கடந்த 2012-ம் ஆண்டு பிரபு சாலமன் இயக்கத்தில் வெளியான கும்கி திரைப்படம் மூலம் நடிகராக அறிமுகமானவர் விக்ரம் பிரபு. நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேரன், நடிகர் பிரபுவின் மகன் என்ற அடையாளம் இருந்தாலும், தனது நடிப்பால் திரை ரசிகர்களை ஈர்த்துள்ளார். இவன் வேற மாதிரி, அரிமா நம்பி, சிகரம் தொடு, சத்ரியன் ஆகிய படங்களில் நடித்தார். இந்த ஆண்டு விக்ரம் பிரபு நடிப்பில் வெளியாகி சீராக ஓடிய திரைப்படம் வானம் கொட்டட்டும். 

இப்படத்தை தொடர்ந்து அவரது நடிப்பில் அசுரகுரு என்ற திரைப்படம் வெளியானது. இப்படத்தை அறிமுக இயக்குனர் ராஜ்தீப் இயக்கியிருந்தார். படத்தில் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக மஹிமா நடித்திருந்தார். மேலும் யோகி பாபு, ஜகன், முனீஸ்காந்த் ஆகியோர் முக்கிய பாத்திரத்தில் நடித்திருந்தனர். படத்திற்கு படம் வித்தியாசம் காட்டும் விக்ரம் பிரபுவின் அடுத்த படத்தின் அறிவிப்பு தற்போது வெளியானது. 

மகாலட்சுமி ஆர்ட்ஸ் குமாரசுவாமி பத்திக்கொண்டா பிரமாண்டமாக தயாரிக்கும் படம் பாயும் ஒளி நீ எனக்கு படத்தில் விக்ரம் பிரபு நடிக்கிறார். விக்ரம் பிரபு ஜோடியாக வாணி போஜன் நடிக்கிறார். இப்படத்தை அறிமுக இயக்குனர் கார்த்திக் சௌத்ரி  இயக்குகிறார்.வில்லனாக கன்னட  நடிகர் தனன்ஜெயா  நடிக்கிறார். பரியேறும் பெருமாள் ஒளிப்பதிவாளர் ஸ்ரீதர் ஒளிப்பதிவும், மணிஷர்மாவின் மகன் மஹதி ஸ்வர சாகர் முதன் முறையாக தமிழில் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். 

தேசிய விருது பெற்ற கோத்தகிரி வெங்கடேஸ்வர ராவ் படத்தொகுப்பை மேற்கொள்கிறார். இந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் படப்பிடிப்பு தொடங்குகிறது என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இதனால் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர் ரசிகர்கள். நடிகை வாணி போஜனுக்கு இந்த ஆண்டு ஸ்பெஷல் என்றே கூறலாம். சமீபத்தில் வெளியான ஓ மை கடவுளே திரைப்படம் அவரது நடிப்பிற்கு சிறந்த அங்கீகாரத்தை பெற்று தந்தது. அதனைத்தொடர்ந்து லாக்கப் திரைப்படத்தில் நடித்திருந்தார். டிஸ்னி ஹாட்ஸ்டார் வழங்கும் ட்ரிபிள்ஸ் வெப் சீரிஸில் ஜெய்யுடன் இணைந்து நடித்துள்ளார். 

விக்ரம் பிரபு கைவசம் பொன்னியின் செல்வன் திரைப்படம் உள்ளது. கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவல் ஐந்து மொழிகளில் உருவாக்கப்பட்டு படமாகிறது இதை மணிரத்னம் இயக்கி வருகிறார். கார்த்தி, ஜெயம்ரவி, விக்ரம், ஐஸ்வர்யாராய் ஆகியோர் நடிக்க உள்ளனர் என்ற தகவல் தெரியவந்தது. இவர்களுடன் ஜெயராம் , லால், ஐஸ்வர்யா லட்சுமி ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில்  நடிக்கவுள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க உள்ள இந்த படத்திற்கு ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்கிறார். 

பொன்னியின் செல்வன் படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு இலங்கையில் நடக்கவுள்ளதாக செய்திகள் வருவதை காண முடிகிறது. எதுவாக இருந்தாலும், அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்தால் மட்டுமே உறுதியாக கூற முடியும். கொரோனா காலகட்டத்தில் இந்த படத்தின் ஷூட்டிங் நடத்துவது மிகப்பெரிய சவாலாக இருக்கும் என மணிரத்னம் ஒரு ஆன்லைன் பேட்டியில் முன்பு கூறி இருந்தார். காரணம் இது வரலாற்று படம் என்பதால் அதிக அளவு துணை நடிகர்கள் தேவைப்படுவார்கள். ஒவ்வொரு காட்சியிலும் சில நூறு பேர் இருப்பது போலத்தான் இருக்கும். அதனால் இனி ஷூட்டிங் நடத்துவது பெரிய சவால் என மணிரத்னம் தெரிவித்து இருந்தார்.