தமிழ் திரையுலகின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவரான நடிகர் விஷால், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் தளபதி 67 திரைப்படத்தில் தளபதி விஜய்க்கு வில்லனாக நடிக்கவுள்ளார் என சமீப காலமாக தகவல்கள் வெளியாகின. முன்னதாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் சில வாரங்களுக்கு முன் விஷாலை நேரில் சந்தித்ததால் மிகுந்த எதிர்பார்ப்போடு ரசிகர்கள் காத்திருந்த நிலையில், சமீபத்தில் தான் தளபதி 67 படத்தில் நடிக்கவில்லை எனவும் மாறாக தளபதி விஜயை இயக்க விரும்புவதாகவும் விஷால் தெரிவித்தார்.

தற்போது இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகும் மார்க் ஆண்டனி திரைப்படத்தில் நடித்து வரும் விஷால், இதனையடுத்து இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் தயாரிப்பில் உருவாகும் ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார். மேலும் இயக்குனராகவும் துப்பறிவாளன் 2 படத்தை விரைவில் இயக்கி நடிக்கவுள்ளார்.  இதனிடையே மீண்டும் காவல்துறை அதிகாரியாக விஷால் நடித்துள்ள திரைப்படம் லத்தி. 

இயக்குனர் வினோத் குமார் இயக்கத்தில் விஷாலுடன் இணைந்து சுனைனா கதாநாயகியாக நடிக்க, இளையதிலகம் பிரபு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். ராணா ப்ரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ள, லத்தி திரைப்படத்திற்கு பாலசுப்பிரமணியம் ஒளிப்பதிவில் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் கிறிஸ்துமஸ் வெளியீடாக வருகிற டிசம்பர் 22ஆம் தேதி லத்தி திரைப்படம் ரிலீஸாகவுள்ளது.

இந்நிலையில் தற்போது பத்திரிகையாளர்களை சந்தித்த நடிகர் விஷால் லத்தி திரைப்படத்தின் வசூலில் இருந்து ஒரு பகுதியை அதாவது ஒரு டிக்கெட்டுக்கு ஒரு ரூபாய் என்ற கணக்கில் கிடைக்கும் தொகையை விவசாயிகளின் நலனுக்காக நிதி உதவியாக வழங்க திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். 

மேலும் விவசாயிகள் படும் துயரங்கள் குறித்து பேசிய விஷால், “முன்னதாக சண்டைக்கோழி 2 திரைப்படத்தின் சமயத்திலும் விவசாயிகளுக்கு நிதி உதவி வழங்கப்பட்டது. அதுபோலவே லத்தி பட வசூலிலிருந்து சிறு பகுதி விவசாயிகளின் நலனுக்காக நிதி உதவியாக வழங்குகிறோம்” என அறிவித்துள்ளார். விஷாலின் இந்த அறிவிப்புக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.