிவிட்டார் ஜி.கே. ரெட்டி. அவர் ஒர்க்அவுட் செய்தபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள், வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகியுள்ளது. 

அந்த புகைப்படங்கள், வீடியோவை விஷால் ரசிகர்கள் மட்டும் அல்லாமல் பலரும் அதிக அளவில் ஷேர் செய்து கொண்டிருக்கிறார்கள்.  ஜி.கே. ரெட்டியின் புகைப்படங்களை பார்த்தவர்கள் அப்பாவே இந்த வயதில் இப்படி இருக்கிறார் என்றால் விஷாலை சொல்லவா வேண்டும். வயதாகிவிட்டதே என்று ஓய்ந்து போகாமல் இப்படி பாசிட்டிவாக இருக்கும் விஷாலின் அப்பாவை பார்க்கும்போது நமக்கு புது நம்பிக்கை பிறக்கிறது என்று பலரும் தெரிவித்துள்ளனர்.

முன்னதாக விஷால் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்த கையோடு தன் நண்பர் ஆர்யாவுடன் சேர்ந்து ஜிம்மில் ஒர்க்அவுட் செய்தபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகின. அந்த புகைப்படங்களை பார்த்தவர்கள் இப்போ தான் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு சரியாகியிருக்கிறது, அதற்குள் ஒர்க்அவுட் எல்லாம் தேவை தானா என்று அக்கறையுடன் கேட்டார்கள். 

விஷால் கைவசம் தயார் நிலையில் உள்ள படம் சக்ரா. எம்.எஸ்.ஆனந்தன் இயக்கத்தில் உருவான இப்படத்தில் ஷ்ரத்தா ஸ்ரீநாத் காவல்துறை அதிகாரியாக நடிக்கிறார். முக்கிய வேடத்தில் ரெஜினா கசண்ட்ரே நடிக்கிறார். விஷால் பிலிம் பேக்டரி இந்த படத்தை தயாரிக்கிறது. தற்போது சக்ரா படத்தின் ட்ரைலர் வெளியாகி ட்ரெண்டாகி வருகிறது. ட்ரைலர் காட்சிகளை பார்க்கையில் டிஜிட்டல் உலகில் நடக்கும் திருட்டு குறித்த கதை போல் தெரிகிறது. கண்ணுக்கு தெரியாத வைரஸ் மட்டுமில்ல, வைர் லெஸ்ஸும் ஆபத்துதான் எனும் வசனம் அம்சமாக உள்ளது. 

ரோபோ ஷங்கர், கே.ஆர்.விஜயா, ஸ்ருஷ்டி டாங்கே, மனோபாலா, விஜய்பாபு மற்றும் பலர் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். பாலசுப்பிரமணியம் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு சமீர் முகமது படத்தொகுப்பு செய்கிறார். ஆன்லைன் வர்த்தக மோசடிகள் பற்றிய பின்னணியுள்ள கதையாக உருவாகி வருகிறது இந்த படம். படத்தின் ஷூட்டிங் முழுவதும் சென்னை மற்றும் கோயம்புத்தூர் பகுதிகளில் நடத்தப்பட்டது. 

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட என நான்கு மொழிகளில் இப்படம் வெளியாகவுள்ளது. விரைவில் இதன் ரிலீஸ் தேதி தெரியவரும். இதனால் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர் விஷால் ரசிகர்கள். இந்த படத்தை தொடர்ந்து துப்பறிவாளன் 2 படத்தை இயக்கவுள்ளார் விஷால். கொரோனா காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டு உள்ளது. விரைவில் திரையரங்குகள் திறந்தவுடன் சக்ரா படத்தின் ரிலீஸ் தேதியை எதிர்பார்க்கலாம்.