கொரோனாவின் இரண்டாம் அலையில் மொத்தம் உலகமும் திக்குமுக்காடி உள்ள இந்த சூழ்நிலையில்  கொரோனாவின் 3-ம் அலையிலிருந்து தங்களைத் தற்காத்துக்கொள்ள தடுப்பூசி மட்டுமே ஒரே வழி என்று அனைத்து நாடுகளும் மக்களுக்கு அறிவுறுத்தி வருகிறது. இந்தியாவில் அரசாங்கமும் மருத்துவர்களும்  மக்களை தடுப்பூசி போட்டுக் கொள்ளும்படி எவ்வளவோ வற்புறுத்தியும் இன்னும் சில மக்களுக்கு தடுப்பூசி சார்ந்த சில தயக்கங்களும் குழப்பங்களும் இருந்து வருகின்றன. 

இந்தநிலையில்  தமிழகத்தில் பல பிரபலங்களும் தடுப்பூசி எடுத்துக்கொண்டு அந்த புகைப்படங்களை தங்களது சமூக வலைதளப் பக்கத்தின் மூலம் வெளியிட்டு மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் விஜய் டிவியின் பிரபல தொகுப்பாளரான DD-யும் தற்போது தடுப்பூசி எடுத்துக் கொண்டுள்ளார். 

தடுப்பூசி எடுத்துக் கொண்ட DD இன்ஸ்டாகிராமில்,  “ரொம்ப  யோசிச்சேன் பயந்தேன் ஏனென்றால் வேறு சில  மருந்துகளும் எடுக்கிறேன், எனவே மருத்துவரிடம்  ஆலோசனை செய்தேன் அதில் மருத்துவர் மற்ற மருந்துகளை தற்போது நிறுத்திவிட்டு தடுப்பூசி எடுத்துக் கொள்ளும்படி அறிவுறுத்தி, தடுப்பூசி மட்டுமே இப்போது நம்மை நோயிலிருந்து காப்பாற்ற ஒரே வழி என்றும் அவர் கூறினார் எனவே  நம்மையும்  நம் குழந்தைகளையும் கொரோனாவின் மூன்றாம் அலையில் இருந்து தற்காத்துக்கொள்ள தடுப்பூசி எடுத்துக் கொள்ள வேண்டும்”  என தெரிவித்துள்ள DD, மேலும் தடுப்பூசி குறித்த உங்களுடைய சந்தேகங்களுக்கு உங்களுடைய மருத்துவரை அணுகும்படியும்  அவர் ஆலோசனைப்படி முடிவு செய்யும்படியும் தெரிவித்துள்ளார். 

தடுப்பூசி போட்டுக் கொண்டதை பதிவுசெய்த DD அந்த புகைப்படத்தில் இருக்கும் செவிலியரான காயத்ரியை  மேற்கோள்காட்டி “வலிக்காம சிரிச்சுக்கிட்டே போட்டுவிட்டாங்க”  என குறிப்பிட்டுள்ளார். நாமும் அரசாங்கம் மற்றும் மருத்துவர்களின் ஆலோசனைப்படி தடுப்பூசி எடுத்துக் கொண்டு நோயிலிருந்து தற்காத்துக் கொள்ள முன்வர வேண்டும்.