அரசியல் சார்ந்த கதைகளுக்கு தமிழ் சினிமாவில் எப்போதுமே ஒரு மவுசு உண்டு. அதற்கு உதாரணமாக அமைதிப்படை தொடங்கி பல படங்களைக் கூறலாம். அந்த வரிசையில் மக்கள் மனதில் இடம்பெற தயாராகி வரும் படம் துக்ளக் தர்பார். டெல்லி பிரசாத் தீனதயாளன் இயக்கத்தில் மக்கள் செல்வன் விஜய்சேதுபதி நடிப்பில் உருவாகி வருகிறது இந்த துக்ளக் தர்பார்.

லலித்குமாரின் 7 ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் மற்றும் வயகாம் 18 ஸ்டுடியோஸ் இணைந்து இந்த படத்தை தயாரிக்கிறது. விஜய் சேதுபதி ஜோடியாக அதிதிராவ் ஹய்தாரி நடிக்கிறார். இயக்குனரும் நடிகருமான பார்த்திபன் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். நானும் ரவுடி தான் படத்திற்கு பிறகு விஜய்சேதுபதியுடன் இரண்டாவது முறையாக இணைகிறார் பார்த்திபன். 

இப்படத்தின் தொலைக்காட்சி உரிமையை சன் டிவி வாங்கியது. ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்து விழிகளுக்கு விருந்தளிக்கவுள்ளார். நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் புகழ் இயக்குனர் பாலாஜி தரணீதரன் திரைக்கதை எழுதுகிறார். படப்பிடிப்பு குறித்த அப்டேட்டை சமீபத்தில் 7 ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் வழங்கியது. 35 நாட்கள் கொண்ட படப்பிடிப்பு நிறைவடைந்ததாகவும், மீதம் உள்ள 40 நாட்கள் கொண்ட படப்பிடிப்பு லாக்டவுன் முடிந்து இயல்பு நிலை திரும்பியவுடன் துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

தற்போது இப்படத்தின் முதல் லுக் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. போஸ்டரில் விஜய்சேதுபதியின் தலையில் குருவி சுத்துவது போல் உள்ளது. இரண்டு விஜய்சேதுபதி கொண்ட இந்த போஸ்டரை ட்ரெண்ட் செய்து வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் மாஸ்டர் படத்தின் அப்டேட்டுகளுக்கு பிறகு இந்த போஸ்டர் அப்டேட் வெளியானதால் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர் மக்கள் செல்வன் ரசிகர்கள். 

சீனு ராமசாமியின் மாமனிதன், மணிகண்டன் இயக்கிய கடைசி விவசாயி, எஸ்.பி. ஜனநாதனின் லாபம், விருமாண்டியின் க.பெ. ரணசிங்கம், வெங்கட கிருஷ்ணா ரோகந்தின் யாதும் ஊரே யாவரும் கேளிர், அல்லு அர்ஜூனுடன் புஷ்பா, அமீர்கானுடன் லால் சிங் சத்தா போன்ற படங்கள் விஜய் சேதுபதி கைவசம் உள்ளது.

லாக்டவுன் முடிந்தவுடன் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகவிருக்கும் காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தின் ஷூட்டிங்கில் கலந்துகொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.