லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் மாஸ்டர். கொரோனா அச்சுறுத்தலால் சுமார் 8 மாதங்களாக வெளியாகாமல் உள்ளது. சேவியர் பிரிட்டோ தயாரித்துள்ள இப்படத்தின் ஒட்டுமொத்த வெளியீட்டு உரிமையும் லலித் குமாரிடம் உள்ளது. மக்கள் செல்வன் விஜய்சேதுபதி, மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, ஷாந்தனு, அர்ஜுன் தாஸ், தீனா, சேத்தன், கௌரி கிஷன் ஆகியோர் முக்கிய ரோலில் நடித்துள்ளனர். அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். 

சில தினங்களுக்கு முன்பு, மாஸ்டர் படத்தின் சென்சார் விவரம் தெரியவந்தது. மாஸ்டர் படத்துக்கு U/A சான்றிதழ் என்பதைப் படக்குழு அறிவித்திருந்தது. மாஸ்டர் திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதியை இன்னும் உறுதிப்படுத்தாமல் உள்ளது. விரைவில் என்று மட்டுமே படக்குழுவினர் ட்வீட் செய்து வருகிறார்கள். இதனால் வெளியீட்டில் மாற்றம் இருக்குமோ என்ற பரபரப்பு நிலவுகிறது. 

ஏனென்றால், திரையரங்குகளில் இன்னும் 50% இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால் படத்தின் மீதான முதலீட்டை எடுத்துவிட முடியுமா என்ற தயக்கத்தில் இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. எந்த தேதியாக இருந்தாலும், தணிக்கைப் பணிகள் முடிவடைந்துவிட்டதால் வெளியீட்டுப் பணிகளை முடித்து வைத்துவிடலாம் என்று திட்டமிட்டுள்ளது படக்குழு. இதற்காக விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்கு உரிமையாளர்கள் ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது படக்குழு.

இந்நிலையில் மாஸ்டர் படத்தின் இந்தி டைட்டில் பற்றியும், இந்தி விநியோகம் பற்றிய தகவலையும் வெளியிட்டுள்ளது படக்குழு. விஜய் தி மாஸ்டர் என இந்தியில் தலைப்பிடப்பட்டுள்ளது. XB பிலிம்ஸுடன் இணைந்து B4U மோஷன் பிக்ஸ் என்ற நிறுவனம் இந்தியில் வெளியிடுகிறது. 

இந்த படத்திற்கு பிறகு சன் பிக்சரஸ் தயாரிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கவிருக்கும் தளபதி 65 படத்தில் நடிக்கவுள்ளார் விஜய். அனிருத் இந்த படத்திற்கு இசையமைக்கவுள்ளார். இதன் அறிவிப்பும் வீடியோ வாயிலாக சமீபத்தில் வெளியானது.